first review completed

கே.ஆர். வாசுதேவன்

From Tamil Wiki
கே.ஆர். வாசுதேவன் (நன்றி: தென்றல்)

கே.ஆர். வாசுதேவன் (மார்ச் 20, 1922 - ஆகஸ்ட் 19, 1987) இதழாளர், அரசியல்வாதி, காந்தியவாதி, சமூகசேவகர், எழுத்தாளர் என பல களங்களில் இயங்கியவர். தினமணி, தினமணி கதிர், ரத்னபாலா போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்து பல எழுத்தாளர்களை உருவாக்கியவர்.

பிறப்பு, கல்வி

கே.ஆர்.வாசுதேவன், மார்ச் 20, 1922-ல், தஞ்சை மயிலாடுதுரையில் எம்.ஏ.ராஜகோபாலன், பட்டம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்வியை பாபநாசத்தில் முடித்தார். திருச்சி தேசியக் கல்லுாரியில் இளங்கலை பட்டம் பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். சீனிவாச சாஸ்திரியார் இவரின் ஆசிரியர். தந்தை ராஜகோபாலன் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தார், சமூக சேவகர்.

தனி வாழ்க்கை

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1943-1953 வரை மத்திய அரசின் கலால் துறையில் பணியாற்றினார். அரசுப் பணியை துறந்து, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியினரின் படிப்பு, வாழ்க்கைத் தரம் உயரப் பணியாற்றினார்.அவர்களுக்கு வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டியதில் பெரும் பங்காற்றினர். 1967-ல் இதழியல் துறையில் நுழைந்தார். நாகபுரி, சண்டிகர் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மனைவி மங்கா. அதிமுக முன்னாள் எம்.பி.யான வா. மைத்ரேயன் இவர் மகன்.

கே.ஆர். வாசுதேவன் ஜவஹர்லால் நேருவுடன்

அரசியல் வாழ்க்கை

கோபாலகிருஷ்ண கோகலே துவக்கிய "இந்திய ஊழியர் சங்கத்தின்" (Servants of India) ஆயுள் கால உறுப்பினரானார். 1952-ல் நேரு சென்னை வந்தபோது இந்திய சேவகர் சங்கத்தின் சார்பாக வாசுதேவன் வரவேற்றார். அத்துடன் இச்சங்கத்தின் கேரள மாநில கிளையின் பொறுப்பாளராக பதவி வகித்தார். ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் இணைந்து செயல்பட்டார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் பதவிவகித்தார். சுதந்திரா கட்சி, பா.ஜ.க வில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். கிழக்கு தாம்பரத்தில் இயங்கிய அரவிந்தர் சங்கத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

இலக்கிய வாழ்க்கை

கே.ஆர். வாசுதேவன்

கே.ஆர். வாசுதேவன் நாக்பூர், சண்டிகரில் வசித்தபோது, 'நாக்பூர் டைம்ஸ், ஹிதவாதா, தி டிரிபியூன்' ஆங்கில இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றினர். 1976-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது சென்னை வந்தார். ஏ.என். சிவராமனுக்குப் பிறகு 'தினமணி’ நாளிதழின் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1977-ல்'தினமணி கதிரிலிருந்து' எழுத்தாளர் சாவி விலகியபிறகு ஆசிரியராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். தினமணி கதிரை இலக்கிய இதழாக உருவாக்கினார். எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினத்தை சிறுகதைகள், தொடர்கள் எழுத ஊக்குவித்தார்.

தினமணியிலிருந்து விலகி 'புஷ்யம்’ இதழைத் தொடங்கினார். இதனால் நஷ்டம் ஏற்பட்டது. தொடர்ந்து, சிறுவர் இதழான ரத்னபாலாவின் ஆசிரியரானார். 1979-87 தமிழ்ச் சிறார் உலகின் திருப்புமுனையாக இக்காலகட்டம் அமைந்தது. பஞ்ச தந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள், பொது அறிவுக்கதைகள், தமிழ் இலக்கிய, வரலாற்று, புராண, இதிகாச, அறிவியல் கதைகளை அறிமுகப்படுத்தினார். திருமுருக கிருபானந்த வாரியார், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், டாக்டர் பூவண்ணன், கு. கணேசன், கொ.ம. கோதண்டம் எனப் பலரது படைப்புகளையும் இடம் பெறச் செய்தார். வண்ணச் சிறார் கதைகளும், ஓவியங்களும் இடம் பெறச் செய்தார். ஜெயமோகன், அரவிந்த் சுவாமிநாதன் போன்றோரின் படைப்புகள் ரத்னபாலாவில் ஆசிரியர் குறிப்புடன் வெளியாகியுள்ளன.

பல்வேறு பத்திரிகைகள், இதழ்களிலும் பணியாற்றி உள்ளார். மரபுக்கவிஞர்களை ஊக்குவித்தார். மயிலாப்பூரில் 'கவிதை இன்பம்’ அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் பிரபல கவிஞர்களை அழைத்து வந்து கவியரங்கம் நடத்தினார். இதய மலர்கள், காவியத் தென்றல் உட்பட ஏழு நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள், 'இதய மலர், காவியத் தென்றல், வேதம் பிறந்தது' என்ற தலைப்புகளில் நுாலாகவும், நேரு, இந்திராவுக்கு எழுதிய கடிதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, 'தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்' என்ற பெயரில் நுாலாகவும் வெளியாகின.

மறைவு

இதய நோயால் பாதிக்கப்பட்டு கே.ஆர்.வாசுதேவன் ஆகஸ்ட் 19, 1987-ல், தன் 65-ஆவது வயதில் காலமானார்.

நினைவு

2022-ல் கே.ஆர். வாசுதேவனின் நூற்றாண்டு நினைவை ஒட்டி இவரது மகன் டாக்டர் வா. மைத்ரேயன் அவரின் நினைவுமலர் ஒன்றைக் கொணர்ந்தார்.

கே.ஆர். வாசுதேவன் நூல்கள்

நூல்கள்

  • இதயமலர்
  • காவியத் தென்றல்
  • காலம் தந்த தலைவன்
  • வேதம் பிறந்தது
  • பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
  • தின் பாஸ்கோ
  • தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.