under review

ஸ்ரீ சக்கர அம்மாள்

From Tamil Wiki
Revision as of 19:52, 28 November 2025 by Madhusaml (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஸ்ரீ சக்கர அம்மாள்

ஸ்ரீ சக்கர அம்மாள் (ஸ்ரீ சக்கரத்தம்மாள்; சர்க்கரை அம்மாள்; சக்கரத்தம்மன்; பாப்பாத்தி அம்மாள்) (1854-1901) பெண் யோகினி; ஆன்மிக ஞானி. ஸ்ரீ சக்ர வழிபாடு செய்ததால் ஸ்ரீ சக்கர அம்மாள் என்று அழைக்கப்பட்டார். சித்தராக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீ சக்கர அம்மாளின் இயற்பெயர் அனந்தாம்பாள். இவர், பொயு 1854-ல், தமிழ்நாட்டில் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர். சிறுவயதிலேயே அனந்தாம்பாளுக்கு இறை அனுபவம் வாய்த்திருந்தது என்று கருதப்பட்டது. தாயார் காலமானதால் தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் அனந்தாம்பாள் வளர்ந்தார்.

அனந்தாம்பாள் தந்தை அம்பாளுக்குப் பூஜை செய்வதைப் போலவே தானும் செய்வார். மந்திரங்கள் சொல்வார். லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். சக குழந்தைகளுடன் விளையாடுவதை விட, தந்தையுடன் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபடுவதை விரும்பினார். கோயிலின் மேல்மாடத்திற்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அனந்தாம்பாளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது.

திருமணம்

அனந்தாம்பாளுக்கு எட்டு வயது ஆனபோது திருமணம் நடந்தது. கணவர் சாம்பசிவன், சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியாக இருந்தார். அவருக்கு வயது 23. மணமாகிச் சென்னைக்கு வந்தார் அனந்தாம்பாள். ஆனால் வாழ்க்கை இனிமையாக இருக்கவில்லை. கணவர் சாம்பசிவன் தீய நடத்தை உடையவராக இருந்தார், பிற பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தார், தனது பேச்சினாலும், நடத்தையினாலும் அனந்தாம்பாளுக்கு பல்வேறு துன்பங்களைத் தந்தார். அனந்தாம்பாளுக்கு வயது வந்த பின்னரும் கணவரின் இந்த நடத்தை தொடர்ந்தது.

ஆன்மிக வாழ்க்கை

அனந்தாம்பாளின் கவனம் ஆன்மிகத்தின்பால் திரும்பியது. தன் இல்லக் கடமைகளைச் செய்து விட்டு பின் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டார். தொடர்ந்து பல துன்பங்களை அனுபவித்து வந்ததால் அனந்தாம்பாளின் மனம் ஞான வைராக்கிய நிலையை நோக்கிச் சென்றது. ஆலயத்திற்குச் சென்று தியானம் செய்வது மட்டுமில்லாமல், தான் தங்கியிருந்த வீட்டின் மேல் மாடியில் அமர்ந்து தன்னை மறந்த நிலையில் தியானத்தில் ஈடுபடுவது வழக்கமாயிற்று.

கணவர் சாம்பசிவன் நாளடைவில் நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார். அனந்தாம்பாளின் கவனிப்பு பலனளிக்காமல் சில மாதங்களில் காலமானார். விதவையான அனந்தாம்பாளுக்கு அக்கால வழக்கப்படி தலை மழிக்கப்பட்டு காவி உடை அணிவிக்கப்பட்டது. அப்போது அனந்தாம்பாளுக்கு இருபது வயது நடந்துகொண்டிருந்தது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார்.

ஒளி தரிசனம்

அனந்தாம்பாள் விடியற் காலையில் பூஜையைத் தொடங்குவார். தந்தை அளித்திருந்த ஸ்ரீ சக்ரத்திற்கு பூஜை செய்வார். லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வார். பின்னர் சூரியனை நோக்கி கண்ணிமைக்காமல் அமர்ந்து தியானம் செய்வார். பகல் ஒரு வேளை மட்டும் சிறிதளவு உண்ணுவார். பின் மீண்டும் தியானத்தைத் தொடர்வார். நாளடைவில் யாருடனும் பேசுவதை நிறுத்தி விட்டார். சதா தியானத்திலேயே தனது நாட்களைக் கழித்து வந்தார். அவரது முப்பதாவது வயது வரையில், அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் ஒரு பேரொளியைக் கண்டார் என்று சொல்லப்படுகிறது.

