under review

எலிசா மால்ட்

From Tamil Wiki
Revision as of 16:02, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எலிசா மால்ட்
எலிசா மால்ட்
எலிஸா மால்ட் இளமையில்

எலிசா மால்ட் (1822 - 1899) (Eliza Caldwell Mault, எலிஸா கால்டுவெல்) கிறிஸ்தவ இறைப்பணியாளர். கல்வியாளர். பிஷப் ராபர்ட் கால்டுவெல்லின் துணைவி.

பிறப்பு, இளமை

எலிஸா மால்ட் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் நாகர்கோயில் பகுதியில் லண்டன் மிஷன் சொசைட்டி இறைப்பணியாளராக இருந்த சார்ல்ஸ் மால்ட், மார்த்தா மால்ட் இணையருக்கு நாகர்கோயிலில் 1822-ல் பிறந்தார். ஐந்து வயதில் கல்வி கற்கும்பொருட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். லண்டனில் லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றபின் 1836-ல் திரும்பி வந்தார். நாகர்கோயிலில் தன் தந்தைக்கும் தாய்க்கும் மதப்பணியில் உதவிபுரிந்தார். எலிஸா தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். முறையான கிறிஸ்தவ இறையியல் கல்வியும் பெற்றிருந்தார்.

தனிவாழ்க்கை

எலிஸா மால்ட் மார்ச் 20, 1844-ல் நாகர்கோயில் கஸ்பா ஆலயத்தில் (ஹோம் சர்ச்) நடைபெற்ற திருமணத்தில் 29 வயதான கால்டுவெல்லை மணந்தார். மெய்ஞானபுரத்தில் இறைப் பணியாற்றி வந்த ஜான் தாமஸ் இத்திருமணத்தை நடத்திவைத்தார். கால்டுவெல்லுடன் எலிஸா இடையன்குடிக்கு சென்று வாழ்ந்தார்.

கால்டுவெல் எலிசா இணையருக்கு இராபர்ட் சார்ல்ஸ் (1845), வில்லியம் ஆல்பிரட் (1852), அடிங்டன் (1857), ஆர்தர் லூயில் (1862) ஆகிய நான்கு மகன்களும் இசபெல்லா (1847), மார்த்தா லூயிசா(1849), மேரி எமிலி (1854) ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர்.

1833-ல் கால்டுவெல் குடும்பம் தூத்துக்குடிக்குச் சென்றது. கால்டுவெல் ஆகஸ்ட் 28, 1891-ல் மறைந்தார். எஸ்பிஜி அமைப்பு அவருடைய குடும்பத்துக்கு ரூ 150 பென்ஷனாக வழங்கியது. இந்திய மக்களுக்கு மதச்சேவை ஆற்றியமைக்காக கிளாட்ஸ்டோன் நினைவு நிதி (Royal Bounty on the recommendation of Mr Gladstone) இந்த உதவித்தொகையை வழங்கியது.

மதப்பணி

எலிஸா கால்டுவெல்லின் மதப்பணிகளுக்கு துணைநின்றார். இடையன்குடியிலும் பின்னர் தூத்துக்குடியிலும் கிறிஸ்தவ இறைச்செய்தியாளராகப் பணியாற்றினார். இடையன்குடிக்கு அருகே உள்ள குட்டம் என்ற ஊரில் ஜெனனா (Zenana) என்னும் அமைப்பை தொடங்கினார். முதலில் இரண்டு பெண்களுக்கு வேதாகமப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பெண்கள் அக்காலத்தில் இற்செறிப்பு முறையால் வீடுகளுக்குள் வாழ்ந்த நாடார் இனப்பெண்களுக்கு இல்லம் தேடிச்சென்று மதபோதனை செய்தனர். இது ஜெனனா ஊழியம் என அழைக்கப்பட்டது. இவர்களுக்குரிய நிதியை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கடிதம் வழியாக எலிஸா திரட்டினார்.

