under review

இரா. மோகன்

From Tamil Wiki
Revision as of 00:34, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மோகன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மோகன் (பெயர் பட்டியல்)
முனைவர் இரா. மோகன்

இரா. மோகன் (தமிழ்த்தேனீ இரா. மோகன்; டாக்டர் இரா. மோகன்; முனைவர் இரா. மோகன்; பேராசிரியர் இரா. மோகன்) (ஏப்ரல் 22, 1950 - ஜூன்12, 2019) தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஒப்பிலியக்கியத்துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். கவிதை, நூலாய்வு, ஒப்பிலக்கியம், உரை என 151 நூல்களை எழுதினார். தமிழக அரசின் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

இரா. மோகன், ஏப்ரல் 22, 1950 அன்று, மதுரையில், இராமமூர்த்தி - இராசலெட்சுமி இணையருக்குப் பிறந்தார். காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். முடியரசன் இவரது ஆசிரியராக இருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், 'கு.ப. இராசகோபாலன் சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் இரா. மோகன்

தனி வாழ்க்கை

இரா. மோகன் மணமானவர். மனைவி முனைவர் நிர்மலா மோகன் தமிழ்ப் பேராசிரியை. மகள்: அரசி பாலாஜி.

கல்விப்பணிகள்

இரா. மோகன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1976-ல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து இணைப் பேராசிரியர், பேராசிரியர், ஒப்பிலக்கியத் துறைத் தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர், புல ஒருங்கிணைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பேராசிரியர், முனைவர் இரா. மோகன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

இரா.மோகன், டாக்டர் மு.வ.வைத் தனது இலக்கிய ஆதர்சமாகக் கொண்டார். மு.வ. வின் தூண்டுதலால் எழுதத் தொடங்கினார். முதல் நூல் 'டாக்டர் மு.வ.வின் நாவல்கள்' 1973-ல் வெளியானது. தொடர்ந்து இலக்கியத் திறனாய்வு, விமர்சனம், ஆய்வுக் கட்டுரை, ஒப்பிலக்கியம், உரை, பதிப்பு, தொகுப்பு என 151 நூல்களை எழுதினார். தினமணி, கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனிதநேயம் போன்ற மாத இதழ்களில் இலக்கியத் தொடர்களை எழுதினார்.

சாகித்ய அகாதெமியின் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் கு.ப.ராஜகோபாலன்,கல்கி, வ.சுப.மாணிக்கம், முடியரசன் உள்ளிட்டோர் குறித்து மோகன் எழுதியிருக்கும் நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. 'நாவல் வளர்ச்சி', 'புதுக்கவிதை அணிவகுப்பு', 'நகைச்சுவைக் களஞ்சியம்', 'தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம்', 'தமிழ் ஹைகூ ஆயிரம்' போன்ற மோகனின் நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. மோகனின் நூல்கள் சில பல்கலைக்கழகங்களில், தன்னாட்சிக் கல்லூரிகளில் பாட நூல்களாக வைக்கப்பட்டன. குமரி அனந்தன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மோகனின் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றனர். பல மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றனர்.

மோகன், இலக்கியச் சிறப்புரைகளுக்காக ஐந்து முறை சிங்கப்பூருக்கும், இரண்டு முறை மலேசியாவுக்கும், இரண்டு முறை அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியா, இலங்கை, ஷார்ஜா போன்ற நாடுகளுக்கும் சென்றார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சிறப்புரைகளை நிகழ்த்தினார். பல்வேறு பட்டிமன்றங்களில் நடுவராகச் செயல்பட்டார். நகைச்சுவை மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைச்சுவையாளர்களை ஊக்குவித்தார்.

