பவுலடியார் பாவியம்
பவுலடியார் பாவியம் (2003) இயேசு கிறிஸ்துவின் அடியவர்களில் ஒருவரான பவுல் என்பவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இதனை இயற்றியவர், ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல்.
பிரசுரம், வெளியீடு
கிறித்தவக் காப்பியங்களில் சில இயேசு கிறிஸ்துவைத் தலைமை மாந்தராகக் கொண்டும், சில காப்பியங்கள் அன்னை மரியாளைத் தலைமை மாந்தராகக் கொண்டும், சில காப்பியங்கள் இறை அடியவர்களைத் தலைமை மாந்தராகக் கொண்டும் இயற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் விவிலியத்தில் இடம் பெற்றுள்ள இறை அடியவரான பவுல் என்னும் அப்போஸ்தலரைத் தலைமை மாந்தராகக் கொண்டு படைக்கப்பட்ட காப்பியம் பவுலடியார் பாவியம். இந்நூல் 2003 -ஆம் ஆண்டு அச்சில் வெளியானது. இதனை இயற்றியவர், ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல்.
நூல் அமைப்பு
பவுலடியார் பாவியம் நான்கு காண்டங்களைக் கொண்டுள்ளது. அவை
- இளமைக் காண்டம்
- மனமாற்றக் காண்டம்
- பணிபுரி காண்டம்
- வெற்றிக் காண்டம்
- என்பனவாகும். இந்நான்கு காண்டங்களில் 57 படலங்கள் உள்ளன. இக்காப்பியத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 2697. ஒவ்வொரு படலத்தின் ஆரம்பப் பகுதியிலும், படலத்தில் உள்ள செய்திகள் உரைநடையில் கொடுக்கப்பட்டுள்ளன. பாடல்களிலுள்ள கடினமான சொற்களுக்குப் பாடலின் அடியில் பொருள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
பவுலடியார் பாவியம், சவுல் என்பவர் பவுலாக மாறிய விதத்தினையும், பவுலின் நற்செய்தி ஊழியத்தினையும், அதில் அவர் பட்ட பாடுகளையும், அவருடைய கடிதங்கள் குறித்தும் விரிவாக விளக்குகிறது. விவிலியத்திலுள்ள பவுலடியார் தொடர்பான நிகழ்வுகளுடன், அக்கால வரலாற்று நிகழ்வுகளும், வரலாற்றுப் பின்னணியும் கொண்டதாக இக்காப்பியம் அமைந்துள்ளது.
பாயிரம்
நூலின் தொடக்கமான, பாயிரத்தில் இறைவேண்டல், அவையடக்கம், தொண்டரின் தோற்றப்பொலிவு, தொண்டர் அருள்வாக்குப் பயன், நம் கடன் என்னும் தலைப்புகளில் பன்னிரெண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இளமைக் காண்டம்
பவுலடியார் பாவியத்தின் முதல் காண்டம் இளமைக் காண்டம். இக்காண்டத்தில் ஐந்து படலங்கள் அமைந்துள்ளன. அவை
- தருசுப் படலம்
- நாடுகாண் படலம்
- நகரப் படலம்
- அறிஞர் அடிசேர் படலம்
- குருதிச் சான்றோன் படலம்.
இக்காண்டத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 346.
மனமாற்றக் காண்டம்
இரண்டாவது காண்டமான மனமாற்றக் காண்டமானது மூன்று படலங்களைக் கொண்டுள்ளது. அவை,
- மலர் படலம்
- காட்சிப் படலம்
- புதுநெறியேற்ற படலம்
இக்காண்டத்தில் 345 பாடல்கள் உள்ளன.
பணிபுரி காண்டம்
பணிபுரி காண்டத்தில் 37 படலங்கள் உள்ளன. அவை
- அருளடியார் ஒருங்குணர்வுப் படலம்
- சாலமி சென்றடைந்த படலம்
- மந்திரவாதி பார்வையிழந்த படலம்
- பிசிதியன் அந்தியோகு சென்றடைந்த படலம்
- கல்லெறியுண்ட படலம்
- நற்செய்தி நகர் மீண்ட படலம்
- பேரவைப் படலம்
- அவைதேற்றுப் படலம்
- தூய ஆவியானவர்க்கடங்கிய படலம்
- சிறைகண்ட படலம்
- தெசலோனிக்கே சென்றடைந்த படலம்
- அத்தனே நகரடைந்த படலம்
- அறியப்படாத தேவனை அறிவித்த படலம்
- கொரிந்தியருக்கு நற்செய்தி நவின்ற படலம்
- எபேசு சென்றடைந்த படலம்
- மாயவித்தைக்காரர் மனம் மாறிய படலம்
- கொரிந்தியருக்கு நல்லாறு காட்டிய படலம்
- தெமேத்திரியு தொல்லை தந்த படலம்
- அறக்கொடை ஈட்டிய படலம்
- ஐத்திகு உயிர்த்த படலம்
- எபேசு மூப்பரைச் சந்தித்த படலம்
- தீரு நகரத்தார்க்கு விடையளித்த படலம்
- அகபு இறைவாக்கு கூறிய படலம்
- எருசலேம் மூப்பரைச் சந்தித்த படலம்
- ஆசிய யூதர் கலகம் விளைத்த படலம்
- யூதர்முன் சான்று சொன்ன படலம்
- அவையோர்முன் சான்று சொன்ன படலம்
- அடிகளாரைச் செசரியாவிற்கு அனுப்பிய படலம்
- நாட்டுத் தலைவன் முன் சான்று சொன்ன படலம்
- வேந்தனுக்கு அபயமிட்ட படலம்
- மன்னன் முன் சான்று சொன்ன படலம்
- செந்துறை சேர்ந்த படலம்
- கப்பல் சேதமுற்ற படலம்
- மெலித்தாப் படலம்
- கடற்செலவேற்ற படலம்
- அன்பர் எதிர்கொண்ட படலம்
- படைத்தலைவனிடம் ஒப்படைத்த படலம்
பணிபுரி காண்டத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 1586.
