under review

ஈகிள் பிரஸ்

From Tamil Wiki
Revision as of 03:44, 27 July 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஈகிள் பிரஸ் (1954) தமிழ்நாட்டின் அச்சக நிறுவனங்களுள் ஒன்று. புகழ்பெற்ற 'ஈகிள் டைரி'க்களை இந்நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டது.

தோற்றம்

ஈகிள் பிரஸ் நிறுவனம், 1954-ல், சென்னையில், எம்.ஜே. பிரதாப் சிங்கால் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு

அச்சகத் தொழிலில் ஆர்வமும் அனுபவமும் கொண்டிருந்த எம்.ஜே. பிரதாப் சிங், தொடக்க காலத்தில், சென்னையில், சிறிய அளவில், காலால் இயக்கும் அச்சியந்திரம் கொண்ட அச்சகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். ஹோட்டல்களுக்கான பில்களை, ரசீதுகளை அதன் மூலம் அச்சிட்டார்.

ஒரு சமயம் தன் நண்பர் ஒருவருக்குப் பரிசளிப்பதற்காகத் தகுந்த பரிசுப்பொருளை பிரதாப் சிங் தேடினார். அப்பரிசுப் பொருளைத் தானே தனது அச்சகத்தில் உருவாக்கி அளித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, தாள்கள் பலவற்றைச் சேகரித்து, நறுக்கி, ஒருங்கிணைத்து, புத்தக வடிவில் தயாரித்து நண்பருக்குப் பரிசாக அளித்தார். அது நண்பர் உள்படப் பலரது பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்றது. அதுவே எம்.ஜே. பிரதாப் சிங் உருவாக்கிய முதல் நாட்குறிப்பு.

அதனை விரிவாக்கி அனைவருக்கும் பயன்தரகூடியதாய் அச்சிட்டு வெளியிட்டால் என்ன என்ற எண்ணத்தில் 1954-ல், 'ஈகிள் பிரஸ்' என்ற பெயரில் சற்றே பெரிய அச்சக நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையில் அச்சிடும் நிறுவனமாக ஈகிள் பிரஸ் செயல்பட்டது. லேபிள்கள், போஸ்டர்கள், வாழ்த்து அட்டைகள், பாக்கெட் அளவு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விளம்பரப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டது. அதற்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைக்கவே, பிரதாப் சிங் தனது பணிகளை விரிவு படுத்தினார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், பிரதாப் சிங் அந்த அச்சகத்தின் மூலம் 'ஈகிள் டைரி'களைத் தயாரிக்கத் தொடங்கினார். ஈகிள் பிரஸ் தயாரித்த முதல் ஈகிள் டைரி, 'ஈகிள் டூரிஸ்ட் டைரி' என்று அழைக்கப்பட்டது. பின் 1975 வரை 'ஈகிள் டெஸ்க் டைரி' என்று அழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகிள் பாக்கெட் டைரி மற்றும் ஆஃபீஸ் டைரிகள் வெளிவந்தன. ஒலிம்பிக் டைரி அறிமுகப்படுத்தப்பட்டு அதிகமாக விற்பனையானது. இந்தியாவின் புகழ் பெற்ற டைரி வெளியீட்டு நிறுவனமாக 'ஈகிள் டைரி' நிறுவனம் வளர்ந்தது. டைரிகளை அநேக மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார், பிரதாப் சிங்.

வெளியீடுகள்

ஈகிள் பிரஸ் கீழ்கண்டவற்றை வெளியிட்டது.

  • லக்ஸ் நோட்டுப் புத்தகம்
  • டீலக்ஸ் நோட்டுப் புத்தகம்
  • பாக்கெட் டைரி
  • சுற்றுலா டைரி
  • சுற்றுலா டைரி (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)
  • ஒலிம்பிக் டைரி
  • அட்டவணை டைரி
  • நல்லெண்ண நாட்குறிப்பு
  • தூதர் அதிகாரக் குறிப்பேடு
  • கேன்வாஸ் மேசை நாட்குறிப்பு
  • வணிக நாட்குறிப்பு
  • நிர்வாக நாட்குறிப்பு
  • பாக்கெட் மெமோ நோட்புக்
  • பாக்கெட் மெமோ பேட்
  • அரச நாட்குறிப்பு
  • அட்டவணை டைரி
  • சுற்றுலா நாட்குறிப்பு

மதிப்பீடு

'ஈகிள் பிரஸ்', குறிப்பேடுகள் மற்றும் நாட்குறிப்புகளை உருவாக்கி அளிக்கும் 70 ஆண்டுகளைக் கடந்த நிறுவனம். இந்தியாவில் மிக உயர்தரமான டைரிகளையும் நோட்டுப் புத்தகங்களையும் தயாரித்தளிக்கும் முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2026, 07:17:03 IST