under review

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாலத்தன் என்னும் இயற்பெயரினைக் கொண்டவர். மாறோக்கம் என்பது கொற்கை பகுதியில் அமைந்த சிறு நாடுகளில் ஒன்று, மாறோகம் என்றும் குறிப்பிடப்படும். காமக்கணி என்பது காமாக்ஷி என்னும் வடமொழி சொல்லின் தமிழ் வடிவம். எனவே மாற்றோக்கத்தை சேர்ந்த காமக்கணி என்பாரின் நல் மகன் என்பதை குறிக்கும் வகையில் மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் என பெயர் பெற்றுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் பாடிய பாடல் அகநானூறில் 377-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டுவதற்காக தலைவியை பிரிந்து பாலை நிலத்தில் தனித்து பாழ் மண்டபத்தில் தங்கும் தலைவன் தனக்குத்தானே கூறி கொள்வதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பொருளீட்டுவதன் நோக்கம் இரவலர்க்கு கொடுப்பதற்காகவே என்னும் விழுமியம் சமூகத்தில் இருந்தது.

பாலை நிலத்தின் வெம்மையினால் கைவிடப்பட்டு கிடக்கும் ஊரின் சித்திரம் காட்டப்படுகிறது.

  • கோடை வெப்பத்தின் காரணமாக நீர் நிலைகளும் நிலமும் முற்றிலும் வறண்டு போய் வெப்பம் தகிக்கிறது. எறும்புகள் சிறு புல்லரிசிகளை கொய்து வந்து தமது வளையில் சேர்த்து வைக்கும்.
  • பாலையில் வாழும் மறவர்கள் வேட்டையாட விலங்குகளே இல்லாத கொடும் சூழ்நிலையில் எறும்பு வளையில் உள்ள புல்லரிசியை சேகரித்து தின்பர்.
  • மறவர்கள் தொடர்ச்சியாக பசுக்கூட்டங்களை கவர்ந்து சென்று விடுவதால் மக்கள் ஊரினை கைவிட்டு செல்வர். அத்தகு கைவிடப்பட்ட ஊரில் இருக்கும் பாழடைந்த மண்டபங்களில் நடுங்கும் தலை கொண்ட முதியவர்கள் மட்டுமே இருப்பர். அவர்கள் வல்லு என்னும் விளையாட்டினை விளையாடுவர். வல்லு விளையாட்டினை விளையாட பயன்படுத்தப்படும் வல்லு பலகை கரையான் அரித்து சேதமாகி இருக்கும்.

பாடல் நடை

அகநானூறு - 377

  • திணை: பாலை
  • கூற்று: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

கோடை நீடலின், வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே!

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Apr-2025, 12:55:40 IST