under review

சாருகேசி

From Tamil Wiki
Revision as of 17:38, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சாருகேசி

சாருகேசி ( 1938- 30 ஜனவரி 2019)) (எஸ்.விஸ்வநாதன்) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். இசை விமர்சனங்களும் நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

சாருகேசியின் இயற்பெயர் எஸ்.விஸ்வநாதன் (விஸ்வநாதன் சுப்ரமணியன்). மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்த லெமன் என்னும் எஸ்.லட்சுமணன் இவரது சகோதரர். 1938ல் பாலக்காட்டில் பிறந்தார். பள்ளியிறுதி வரை கல்விகற்றார்

தனிவாழ்க்கை

சாருகேசி ஃபைஸர் என்னும் பன்னாட்டு மருந்து நிறுவனத்தில் 1957-ல் கணக்கு உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். சாருகேசி மணம்புரிந்து கொள்ளவில்லை. உடன்பிறந்தவர்களுடன் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சாருகேசி என்ற பெயரை விஸ்வநாதனுக்குச் சூட்டியவர் எழுத்தாளர் வாதூலன். சாருகேசியின் முதல் கட்டுரை கல்கி நிறுவனம் வெளியிட்ட 'கண்ணன்' இதழில் 1955ல் வெளியானது. அவர் எழுதிய முதல் சிறுகதை 'கல்கி'யில் 1960ல் அவரது 17 ஆவது வயதில் வெளியானது. விஸ்வநாதன் என்ற பெயரில் எழுதி வந்தவர் 1975ல் சாருகேசி என்று பெயர்சூட்டிக்கொண்டார்.

இசை விமர்சனம்

சாருகேசிக்கு வாதூலன் இசையை அறிமுகம் செய்தார். இசை விமர்சகராக நாற்பதாண்டுகள் தொடர்ச்சியாக எழுதிவந்தார். 28 இளம் இசைக்கலைஞர்களை நேர்காணல் செய்து இவர் தொகுத்த இயல் இசை நாடகம் என்னும் நூல் புகழ்பெற்ற ஒன்று. சாருகேசி எட்டாயிரம் கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளார் என்று அவர் நண்பர் ஆர்.வி.ராஜன் டைம்ஸ் ஆஃப் இண்டியா கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மொழியாக்கம்

சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய மூன்று நூல்களை சாருகேசி தமிழாக்கம் செய்துள்ளார். பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார்.

ஆங்கிலம்

சாருகேசி தான் பணியாற்றிய நிறுவனத்தில் இதழ்களில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். பின்னர் சென்னையில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழ்களில் இசை பற்றிய கட்டுரைகளை எழுதினார்.

இதழியல்

சாருகேசி கல்கி இதழுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். மன்மோகன் சிங், இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் ஆகியோரை பேட்டி எடுத்துள்ளார். 1984-ல் உத்தரப்பிரதேச தேர்தல் களத்தை நேரில் கண்டு எழுதும் பொருட்டு புகைப்பட நிபுணருடன் சென்றபோது ரயிலில் போபால் விஷவாயு கசிவு பற்றி அறிந்து அங்கே சென்று நேரடியாக அதை பதிவுசெய்தார்.

அமைப்புப் பணிகள்

எழுத்தாளர் தேவன் சாருகேசியின் உறவினர். தேவன் அறக்கட்டளை நிர்வாகியாக சாருகேசி பணியாற்றினார். புத்தக நண்பர்கள் என்னும் இலக்கிய அமைப்பிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ரவி தமிழ்வாணன், ஆர்.வி.ராஜன், சாரி ஆகியோருடன் இணைந்து இந்த அமைப்பை நடத்திவந்தார்.

மறைவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாருகேசி ஜனவரி 30, 2019-ல் சென்னை அபிராமபுரத்தில் தன் இல்லத்தில் காலமானார்.

இலக்கிய இடம்

சாருகேசி பொதுவாசிப்புக்குரிய இதழியல் கட்டுரைகளையும் நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதியவர். இதழியல் சார்ந்த இசைவிமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மொழியாக்கங்களும் செய்துள்ளார்.

நூல்கள்

கட்டுரைகள்
  • என் பார்வையில்
  • காமகோடி பெரியவா
  • பாலக்காட்டு மணி ஐயர்
  • குருபூஜை அற்புதங்கள்
  • சுவாமிஜியும் நேதாஜியும்
  • ஜெயம்- மகாபாரதம்
  • காந்தியின் ஆடை தந்த விடுதலை
  • மகாபாரத மனிதர்கள்
  • உங்களுக்குத் தெரியுமா
  • நிர்வாக இயல் நிஜமான அனுபவங்கள்
  • யூத் ஜூகல்பந்தி
நகைச்சுவை
  • ஒரு நாயமான காதல்
  • தும்மலுக்கு கைகொடுப்போம் இருமலுக்குக் குரல்கொடுப்போம்
மொழியாக்கம்
  • விஷ்ணுவின் ஏழு ரகசியங்கள் (மூலம்: அமித் சௌதுரி)
  • சத்யமூர்த்தி கடிதங்கள்
  • அண்ணா
ஆங்கிலம்
  • Maestros of Carnatic Music - Sketches of 100 Musicians / Scholars
  • Talking Theatre - Nadaga Sinthanaigal

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 20:09:16 IST