கல்விப் பணி

எலிஸா கால்டுவெல் தொடங்கிய கல்விப்பணிகளிலும் இணைநின்றார். 1842-ல் இடையன்குடியில் பெண்களுக்கான பள்ளியும் பின்னர் 1844-ல் பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளியும் அவரால் தொடங்கப்பட்டன. எலிஸா உதவியுடன் கால்டுவெல் 1884-ல் தூத்துக்குடி வடக்கூரில் ஒரு பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். 1887 நவம்பர் மாதத்தில் தூத்துக்குடியில் விக்டோரியா பெண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியை எலிஸாவும் கால்டுவெல்லும் தொடங்கினார்கள்.

1883-ல் புதுக்கோட்டையில் அருள்திரு ஷாராக் அவர்களால் நிறுவப்பட்ட உண்டு உறைவிடப்பள்ளியின் நிலை மிக மோசமாக இருந்தமையால் எலிஸா நிதி சேர்த்து அனுப்பி 60 பெண்கள் தங்கி பயின்றுவந்த அந்த அமைப்பை நீடிக்க உதவினார்.

"என் மனைவி தன் திறமையினால் பள்ளிக்கூடங்களை நன்கு நடத்தி தான் ஒரு மிஷனரியின் மனைவி என்பதை செயலில் நிரூபித்துவிட்டார். முதலில் மிஷனரியாகவோ பின்னர் பேராயராகவோ ஏதாவது நன்மையானதை நான் செய்திருந்தால் அந்தப்பெருமை இறைவனுக்குப்பிறகு அவர் எனக்கு இரக்கமாய் அளித்த என் மனைவியின் முடிவெடுக்கும் திறமை, ஆராய்ந்து பார்க்கும் கூர்மை, இடைவிடா மூயற்சி மற்றும் பொறுமை ஆகியவற்றையே சாரும்" என்று கால்டுவெல் தன் நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.

தொழில்

எலிசாவின் அன்னையாகிய மார்த்தா மால்ட் நாகர்கோயிலில் பட்டுநூலில் லேஸ் தயாரிக்கும் கலையை, மதம் மாறிய உள்ளூர்ப்பெண்களுக்குக் கற்பித்து, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கி அளித்து ஒரு பொருளியல் மறுமலர்ச்சியை உருவாக்கியிருந்தார். குச்சிகளைப் பயன்படுத்தி லேஸ் பின்னப்பட்டமையால் இந்தக் கலை குச்சித்தையல் என்றும், மிஷனரிகளின் வராண்டாக்களில் அமர்ந்து இப்பணியைச் செய்தமையால் வராண்டாத் தையல் என்றும் அழைக்கப்பட்டு மருவி பின்னர் ரேந்தா தையல் என ஆகியது. எலிஸா ரேந்தாத் தையலை இடையன்குடியிலும் அருகேயுள்ள ஊர்களிலும் பெண்களிடம் அறிமுகம் செய்தார். இத்தையலுக்கு லண்டனில் நல்ல வரவேற்பிருந்தமையால் இதைச் செய்த பெண்களுக்கு தொடர்ச்சியான தொழில் அமைந்தது. நூறாண்டுகள் வரை இடையன்குடி, தூத்துக்குடி பகுதிகளில் லேஸ் பின்னும் கலை தீவிரமாக இருந்தது.

மறைவு

எலிஸா மால்ட் 1899-ல் மறைந்தார். அவருடைய உடல் இடையங்குடியில் கால்டுவெல் கட்டிய தேவாலயத்தின் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது

வரலாற்று இடம்

எலிஸா மால்ட் தமிழ்ச்சூழலில் இறைப்பணியும் கல்விப்பணியும் ஆற்றிய கிறிஸ்தவ போதகர்களில் குறிப்பிடத்தக்கவர். எலிஸா மால்டுக்கு தமிழகத்தின் பெண்கல்வியின் உருவாக்கத்திலும் பெண்களின் பொருளியல் தற்சார்பிலும் முன்னோடியான பங்களிப்பு உண்டு.

உசாத்துணை

  • அருட்பணியாளர் ராபர்ட் கால்டுவெல். யோ ஞானசந்திர ஜாண்சன்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 21:31:03 IST