வெற்றிக் காண்டம்
நான்காவது காண்டமான வெற்றிக் காண்டத்தில், 12 படலங்கள் அமைந்துள்ளன. அவை,
- யூதர்க்கு உண்மை விளக்கிய படலம்
- குடிக்கூலி இல்லில் நற்செய்தி நவின்ற படலம்
- ஒநேசிமுவை நெறிப்படுத்திய படலம்
- ஒநேசிமுவை ஊருக்கனுப்பிய படலம்
- ஊர்களுக்குக் கடிதம் அனுப்பிய படலம்
- பிலிப்பியருக்கு மடல் அனுப்பிய படலம்
- விடுதலையடைந்த படலம்
- பிலிப்பி நகர் சென்றடைந்த படலம்
- சபைகளைக் கண்டூக்கிய படலம்
- நீரோ தீங்கிழைத்த படலம்
- கடுஞ்சிறையுற்ற படலம்
- வெற்றிப் படலம்.
இக்காண்டத்தில் 420 பாடல்கள் உள்ளன.
பாடல்கள் நடை
கதிரவனின் வருகையும், சிறப்பும்
மலர்தலை யுலகில் மண்டும் மாயிருள் நீக்கத் தன்னின்
பலகதிர் பரப்பி யாண்டும் பாருளோர் வியந்து போற்ற
அலகிலா வெளியில் தோன்றும் அஞ்சுடர்ப் பரிதி யானும்
உலகவர் ஒளியின் கற்றை உயர்மகன் காண வந்தான்
வறுமையால் வாடி நிற்கும் உளத்தூயர் வாழ்வை எண்ணி
நறுமையாங் கொள்கை கொண்டு நகரெரு சாலையை நண்ண
சிறுமைதீர் உதவு ஈகைச் செல்வரின் சார்பு நல்லார்
உறுமுகங் காண வேண்டி உதித்தனன் எல்லோன் வானில்
ஜெபத்தின் சிறப்பு
இறையருள் வேட்டல் இணையற்ற தாகும்
குறைவறப் போக்கும் கடவுளின்நல் அன்பு
நிறைவற அருளும் நினைத்தாங்கு கூட்டும்
சிறைப்பகை வீழ்த்தி நிறைவேற்றி யருளும்.
உடல்தனை வாட்டும் உறுநோய் நீக்க
மடமற உள்ளம் மாண்புற் றார்க்க
திடமுறு வாழ்வு தேசுற்று ஒங்க
உடற்கரும் உயிர்ப்பாம் உயிர்க்கோர் எஃகு.
இறைவனைப் போற்றுதல்
அன்பே அருளே அற்புதா போற்றி
ஆதி முதலே அந்தமே போற்றி
இன்ப இறையே ஈகாய் போற்றி
ஈகைப் பொருளே இயேசுவே போற்றி
உண்மைப் பொருளே உருவே போற்றி
ஊன்று கோலே உறவே போற்றி
என்று முளாயே எழிலே போற்றி
ஏகனே ஏற்பனே ஏற்றமே போற்றி
ஐயனே அறிவே அறமே போற்றி
ஒன்றி யுறைந்த ஒளியே போற்றி
ஒங்க லுரையை உதவினாய் போற்றி
ஒளவிய மில்லா அண்டனே போற்றி
இயேசு நாதனின் இணையடி போற்றி.
மதிப்பீடு
அப்போஸ்தலர் பவுல் பற்றி வெளிவந்துள்ள முதல் கிறிSதவ இலக்கியம் பவுலடியார் காவியம். கிறிஸ்தவ அடியவர்களை முதன்மைப் பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட காப்பிய நூல்களில் முன்னோடிக் காப்பியம். இந்நூல் பற்றி, முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், தனது கிறித்தவக் காப்பியங்கள் நூலில், "பவுலடியாரின் வாழ்வு காப்பிய வடிவில் பல்வகை நயங்களுடன் படைக்கப்பட்டிருப்பது கிறித்தவ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல் என மதிக்கத்தக்கது ஆகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
உசாத்துணை
- ம.யோவேல், பவுலடியார் பாவியம், மணி பதிப்பகம்,எண் 7. எம்.எல். பள்ளிநகர், பாளையங்கோட்டை-2. முதல் பதிப்பு: 2003
- கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியிடு, முதல் பதிப்பு, 2013.
- கல்லிடைக்குறிச்சி J ஜான் ஞானராஜ் கட்டுரை, Christian Historical Society
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Nov-2023, 10:34:34 IST