பொறுப்பு

  • சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழிப் பொதுக்குழு உறுப்பினர்
  • சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர்
  • மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்
  • திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியீடு நூல் நிதி நல்கைக் குழு உறுப்பினர்
  • இலக்கிய இணையர் அறக்கட்டளை நிறுவனர்

விருதுகள்

  • சிறந்த பட்டிமன்ற நடுவர் விருது
  • மூவேந்தர் இலக்கிய விருது
  • தமிழ்ப்பணிச் செம்மல் விருது
  • கிருபானந்த வாரியார் விருது
  • கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது
  • தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இலக்கிய விருது
  • அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய தமிழ்ச்சுடர் விருது
  • பாரத மாநில வங்கியும், புதுச்சேரி கம்பன் கழகமும் இணைந்து வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசு
  • பாரத மாநில வங்கி வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசு
  • மதுரை தமிழ் இசைச் சங்கம் அளித்த பாராட்டுச் சான்றிதழ், பொற்கிழி
  • தமிழ்த்தேனீ பட்டம்

மறைவு

இரா. மோகன், ஜூன் 12, 2019 அன்று காலமானார்

நாட்டுடைமை

இரா. மோகனின் படைப்புகள், 2003-ல், தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இரா. மோகனின் படைப்புலகம் - ஆய்வு நூல்

ஆவணம்

மோகனின் வாழ்க்கைக் குறிப்புகள், ' இலக்கிய இணையர் பேராசிரியர் இரா.மோகன் - முனைவர் நிர்மலா மோகன் மணி விழா மலர்' நூலிலும், 'பேராசிரியர் இரா.மோகனின் படைப்புலகம்' நூலிலும் தொகுக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

