being created

ஜோதிர்லதா கிரிஜா

From Tamil Wiki
Revision as of 15:46, 29 September 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added, Inter Link Created;)
ஜோதிர்லதா கிரிஜா
ஜோதிர்லதா கிரிஜா

நடைமுறை வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை, பிரச்சனைகளை மையமாக வைத்துச் சிறுகதைகள், நாவல்களை எழுதியவர் ஜோதிர்லதா கிரிஜா (ஜோதிர்லதா முக்தா கிரிஜா: பிறப்பு: 1936). 70 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு இலக்கியப் பரிசுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஜோதிர்லதா கிரிஜா, திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டில், மே 27, 1936-ல் பிறந்தார். உயர் கல்வியை முடித்தார். ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

இவருக்கு, சென்னையில், அஞ்சல் துறையில் சுருக்கெழுத்தாளர் பணி கிடைத்தது. தொடர்ந்து பணியாற்றி பதவி உயர்வு பெற்றார். நிறைய எழுத வேண்டும் என்பதற்காகவே விருப்ப ஓய்வு பெற்று எழுத்துப் பணியில் ஈடுபட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை.

இலக்கிய வாழ்க்கை

ஜோதிர்லதா கிரிஜாவின் தந்தை பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் மூலம் இலக்கிய நூல்கள் அறிமுகம் ஆயின. தீவிர வாசிப்பு அனுபவத்தினால் எழுத்தார்வம் வந்தது. தினமணி கதிருக்கு சில சிறுகதைகளை எழுதி அனுப்பினார். அப்போது அதன் ஆசிரியராக இருந்த துமிலன், “நீ மிகவும் சிறிய பெண். பெரியவர்களுக்கான கதைகளை எழுதுவதற்கு உனக்கு வயது போதாது” என்ற குறிப்புடன் அவற்றைத் திருப்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைகள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஜோதிர்லதா கிரிஜாவின் முதல் சிறுகதை, 1950-ல், ’ஜிங்லி’ சிறுவர் இதழில், அவ்விதழின் ஆசிரியராக இருந்த ரா.கி. ரங்கராஜனால் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களில் கதைகள் எழுதினார். எழுத்தாளர் தமிழ்வாணன், ஜோதிர்லதா கிரிஜாவை ஆதரித்து, தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். ஆர்.வி, அழ.வள்ளியப்பா போன்றோரும் ஜோதிர்லதா கிரிஜாவை எழுத ஊக்குவித்தனர்.

‘குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் பெரியவர்களுக்காகவும் எழுது’ என்று தமிழ்வாணன் ஆலோசனை கூறினார். அதன்படி ஜோதிர்லதா கிரிஜா எழுதிய பெரியவர்களுக்கான முதல் சிறுகதை ஆனந்த விகடன் இதழில் 1968-ல் வெளியானது. ‘அரியும் சிவனும் ஒண்ணு’ என்னும் தலைப்பிலான அக்கதை, கலப்புமணம் பற்றியதாகும். தொடர்ந்து 'அதிர்ச்சி’ எனும் மற்றொரு சிறுகதையும் விகடனில் வெளியாகி வாசக கவனம் பெற்றது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி எனப் பல இதழ்களில் ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகள் வெளியாகின.

ஜோதிர்லதா கிரிஜாவின், ‘நம் நாடு’ எனும் சிறுவர் புதினம் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987-ல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பட்டது. 1975 முதல், ஆங்கிலத்தில், ‘ஃபெமினா’ இதழில்  எழுத ஆரம்பித்தார். இவரது ஆங்கிலப் படைப்புகள் ‘தி பொயட்’ (THE  POET) என்ற இதழிலும் வெளியாகியுள்ளன. மேலும் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’, ‘ஈவ்ஸ் வீக்லி’, ‘யுவர் ஃபாமிலி’, ‘ஃபிக்க்ஷன் ரிவியூ’, ‘சண்டே எக்ஸ்பிரஸ்’, ’விமன்ஸ் எரா’, ‘வீக் எண்ட்’ போன்ற ஆங்கில இதழ்களிலும் கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் 'ஒப்பன் பேஜ்' பகுதியில் சமூகம் சார்ந்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’, ‘துக்ளக்’, ‘திண்ணை’ இணைய இதழ் போன்றவற்றிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

பெண்ணியச் சிந்தனைகளும், முற்போக்கு எண்ணங்களும் கொண்டவையாக ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகள் அமைந்துள்ளன. பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணைக் கொடுமைகள், திருமணப் பிரச்சனைகள், பணியிடங்களில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளால் ஏற்படும் துயர்கள், பாலியல் சிக்கல்கள், பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறைகள், வன்முறைகள், மறுமணம், பொருந்தாத் திருமணம் போன்ற சமூகத்தின் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையக் கருவாகக் கொண்டு பல கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். பெண்களுக்கான பல பிரச்சனைகள் உண்மையில் பெண்களை மட்டுமல்ல; ஆண்களையும் சேர்த்தே பாதிக்கிறது என்பதைத் தனது பல படைப்புகளில் கூறியிருக்கிறார் ஜோதிர்லதா கிரிஜா.

