படை வழக்கு
படை வழக்கு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. பகைவரை எதிர்த்து நிற்கும் மறவர்களுக்கு போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குவதைக் கூறுவது.
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் முத்து அணிகலன்களைப் பூண்கின்ற மறப்பண்பு வாய்ந்த காஞ்சி மன்னன், தன்னுடைய மறவர்க்குப் படைக் கருவிகளை வழங்குவதைக் கூறுவது படைவழக்கு என இலக்கணம் வகுக்கிறது.
முத்துஅவிர்பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படைவழங்கின்று
வெண்பா
ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
ஐயிலை யெஃக மவைபலவும் - மொய்யிடை
ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
வாட்கடி வன்க ணவர்க்கு.
பொருள்: மறக்குடியில் வந்த காஞ்சி மறவர்க்கு மன்னன் படைக் கருவிகளை வழங்கினான்; இதனால் தனக்கு உணவு கிட்டுவது உறுதி எனக் கூற்று (யமன்) மகிழ்ந்தான்.
படைக் கருவிகள் வழங்கப்பட்டது புலனாவதால் இது படை வழக்கு.
இதுவுமது
மன்னனால் படை வழங்கப் பெற்ற மறவர் 'எமக்கு இன்ன படையை வழங்கினான்' என எடுத்துப் பேசுவதும் படைவழக்கு என புறப்பொருள் வெண்பாமாலையின் மற்றொரு கொளுப்பாடல் கூறுகிறது.
கொடுத்தபின்னர்க் கழன்மறவர்
எடுத்துரைப்பினு மத்துறையாகும்
வெண்பா
துன்னருந் துப்பிற் றொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னம ரொள்வாளென் கைதந்தான் - மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து.
பொருள்: ஒப்பரிய காஞ்சி மறவர்கள் சுற்றிச் சூழ்ந்திருந்த போது, காஞ்சி மன்னன் தனது வாளை என் கையில் தந்தான். மன்னனின் ஆணைக்கீழ் உலகமெல்லாம் அடங்கியுள்ளது முன்னமே தெரிந்ததுதான். மன்னன் விண்ணுலகையும் அடிமை கொள்ள அவாவுகின்றான். வாள் வழங்கப் பெற்ற நான் அதனையும் கிட்டச் செய்வேன்' என்கின்றான் மறவன் ஒருவன்.
படை வழங்கியதை எடுத்துரைத்ததால் இது படை வழக்கு.
உசாத்துணை
காஞ்சித் திணை-தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 12:00:22 IST