பேராசிரியர் இரா. மோகன் கவிதை, கட்டுரை, திறனாய்வு, நூல் தொகுப்பு, சொற்பொழிவு எனப் பல புலங்களில் இயங்கியவர். எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்தார். இலக்கிய நிகழ்வுகள் பலவற்றை ஒருங்கிணைத்தார். தன் மாணவர்கள் பலரை ஊக்குவித்து கவிஞர்களாக, எழுத்தாளர்களாக உயர்த்தினார். தமிழ்ப் பேராசிரியர்களில் தனது இலக்கிய முயற்சிகளுக்காக டாக்டர் மு.வ., அ. சீனிவாச ராகவன், வ.சுப. மாணிக்கம் போன்றோர் வரிசையில் வைத்து மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • டாக்டர் மு.வ.வின் நாவல்கள்
  • அறிஞர் மு.வ.
  • சிறுகதைச் சிற்பி கு.ப.ரா.
  • புனைகதைத் திறன்
  • பண்டிதமணியின் நடை நயம்
  • திரு.வி.க. அல்லது வாழ்க்கை விளக்கம்
  • கு.ப.ராஜகோபாலன்
  • காந்தீயக் கவிஞருடன் ஒரு கை குலுக்கல்
  • வ.சுப.மாணிக்கம்
  • கல்கி
  • ஒப்பியல் சிந்தனைகள்
  • இலக்கியச் சால்பு
  • இலக்கியச் சிந்தனை
  • இலக்கியச் சுடர்
  • இலக்கியச் செவ்வி
  • இலக்கியச் செல்வம்
  • இலக்கிய வித்தகர்கள்
  • .புதுக்கவிதைத் திறன்
  • பன்முகப் பார்வையில் பாரதி
  • கவிதைக் குயில்கள்
  • குமரகுருபரர்
  • முடியரசன்
  • கவிதை அலைவரிசை-1, 2
  • இலக்கியப் பரல்கள்
  • இலக்கிய ஆளுமைகள்
  • நகைச்சுவை நாயகர்கள்
  • கணினி யுகத்திற்குக் கம்பர்
  • சங்க இலக்கியச் செவ்வி
  • வா.செ.கு. என்ற ஆளுமையாளர்
  • விருந்தும் மருந்தும்
  • செவ்வியல் இலக்கியச் செழுமை
  • மாணிக்கவாசகர்
  • இலக்கிய முற்றம்
  • மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு
  • டாக்டர் மு.வ. கலைக்களஞ்சியம்
  • புதுக்கவிதை அணிவகுப்பு
  • நாவல் வளர்ச்சி
  • சிற்பியின் கட்டுரைகள்
  • கல்கி நூறு
  • கல்கி கதைகள் : 2 தொகுதிகள்
  • கல்கி கட்டுரைகள் : 3 தொகுதிகள்
  • செந்தமிழ்த் தேனீ சோமலே
  • நாள் ஒரு சிந்தனை
  • புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள்
  • கு.ப.ரா. முத்திரைக் கதைகள்
  • நகைச்சுவைக் களஞ்சியம்
  • சீக்கியமும் தமிழ்ப் பண்பாடும்
  • தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம்
  • அயலகத் தமிழ் இலக்கியம்
  • டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்
  • ஜெயகாந்தன் சிந்தனைகள்
  • துணுக்கு இலக்கியம்
  • துணுக்குத் திரட்டு
  • சங்க இலக்கியத் தொகை
  • படித்ததும் பிடித்ததும்
  • மகிழ்ந்ததும் நெகிழ்ந்ததும்
  • சிரித்ததும் சிலிர்த்ததும்
  • பண்பாளர் பேராசிரியர் பரந்தாமனார்
  • இறையன்பு களஞ்சியம்
  • தமிழ் ஹைகூ ஆயிரம்
  • குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள்
  • மு.வ. கருவூலம்
  • மணிமேகலைத் திறன்
  • முன்னேற்றம்
  • இன்பமே எந்நாளும்
  • விரல்கள் பத்தும் மூலதனம்
  • விழிப்புணர்வுச் சிந்தனைகள்
  • இனியவை நாற்பது
  • திறமைதான் நமது செல்வம்
  • கனவை நனவாக்கும் கலாம்
  • இலக்கியக் கோலங்கள்
  • முன்னுரை நாற்பது
  • இலக்கிய மாலை
  • இலக்கியம்
  • அன்புள்ள நிலாவுக்கு... (கடித இலக்கியம்)
  • கவிதைக் களஞ்சியம்
  • டாக்டர் மு.வ.வின் கடிதங்கள் (இணைப்பதிப்பாசிரியர்)
  • பரல்கள் : தொகுதி 2 (இணைப்பதிப்பாசிரியர்)
  • பொதிகை : மலர் 1 (இணைப்பதிப்பாசிரியர்)
  • புகழ் பெற்ற சங்க இலக்கியப் பொன்மொழிகள் (இணைப்பதிப்பாசிரியர்)
  • பாரதி இயல் (இணைப்பதிப்பாசிரியர்)
  • தமிழியல் : தொகுதி 1 (இணைப்பதிப்பாசிரியர்)
  • அண்ணல் தமிழ் (இணைப்பதிப்பாசிரியர்)
  • தமிழ் உலா : 2 தொகுதிகள் (இணைப்பதிப்பாசிரியர்)
  • பெண்ணியம் (இணைப்பதிப்பாசிரியர்)
  • சிறுவர் இலக்கியம் (இணைப்பதிப்பாசிரியர்)
  • பிற துறைத் தமிழ் ஆய்வு (இணைப்பதிப்பாசிரியர்)
  • திருக்குறள் ஆய்வுக் களஞ்சியம் (இணைப்பதிப்பாசிரியர்)
  • ஆய்வியல் வழிகாட்டி (இணையாசிரியர்)
  • உரை மரபுகள் (இணையாசிரியர்)
  • சின்னச் சின்ன இழை (இணையாசிரியர்)
  • ஆய்வுக் கோவை : 4 தொகுதிகள் (2006)
  • ஆய்வுக் கோவை : 5 தொகுதிகள் (2007)
  • ஆய்வுக் கோவை : 4 தொகுதிகள் (2008)
  • ஆய்வுக் கோவை : 4 தொகுதிகள் (2009)
  • ஆய்வுக் கோவை : 4 தொகுதிகள் (2010)
  • ஆய்வுக் கோவை : 4 தொகுதிகள் (2011)
  • ஆய்வுக் கோவை : 4 தொகுதிகள் (2012)
  • ஆய்வுக் கோவை : 4 தொகுதிகள் (2013)
  • ஐங்குறுநூறு ஆய்வுக் கோவை: 3 தொகுதிகள் (2009)
  • பத்துப்பாட்டு உரை (1-5 தொகுதிகள்)

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jul-2024, 11:28:57 IST