under review

பி.எம். சுந்தரம்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பி.எம்.சுந்தரம்
பி.எம் சுந்தரம்
மாணவிகளுடன்
பாலமுரளி கிருஷ்ணாவுடன்
பி.எம்.சுந்தரம் 80 (ஆர் வேதவல்லி, வி.சங்கர் ஆகியோர் கௌரவிக்கிறார்கள்)

பி.எம். சுந்தரம் ( செப்டெம்பர் 10, 1934) (பாலா மீனாட்சிசுந்தரம் சுந்தரம், B.M.Sundaram) இசையியல் அறிஞர். இசைக்கலைஞர். இசைக்கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகளை எழுதியவர். இசைப்பாடல்கள் எழுதிய வாக்கேயக்காரர்.

பிறப்பு, இளமை

பி.எம்.சுந்தரம் தவில் இசைக் கலைஞர் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை க்கும் நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலாம்பாள் இருவருக்கும் மகனாக செப்டெம்பர் 10, 1934-ல் பிறந்தார்.

பி.எம்.சுந்தரம் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். எம். பாலமுரளி கிருஷ்ணாவிடம் இசை பயின்றார். இசையில் முதுகலைப் பட்டமும், இசையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

பி.எம்.சுந்தரம் புதுச்சேரி வானொலி நிலையத்தில் இசைத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இசைவாழ்க்கை

பி.எம்.சுந்தரம் ஆறு களங்களில் இசைப்பணி ஆற்றினார். புதுச்சேரி வானொலியின் இசைத்தயாரிப்பாளராகப் பணியாற்றியபோது சிறந்த இசைநிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். இசைப்பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இசைத்துறையில் ஈடுபட்டார். இசையியல் ஆய்வாளராக முக்கியமான நூல்களை எழுதினார். ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கினார். இசைவரலாற்றாசிரியராகவும் பங்களிப்பாற்றினார். இசைநூல்களை பதிப்பித்தார், இசைநூல்களை மொழியாக்கமும் செய்தார்.

இசைத்தயாரிப்பாளர்

பி.எம்.சுந்தரம் புதுச்சேரி வானொலியில் இசை தயாரிப்பாளராகப் பணியாற்றியபோது இந்தியா முழுதிலிருமிருந்து இசை நிபுணர்களை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து இசைநிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்வுடன் இணைந்து இசை நிகழ்வுகளை அமைத்தார்.

இசைப்பாடலாசிரியர்,இசையமைப்பாளர்

பி.எம்.சுந்தரம் நூற்றுக்கணக்கான இசைப்பாடல்களை உருவாக்கி அவற்றுக்கு சுவரம் அமைத்தார். பழைய நாட்டிய இசைப்பாடல்களையும், நாடக இசைப்பாடல்களையும் கண்டடைந்து அவற்றை சுவரப்படுத்தி பாடுவதற்கு உகந்த முறையில் அமைத்தார். பி.எம்.சுந்தரம் 22 தானவர்ணங்களை உருவாக்கியிருக்கிறார்.

இசை ஆய்வாளர்

பி.எம்.சுந்தரம் ஏராளமான இசையியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். அவை நூல்களாகவும் தொகுக்கப்பட்டன. வானொலிப் பணி ஓய்வுக்குப் பின்னர் அமெரிக்காவின் வீட்டன் பல்கலை (Wheaton University, Massachusetts, U.S.A)யில் இசையியல் வருகைப்பேராசிரியராகப் பணிபுரிந்தார். 4000 த்துக்கும் மேற்பட்ட ராக அளவுகள் பற்றி அவர் எழுதிய பாலை ஆழி அவருடைய முதல் நூல். தாளசங்கிரகம், தானவர்ண தரங்கிணி போன்ற இசையிலக்கண நூல்களை எழுதியிருக்கிறார். தாளசங்கிரகம் நூலில் 1100 தாளமாறுபாடுகளை வகுத்துரைக்கிறார். தானவர்ண தரங்கிணியில் 880 வகையான வர்ணங்களை அவற்றின் பாடவேறுபாடுகளுடன் விளக்குகிறார்.

