under review

புல்லாற்றூர் எயிற்றியனார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புல்லாற்றூர் எயிற்றியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

புல்லாற்றூர் எயிற்றியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள புல்லாற்றூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

புல்லாற்றூர் எயிற்றியனார் பாடிய பாடல் புறநானூறில் 213-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது மைந்தருக்கும் இடையே ஏற்பட்ட பகையினால் போர் ஏற்படும் நிலை இருந்தது. அந்நிலையில் கோப்பெருஞ்சோழனிடம் நடக்க இருக்கும் போரின் தீமைகளை எடுத்து சொல்லி, போரினை கைவிடும்படி புல்லாற்றூர் எயிற்றியனார் கூறுவதாக வஞ்சித் திணையில் துணை வஞ்சி துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது மைந்தருக்கும் இடையே ஏற்படும் போரினால் விளையும் தீமைகள் எடுத்து சொல்லப்படுகிறது. இதன் மூலம் அக்கால மக்களின் வாழ்க்கை முறையினையும் சமூகம் சார்ந்த எண்ணங்களும் தெரியவருகிறது.
  • தந்தையரின் அரசும் செல்வம் அவர்களின் இறப்புக்கு பின் மைந்தர்களுக்கு உடையதாகும். மைந்தருடன் ஏற்பட்ட பகையால் அவர்களை கொல்வது பழிச்சொல்லுக்கு உரியதாகும். தான் பாதுகாத்த அரசையும் செல்வத்தையும் ஆள்வதற்கு வாரிசுகள் இருக்கமாட்டார்கள்.
  • தந்தையரை மைந்தர் போரில் வென்று அரசை அடைவதும் தந்தையருக்கே பழியை கொண்டு வரும் செயலாகும். மைந்தருடன் போரிட்ட தந்தை பேராசை கொண்டவனாக கருதப்படுவான்.
  • அறிவுள்ள தந்தையர் மைந்தருடன் பகைமை பாராட்டாது விண்ணுலகில் புகழ் பெறுவதற்குரிய நற்செயல்களை செய்வர்.

பாடல் நடை

புறநானூறு - 213

  • திணை: வஞ்சி துறை: துணை வஞ்சி

.........................................................
பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால் அன்னது ஆதலும் அறிவோய், நன்றும்
இன்னும் கேண்மதி இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீஅவர்க்கு உலையின்
இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே! வல்விரைந்து
எழுமதி; வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:55:46 IST