under review

வாடிவாசல்

From Tamil Wiki
Revision as of 03:43, 15 May 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors; Corrected year suffix text; ; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வாடிவாசல்
ஜல்லிக்கட்டு, சி.சு.செல்லப்பா எடுத்த படம்
ஜல்லிக்கட்டு, சி.சு.செல்லப்பா எடுத்த படம்
வாடிவாசல், எழுத்து இதழ் அறிவிப்பு

வாடிவாசல் (1959 ) சி.சு.செல்லப்பா எழுதிய நாவல். தமிழகத்தின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்னும் காளையை அடக்கும் விளையாட்டை மையமாகக்கொண்டு எழுதப்பட்டது.

எழுத்து, வெளியீடு

சி.சு. செல்லப்பா இந்நாவலை 1959ல் எழுதினார். அவர் நடத்திவந்த எழுத்து பிரசுரம் வழியாக வெளியிட்டார். அதன் அட்டைப்படமும் அவரே எடுத்தது. 70 பக்கமுள்ள இந்நாவல் எழுத்து இதழின் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவே அளிக்கப்பட்டது.

பின்னணி

சி.சு.செல்லப்பா வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர். இளமையில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பார்த்திருந்தார். 1946-ல் செல்லப்பா இதழியல் வேலையில் இருந்து விலகி வத்தலக்குண்டில் குடியிருந்த போது ஒரு புகைப்படக்கருவியை வாங்கினார். அதைக்கொண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை படம் எடுத்தார். அந்த ஊக்கத்தால் இந்நாவலை எழுதினார். ஜல்லிக்கட்டைக் களமாகக் கொண்டு இந்த நாவலைப் படைக்க, ஹெமிங்வே-யின் ஸ்பானிய காளைச் சண்டை பற்றிய கட்டுரைகள் தன்னை ஊக்குவித்ததாக செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார்.

வாடி என்பது மாடுகளை அடைத்திருக்கும் இடம். வாடிவாசல் என்பது மாடுகள் வெளிவரும் பகுதி.

கதைச்சுருக்கம்

இந்நாவல் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, ஜமீன்தார்கள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், நிகழ்வதாக எழுதப்பட்டது. செல்லத்தாயிக் கோயில் ஜல்லிக்கட்டிற்கு வந்திருக்கும் பிச்சியும் மருதனும் அங்கே ஒரு கிழவரிடம் பேசுகிறார்கள். அவர் அந்த ஜல்லிக்கட்டு பற்றி சொல்கிறார். அவர்களைப்பற்றி விசாரிக்கிறார். பிச்சியின் தந்தையை காரி என்னும் காளை முன்பு ஜல்லிக்கட்டில் கொன்றுவிட்டது. அதற்கு பழியாக அக்காளையை அடக்கும்பொருட்டு பிச்சி ஜல்லிக்கட்டுக்கு வருகிறான். எவராலும் அடக்கமுடியாத காளையாகிய காரியை அவன் அடக்குகிறான். சீற்றமடைந்த அந்த காளையின் உரிமையாளரான ஜமீன்தார் அதை சுட்டுக் கொன்றுவிடுகிறார். 'ரோஷம் ஆகாது தம்பி, மாட்டுக்கானாலும் மனுஷனுக்கானாலும்' என எவரோ ஒரு பெரியவர் சொல்லும் வரியுடன் நாவல் முடிவடைகிறது.

இலக்கிய இடம்

தமிழில் முழுக்கமுழுக்க ஒரு கிராமிய வீரவிளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இதுவே. ஜல்லிக்கட்டை பின்னணியாகக் கொண்ட முதல் நாவலும் இதுவே. இந்நாவல் ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து இயற்கைக்கும் மனிதனுக்குமான போட்டி, விதிக்கும் மனிதனுக்குமான போட்டி என உள்மடிப்புகள் கொண்டது. தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2026, 21:26:19 IST