புதினங்கள்

ஜோதிர்லதா கிரிஜாவின் ‘நாங்களும் வாழ்கிறோம்’ புதினம், பெண்களுக்குக் கல்வி என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் கூறுகிறது. ஜாதிப் பிரச்சனையோடு, கல்வியின் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறது ‘தனிமையில் இனிமை கண்டேன்’ என்ற நாவல்.  பெண்களின் வாழ்க்கைச் சீர்குலைவுக்கு மிக முக்கிய காரணமான வரதட்சணைப் பிரச்சனையைப் பற்றிப் பேசும் ‘மன்மதனைத் தேடி’ நாவல் அதற்கான தீர்வையும் முன்வைக்கிறது. ஏழைப் பெண்களுக்கு, பணம் படைத்த செல்வந்தர்களால் ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுகிறது ’போராட்டம்’ புதினம். மலேசியாவின் ‘ தமிழ் நேசன்’ இதழில் தொடராக வெளிவந்த இவரது ‘இல்லாதவர்கள்’ நாவல் குறிப்பிடத் தகுந்த ஒன்று, ஏழை மக்களை, உயர்வர்க்கச் சமூகம் எந்த அளவுக்குத் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்தி விட்டுப் பின் தூக்கி எறிந்து விடுகிறது என்பதை அதில் எழுதியிருக்கிறார் ஜோதிர்லதா கிரிஜா. சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அமைந்தது ‘மணிக்கொடி’ நாவல். இது சென்னை வானொலியில் ஓரங்க நாடகமாகத் தொடர்ந்து ஒலிபரப்பானது.

சிறுகதைகள்

நாவல், குறுநாவல், கட்டுரைகளோடு தீவிரத் தன்மை கொண்ட பல சிறுகதைகளையும் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருக்கிறார். குமுதம் இதழில் வெளியான "கொலையும் செய்வாள்" என்ற சிறுகதை வெளியான காலத்தில் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தது.  தன்னைக் கொன்று அதன் பின் மறுமணம் செய்து கொண்டு சுகமாக வாழ நினைக்கும் கணவனையும், நிறைய வரதட்சணை கிடைக்கும் என அதற்காக ரகசியத் திட்டம் தீட்டும் மாமியாரையும் ஒரு பெண் கொலை செய்வதுதான் கதை. “காவு” என்ற சிறுகதை, திரைப்படப் பாடலாசிரியர்களைக் கண்டித்து  எழுதப்பட்டதாகும். கவிஞர் கண்ணதாசனைக் குறி வைத்து எழுதப்பட்ட அக்கதை, கண்ணதாசன் இதழிலேயே வெளியானது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய அம்சங்கள் கொண்ட பல சிறுகதைகளை ஜோதிர்லதா கிரிஜா கண்ணதாசனில் எழுதியிருக்கிறார்.

ஆண்களின் போலித்தனத்தை உரித்துக் காட்டும் ‘கவரிமான் கணவரே..’ சிறுகதை, பெரிய பதவிகளில் இருந்துகொண்டு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், எப்படியெல்லாம் ஊழல்கள் செய்து அலுவலகப் பணத்தை மறைமுகமாய்ச் சுரண்டுகிறார்கள் என்பதையும், ஆனால், அவர்களே தங்களின் கீழ் பணி புரியும் சாதாரண ஊழியர்களின் சிறு குற்றங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் எப்படியெல்லாம் கொடுமையாகத் தண்டிக்கிறார்கள் என்பதையும் கூறும் ’இளிக்கின்ற பித்தளைகள்’, சிறுகதை, மற்றும் ‘வாரிசுகள் தொடர்வார்கள்’, ‘அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே ஓர் அந்தரங்கம்’, ‘நான் ஒண்ணும் நளாயினி இல்லை’  போன்ற சிறுகதைகள் முக்கியமானவை.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.