இசைவரலாற்றாசிரியர்

பி.எம்.சுந்தரம் தமிழ்ச்சூழலில் மறக்கப்பட்ட இசைமேதைகளைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகளை தொகுத்து நூல்களாக எழுதினார். அவ்வகையில் அவருடைய முதல் படைப்பான 'மங்கல இசை மன்னர்கள்' 126 நாகஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் வாழ்க்கையையும் தனித்தன்மையையும் விளக்கியது. 2003-ல் வெளிவந்த 'மரபு தந்த மாணிக்கங்கள்' 121 நடனக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை அளித்தது. நட்டுவனார்களின் வாழ்க்கையும் சாதனைகளும் விளக்கப்பட்ட மரபு வழி நாட்டியப் பேராசிரியர்கள் இன்னொரு முக்கியமான நூல்.

பதிப்பாளர்

பி.எம்.சுந்தரம் 'வர்ண ஸ்வரஜதி', 'நட்சத்திராபிநய லட்சணம்', 'தல லட்சணம்' , 'ரசிக ஜன மனோல்லாசினி' போன்ற பல படைப்புகளை பிழைநோக்கி பதிப்பித்தார்

மொழியாக்கம்

பி.எம்.சுந்தரம் ராதிகா சாந்த்வனமு போனற காவியங்களையும் துளஜா அரசரின் 'சங்கீத சாராம்மிருதம்' போன்ற இசைநூல்களையும் மொழியாக்கம் செய்தார்.

பாராட்டு

மார்ச் 27, 2016-ல் பி.எம்.சுந்தரம் இசை ஆசிரியராக பணியாற்றும் வாணி சங்கீத வித்யா குருகுலத்தின் மாணவர்கள் அவரது 80-வது அகவைநிறைவைக் கொண்டாடினார்கள்

விருதுகள்

  • கலா பாரதி (குவாலியர்) - 1954,
  • சங்கீத சாஸ்த்ர கோவிதா (சேலம்) - 1965,
  • கலைமாமணி (இயல் இசை நாடக மன்றம்,தமிழ்நாடு அரசு) -1996,
  • இசைக்கலை செல்வர் (ராமலிங்கர் பணி மன்றம்),
  • ஐடிசி சங்கீத் ஆராய்ச்சி அகாடமி விருது (மும்பை),
  • தமிழ்வளர்ச்சித்துறை விருது (மரபுவழி நாட்டியப்பேராசான்கள் நூலுக்காக) 2002
  • சங்கீதா கலாபிக்ஞானா (தாளக்கலை மையம், பெங்களூரு),
  • சிறந்த இசையியல் அறிஞர் விருது (மியூசிக் அகாடமி, சென்னை)
  • மத்திய சங்கீத நாடக அகாடமி .ஒட்டுமொத்த பங்களிப்புக்கான தாகூர் விருது 2012,
  • வித்வத் சூடாமணி (ஸ்ரீ கிருஷ்ண கான சபா,சென்னை)
  • இசையியல் அறிஞர் விருது (நாரத கான சபா, சென்னை) - 2015.

இடம்

பி.எம். சுந்தரம் இசையியல் அறிஞராக தென்னிந்திய மரபிசையின் இலக்கணங்களை நவீனச் சூழலில் மீட்டுருவாக்கம் செய்தவராகவும், இசைமுன்னோடிகளின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தியவராகவும் இசைத்துறையில் அரும்பணி ஆற்றியவர் என மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

இசைவரலாறு
  • மங்கல இசை மன்னர்கள்
  • மரபு தந்த மாணிக்கங்கள்
  • மரபுவழி பரதப் பேராசான்கள்
  • தவுல் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
  • தமிழகத்தில் இசை வளர்த்த பெண்மணிகள்
  • ஆலயவழிபாட்டில் இசை
  • மரபுவழி நாட்டியப்பேராசான்கள்.
  • Krshna Balamurali: The Splendour of Swaras, an Authorized Biography
  • Varna Swarajati
இசை ஆய்வுகள்
  • பாலை ஆழி
  • தாளசங்கிரகம்
  • தானவர்ண தரங்கிணி
மொழியாக்கம்
  • ராதிகா சாந்த்வனம்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jun-2025, 01:23:38 IST