ஒளி தரிசனம் பெற்ற உணவும் உறக்கமும் குறைந்தது. தனியே இருப்பதை விரும்பினார். 'யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன் எந்நேரமும் 'ஆனந்த நிலையில்' திளைத்திருந்ததாக சொன்னார்.

கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார் என்றும், யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார் என்றும் சொல்லப்பட்டது. அவரைக் கண்ட பலரும் விலகிச் சென்றனர். பின்னர் அவர் ஞானம் அடைந்தவர் என்று தகவல் பரவியது. சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். 'அம்மா' என்று அழைக்கப்படத் தொடங்கினார்.

டாக்டர் நஞ்சுண்டராவ்
சீடர் டாக்டர் நஞ்சுண்டராவ்

தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் டாக்டர் நஞ்சுண்டராவ், குறிப்பிடத் தகுந்தவராக விளங்கினார். இவர் பாரதியாரின் நண்பர். சுவாமி விவேகானந்தருக்கு நெருக்கமானவர். கர்னல் ஆல்காட், அன்னிபெசண்ட், கிருஷ்ணசாமி ஐயர், காட்டுப் புத்தூர் ஜமீன்தார் உள்ளிட்ட பலருக்குக் குடும்ப மருத்துவராக அறிந்தார். மயிலையில் உள்ள வள்ளுவர் - வாசுகி கோயில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

அனந்தாம்பாளை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே டாக்டர் கருதினார். பின்னரே அவரது நிலையை உணர்ந்து கொண்டு சீடரானார். அனந்தாம்பாளைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதினார், அவருடன் காசி உட்பட பல இடங்களுக்குத் தல யாத்திரை சென்று வந்தார். பின் அவருடன் திருவண்ணாமலை சென்ற நஞ்சுண்டராவ், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்றார்.

ஸ்ரீ சக்கர அம்மாள்

அனந்தாம்பாள் தினமும் சிவ பூஜையும் ஸ்ரீ சக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து 'அம்மா' என்றும் சக்கரத்தம்மாள் என்றும் அழைக்கப்படலானார். 'சக்கரை அம்மாள்' என்றும் 'சக்கரத்தம்மன்', 'பாப்பாத்தி அம்மாள்' என்றும் அழைக்கப்பட்டார்.

உபதேசம்

ஸ்ரீ சக்கர அம்மாள், தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். "பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு" என்று உபதேசங்களைச் செய்தார்.

ஸ்ரீ சக்கர அம்மாள் சமாதி

தொன்மங்கள்

ஸ்ரீ சக்கர அம்மாள் அவ்வப்போது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவார். அன்பர்கள் காரணம் கேட்டால் தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிகளோடு உரையாடி விட்டு வந்ததாகக் கூறுவார். அது தவிரப் பல்வேறு சித்துக்களும் அவர் கைவரப் பெற்றிருந்தார் என்று சொல்லப்பட்டஹ்டு.

அம்மாவின் சித்தாற்றல் பற்றி தனது 'உள்ளொளி' நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்.

"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evoultion) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் 'தேசபக்தன்' ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், 'அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்' என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்."

பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும் என்று சித்த மரபில் கருதப்படுகிறது. அந்த வகையில் தான் பெற்ற 'லகிமா' என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்தார் அனந்தாம்பாள் என்று கூறப்படுகிறது.

சமாதி

ஸ்ரீ சக்கர அம்மாள் பிப்ரவரி 28, 1901-ல் மறைந்தார்.

சமாதி அமைவிடம்

சீடர் நஞ்சுண்டராவ் முயற்சியால் சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே ஸ்ரீ சக்கர அம்மாளுக்கு சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது. டாக்டர் நஞ்சுண்டராவ் அமைத்த டிரஸ்டின் மூலம் இங்கு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சமாதி ஆலயம் திருவான்மியூர் - கலாஷேத்திரா செல்லும் சாலையில், பாம்பன் சுவாமிகள் சமாதிக்குப் போகும் வழியில் இடதுபுறம் அமைந்துள்ளது.

மாசி மாதத் திருவாதிரை தினத்தன்று அம்மாவின் குருபூஜை நடக்கிறது. ஒவ்வொரு வியாழன், மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு, ஆராதனை நடந்து வருகிறது.

மதிப்பீடு

ஆண்டாள், மீரா, காரைக்காலம்மையார், ஸ்ரீ அன்னை, அன்னை சாரதாதேவி, ஆவுடையக்காள் போன்றோர் வரிசையில் மெய்ஞானம் பெற்ற பெண்ணாகவும், சித்தராகவும் ஸ்ரீ சக்கர அம்மாள் மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Nov-2025, 07:10:47 IST