வ. கீதா
- கீதா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கீதா (பெயர் பட்டியல்)
வ. கீதா (பிறப்பு: டிசம்பர் 18, 1963) தமிழ் எழுத்தாளர், சுயாதீன ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், களச் செயல்பாட்டாளர். தலித்தியம், மார்க்சியம், பெண்ணியம், காந்தியம், பெரியாரியம் உள்ளிட்ட கருத்துவாதங்கள் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். அவை சார்ந்த விவாதங்களை முன்னெடுத்தார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வ.கீதா தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் டிசம்பர் 18, 1963-ல் வரதராஜன், சுசீலா இணையருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இல்லை. போஸ்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். வித்யோதயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார்.
சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில்(MCC) ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். உதவித் தொகையுடன் ஐக்கிய அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் மற்றொரு முதுகலைப்பட்டம் பெற்றார்.
வ.கீதா திருமணம் செய்துகொள்ளவில்லை.
அமைப்புப் பணிகள்
- 1988-ம் ஆண்டு முதல் இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றினார்.
- Tara Books என்ற அமைப்பின் நிறுவனர்.
- 1990-ல் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பெண்கள் குழுவை உருவாக்கினார். 1992, 1997, 2002-ல் மாநில அளவில் பெண்களுக்கான மாநாடுகளை ஒருங்கிணைத்தார். பெண்களுக்கான இயக்கம், எழுத்து, இதழியல், பயிலரங்குகள், வாசிப்புக் கூடுகைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தார்.
- குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் 'சிநேகிதி' என்ற அமைப்பின் உறுப்பினர்.
- தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியேயும், மாணவர்களிடையேயும், சமூகச் செயல்பாட்டாளர்களிடையேயும் அம்பேத்கார் குறித்த வகுப்புகளை நடத்தினார். அம்பேத்கார் பிறந்த மாதத்தை சமூக நீதி மாதமாக அறிவித்து நண்பர்களுடன் இணைந்து மாதம் முழுவதும் நிகழ்வுகளை நடத்தினார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழிலும் ஆங்கிலத்திலும் படைப்புகளை எழுதும் வ. கீதா ஷேக்ஸ்பியர், ஜார்ஜ் எலியட், டால்ஸ்டாய், பாரதியார் ஆகியோரைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார். அம்பேத்கார், ஈ.வெ. ராமசாமி ஆகியோரைப் பற்றி ஆய்வுகள் செய்து புத்தகங்கள் வெளியிட்டார். 1988 முதல் எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து 'பெரியார்: சுயமரியாதை, சமதர்மம்', 'ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்' உள்ளிட்ட நூல்களை எழுதினார். எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து வ. கீதா தொகுத்த ரிவோல்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டது. வ. கீதா எழுதிய ஆங்கில நூல்கள், மும்பை எஸ்.என்.டி.டி. பெண்கள் பல்கலைக்கழகத்தில் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகளும் எழுதினார்.
சர்மிளா ரீஜ் என்னும் முன்னணி தலித் மற்றும் பெண்ணிய அறிஞரின் எழுத்துக்கள் குறித்த ஆங்கிலத் தொகுப்புகளை உமா சக்கரவர்த்தி என்ற பெண்ணியச் சிந்தனையாளருடன் இணைந்து வெளியிட்டார்.
நாடகப் பிரதி
தமிழ்நாட்டுப் பெண்ணிய வரலாற்றை விமர்சனப் பெண்ணியம் சார்ந்து 'காலக்கனவு', 'ஆண்மையோ ஆண்மை' போன்ற நாடகப் பிரதிகளாக எழுதி அ.மங்கையுடன் இணைந்து அரங்கேற்றினார்.
மொழிபெயர்ப்பு
வ. கீதா ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்தார். பெருமாள் முருகனின் கூளமாதாரி (Season of the Palm), நிழல்முற்றம் (Current Show) ஆகிய நாவல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தார்.
மூன்றாம் உலகக் கவிதைகள் உள்ளிட்ட தொகுப்புகளை எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து மொழிபெயர்த்தார்.
மதிப்பீடு
வ. கீதா தலித்தியம், பெண்ணியம், அம்பேத்காரியம், பெரியாரியம் குறித்து தமிழில் வாசிப்புக்குப் பயன்படும் தொடக்க நூல்களை எழுதினார். இருபதாம் நூற்றாண்டு மார்க்சியத்தின் பல்வேறு போக்குகளை வெளிப்படுத்தும் பின்னைய மார்க்சிய சிந்தனைகளை எஸ்.வி.ராஜதுரையுடன் இணைந்து தமிழில் எழுதினார்.
விருது
- ராஜ்கெளதமன் நினைவு விருது - நீலம் பண்பாட்டு மையம் - 2024
நூல்கள்
- சாதி, தலித்துகள், பெண்கள்
- கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
- காலக் கனவு (அடையாளம் பதிப்பகம்)
- பெரியார் சுயமரியாதை சமதர்மம் (எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து)
- பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் (கிறிஸ்டி சுபத்ராவுடன் இணைந்து)
- சாதியும் பால்நிலைப் பாகுபாடும் (பாரதி புத்தகாலயம்)
- உள்ளூர் வரலாறுகள் (டி.தர்மராஜ் உடன் இணைந்து)
- ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் (எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து)
- Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar
- The Periyar Century: Themes in Caste and Gender
மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்திலிருந்து தமிழ்
- சுல்தானாவின் கனவு (துர்கா பாய்)
- குள்ளநரிகளும் அராபியர்களும் (சிறுகதை)
- கடைசி வானத்துக்கு அப்பால் (கவிதைகள்)
- அழகும் உண்மையும்: மார்க்ஸியப் பார்வை (ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன்)
- அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் (ஷீலா ரெளபாத்தம்) (எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து)
- அக்மதோவா: அக்கரைப் பூக்கள்
தமிழிலிருந்து ஆங்கிலம்
- Season of the Palm (பெருமாள் முருகனின் கூளமாதாரி நாவல்)
- Current Show (பெருமாள் முருகனின் நிழல்முற்றம் நாவல்)
உசாத்துணை
இணைப்புகள்
- வ. கீதா - EPW கட்டுரைகள்
- வ. கீதா - நீலம் கட்டுரைகள்
- வ. கீதா - சுயாதீன ஆய்வுக் கட்டுரைகள்
- tarabooks: வலைதளம்
- குழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா
- வ. கீதா - theindiaforum கட்டுரைகள்
- வ.கீதா உரை | பண்டிதர் 175 | ஸ்டாலின் ராஜாங்கம் | Va Geetha
- இந்தியாவில் ஏன் ஒரு கம்யூனிச கோட்பாட்டாளர் கூட உருவாகவில்லை? | தோழர் வ கீதா | V Geetha
- சிந்திக்கும் வாயில் - நூல் வெளியீட்டு விழா - எழுத்தாளர் வ.கீதா
- ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் | வ.கீதா
- மூன்று பெண் எழுத்தாளர்களின் நூற்றாண்டு மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2025, 19:50:50 IST

