under review

கந்த முருகேசனார்

From Tamil Wiki
Revision as of 17:30, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கந்த என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கந்த (பெயர் பட்டியல்)
கந்த முருகேசனார்

கந்த முருகேசனார் (ஏப்ரல் 27, 1902 - ஜூன் 14, 1965) ஈழத்துத் தமிழறிஞர், ஆசிரியர். 'தமிழகம்' என்று தன் வீட்டிற்குப் பெயரிட்டு திண்ணைப்பள்ளியை நடத்தினார். 'தமிழ்தாத்தா' என்று அழைக்கப்பட்டார்.

கந்த முருகேசனார்

பிறப்பு, கல்வி

கந்த முருகேசனாரின் இயற்பெயர் முருகேசு. இலங்கையின் வடமாகாணத்தில் தென் புலோலியில் கந்தப்பர், தெய்வானைப் பிள்ளை இணையருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 27, 1902-ல் பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தனது ஆரம்பக் கல்வியை தட்டாதெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் பயின்றார். புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையான வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் உயர்நிலைக் கல்வியைக் கற்றார். வறுமையின் காரணமாக கல்வி இடையில் நிறுத்தப்பட்டது. க. முருகேசபிள்ளையிடம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார். நன்னூல், யாப்பிலக்கண காரிகை, தொல்காப்பியம் ஆகியவைகளை தானாகக் கற்றார்.

தனிவாழ்க்கை

கந்த முருகேசனாருக்கு இருபத்தியைந்தாவது வயதில் கால்கள் வலுவிழந்தன. இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்கு விளக்கம் சொன்னார். கால்கள் வலுவிழந்தபின் நாத்திகவாதியாக மாறினார்.

கந்த முருகேசனாருக்கு அறிஞர் அண்ணாத்துரை, இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீட்டர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் இருந்தது.

ஆசிரியப்பணி

கந்த முருகேசனார் புற்றளை மகாவித்யாலயம் என்றழைக்கப்படும் சாரதா வித்தியாசாலையில் 1921 முதல் 1933 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். வாதரோகம் வந்த பின்னர் தன் வீட்டை 'தமிழகம்' என்ற திண்ணைப் பள்ளிக் கூடமாக மாற்றினார். தமிழ், சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் ஆகியவை இவரால் இத்திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்டன.

இலக்கிய வாழ்க்கை

கந்த முருகேசனார் தமிழ்ச் செய்யுள்கள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆறுமுக நாவலர் மீது அவர் இயற்றிய 'நல்லை நாவலன் கோவை' (1930) 492 கட்டளைக்கலித்துறைப் பாடல்களைக் கொண்டது. 69 ஆண்டுகளுக்குப் பின் அச்சேறியது. இந்நூலுக்கு மு. கந்தையா, வ. சிவராஜசிங்கம் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

கந்த முருகேசனார் உருவச்சிலை

மறைவு

கந்த முருகேசனார் ஜூன் 14, 1965-ல் காலமானார்.

நினைவு

கந்த முருகேசனாரின் அறுபது வயது நிறைவினை அவரின் மாணவர்கள் பெருவிழா எடுத்துக் கொண்டாடினர். 'தமிழ்த்தாத்தா' என்ற பட்டம் வழங்கி அவரது உருவச்சிலையையும் நிறுவினர். கந்த முருகேசனாரின் நினைவாக புற்றளை மகா வித்தியாலயம், புற்றளை சனசமூக நிலையம், மந்திகை சந்தி ஆகியவற்றில் முருகேசனாரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

நூல்கள்

  • நல்லை நாவலன் கோவை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2023, 06:22:53 IST