under review

காசி விசுவநாத பாண்டியன்

From Tamil Wiki
Revision as of 05:25, 31 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காசி விசுவநாத பாண்டியன் (படம் நன்றி: சுபாஷிணி ட்ரெம்மல், மின் தமிழ் குழுமம்)

காசி விசுவநாத பாண்டியன் (மார்ச் 07, 1888 - நவம்பர் 11, 1941) தமிழ்நாட்டின் நாடக மற்றும் இசைக் கலைஞர். பாரதியாரின் நண்பர்.

வாழ்க்கைக் குறிப்பு

காசி விசுவநாத பாண்டியன், மார்ச் 07, 1888-ல், எட்டயபுரத்தில் பிறந்தார். எட்டயபுரத்தில் பள்ளிக் கல்வி பயின்றார். சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். டென்னிஸ், பிலியர்ட்ஸ் போன்ற விளையாட்டுக்களிலும், வேட்டையாடுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். கன்னடம், மலையாளம் இரு மொழிகளும் கற்றவர். மணமானவர். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். காசி விசுவநாத பாண்டியன், எட்டயபுரத்தின் இளைய ஜமீனாக இருந்தார். பாரதியாரின் நெருங்கிய நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

காசி விசுவநாத பாண்டியன், 'தயாளன்' என்னும் நாடகத்தை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். 'தயாளன்' ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நாடகம். காசி விசுவநாத பாண்டியனின் மொழிப் புலமையை வெளிப்படுத்தும் நாடகமாக அது அமைந்திருந்தது.

கலை வாழ்க்கை

காசி விசுவநாத பாண்டியன், நாடகம், ஓவியம், வீணை ஆகிய கலைகளில் தேர்ச்சி பெற்றார். பல கலைஞர்களை ஆதரித்தார். அவர்களது மேம்பாட்டிற்காக உழைத்தார். ஆர்மோனியம் முதலான இசைக் கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர். நிழற் படங்கள் எடுப்பதிலும் நிபுணராக இருந்தார்.

நாடக வாழ்க்கை

காசி விசுவநாத பாண்டியன், டி.கே.எஸ். சகோதரர்கள் உள்ளிட்ட பல நாடகக் கலைஞர்களை ஆதரித்தார். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை, டி.கே.எஸ். குழு உள்ளிட்ட பல நாடகக் குழுவினரை எட்டயபுரத்திற்கு வரவழைத்துப் பல நாடகங்களை நடத்தச் செய்தார். சொந்தமாக நாடகக் குழு ஒன்றை உருவாக்கினார். அதன் மூலம் பல நாடகங்களை நடத்தினார். தான் எழுதிய நாவலான, 'தயாள'னை நாடகமாக்கம் செய்து அரங்காற்றுகை செய்தார். தனது நாடகங்கள் மூலம் பல நாடகக் கலைஞர்களை உருவாக்கினார்.

தன் அரண்மனையில் இருந்த நாடக அரங்குகளில் இடம்பெற வேண்டிய திரைச்சீலைகளையும், அதற்கான ஓவியங்களையும் காசி விசுவநாத பாண்டியனே வரைந்து உருவாக்கினார். சிறார்களுக்கென்று சொந்தமாக ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். தேவராசர், ஜெகதீசன் என்ற தம் இரு மகன்களின் பெயரால் 'தேவராச ஜெகதீச தியேட்டரிக்கல் கம்பெனி' என அக்குழுவுக்குப் பெயரிட்டுப் பல நாடகங்களை நடத்தினார். 'பிரகலாதா', 'மாருதி விஜயம்', 'கபீர்தாஸ்', 'ராமதாஸ்', 'மனோகரன்', வி.சி.கோபால ரத்தினம் எழுதிய 'ராஜபக்தி', காசி விசுவநாத பாண்டியனின் 'தயாளன்' முதலிய பல நாடகங்கள் அக்குழுவினரால் நடிக்கப்பட்டன. டி.பி. சங்கர நாராயணன், பி.எஸ். வெங்கடாசலம், எஸ்.பி. வீராசாமி, நடிகமணி டி.வி. நாராயணசாமி போன்றோர் தம் இளவயதில் அந்நாடகங்களில் நடித்தனர்.

காசி விசுவநாத பாண்டியன், இந்நாடகங்களை நடத்துவதற்காக எட்டயபுரம் அரண்மனை அருகே 'ஸ்ரீ ராமச்சந்திர விலாஸ் தியேட்டர்' என்ற பெயரில் ஓர் அரங்கை நிர்மாணித்தார்.

திரை வாழ்க்கை

1937-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கூட்டுறவில், காசி விசுவநாத பாண்டியன் எழுதிய 'தயாளன்' நாவல் திரைப்படமாக வெளியானது.

அரசியல்

காசி விசுவநாத பாண்டியன், இந்திய விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். விடுதலை வீரர்களுக்குப் பல உதவிகளைச் செய்தார்.

விருதுகள்/பரிசு

காசி விசுவநாத பாண்டியன், பல்வேறு அமைப்புகளால் சிறந்த நாடக மேதையாகச் சிறப்புச் செய்யப்பட்டுப் பாராட்டப் பெற்றார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவரது உருவப்படத்தைத் திறந்து பாராட்டிச் சிறப்புச் செய்தது.

மறைவு

காசி விசுவநாத பாண்டியன், நவம்பர் 11, 1941 அன்று காலமானார்

மதிப்பீடு

காசி விசுவநாத பாண்டியன், இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் தேர்ந்தவர். இசைக் கலைஞர்கள் பலரை ஆதரித்தார். நாடகக் கலைஞர்கள் பலரை ஊக்குவித்தார். நாடகக் கலை நசித்து போகாமல் இருக்க பல நாடகக் குழுவினர்களுக்கும், அவர்களது அமைப்புக்கும் நிதி உதவி செய்து, நாடகக் கலை வளர்சிக்கு உதவினார். தமிழ்நாட்டின் முன்னோடி நாடகக் கலைஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2025, 13:46:21 IST