under review

காவேரியாற்றின் வெள்ளச்சிந்து

From Tamil Wiki
Revision as of 15:46, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காவேரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காவேரி (பெயர் பட்டியல்)
காவேரியாற்றின் வெள்ளச்சிந்து நூல்

காவேரியாற்றின் வெள்ளச்சிந்து (1924), சிந்து இலக்கிய வகை நூல்களில் ஒன்று. 1924-ம் ஆண்டில், காவேரி ஆற்றில் பெருகிய வெள்ளத்தால் மக்கள் பட்ட துயரங்களைக் கூறுகிறது. இந்நூலை இயற்றியவர் S.S.M. அர்த்தனாரிசாமி செட்டியார்.

பிரசுரம், வெளியீடு

காவேரியாற்றின் வெள்ளச்சிந்து நூல், 1924,-ல் பவானி, கோல்டன் பிரஸில் அச்சிடப்பட்டு வெளியானது. இதன் விலை, ஒரு அணா. இதன் ஆசிரியர், S.S.M. அர்த்தனாரிசாமி செட்டியார்.

நூல் அமைப்பு

ஜூலை 26, 1924 அன்று காவேரி ஆற்றில் வெள்ளம் பெருகியது. அதனால் பவானி நகரத்திலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏற்பட்ட துயரங்களையும், அப்போது நிகழ்ந்த சம்பவங்களையும் காவேரியாற்றின் வெள்ளச்சிந்து நூல் நூல் விவரிக்கிறது.

காவேரியாற்றின் வெள்ளச்சிந்து நூல்,

கள்ளங்கபடில்லாத காவேரி மாநதியில்
உள்ளம் நடுநடுங்கி ஊரைவிட்டனேகர் போக...

எனத் தொடங்குகிறது. கடவுள் வாழ்த்தாக விநாயகர் வணக்கம் இடம்பெற்றுள்ளது. பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பிரிக்கப்பட்டு, இரண்டடி சிந்துக் கண்ணிகளால் இயற்றப்பட்டுள்ளன. கும்மி, நொண்டிச் சிந்து போன்ற வகைகளிலும் இந்நூலில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

  • ஜூலை 26 , 1924 அன்று காவேரி ஆற்றில் வெள்ளம் பெருகியது. இதனால் பவானி நகரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
  • வெள்ள நீர் ஊர்கள், கிராமங்கள், வயல்கள் என்று புகுந்து ஆடு, மாடு, மக்கள், தொட்டில் பிள்ளைகள் என்று பலரையும் கவர்ந்து சென்றது.
  • பெரு வெள்ளம் பல வீடுகளை, கிராமங்களை அழித்தது. சேமிப்பை அழித்துச் சொத்துக்களைச் சூறையாடியது.
  • பிரிட்டிஷ் அதிகாரிகள் வெள்ளத்தைக் காண வந்தனர். காவேரிப் பாலத்தின் மீதேறி அங்கும் இங்கும் சென்று புகைப்படம் எடுத்தனர்.
  • சப் இன்ஸ்பெக்டர் ஆர்.எஸ். பழனி செட்டியார் துயரைடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறி உதவினார்.
  • பெரு வெள்ளத்தின் விளைவால் பலர் இறந்தனர். பலர் ஊரை விட்டுச் சென்றனர்.

மதிப்பீடு

சிந்து நூல்கள் பல்வேறு நிகழ்வுகளைப் பாடுபொருள்களாகக் கொண்டு இயற்றப்பட்டன. அவற்றுள் வெள்ளம் பற்றிய சிந்து நூல்களும் அடக்கம். தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ள நிகழ்வுகளை மையமாக வைத்துப் பல சிந்து நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் காவேரியாற்றின் வெள்ளச்சிந்து நூலும் ஒன்று.

வெள்ளப்பெருக்கினால் விளைந்த சேதம், மக்களின் துயரம், அதிகாரிகளின் செயல்பாடுகள் எனப் பல விஷயங்களைக் கூறும் நூலாக, வரலாற்று ஆவணமாக இந்நூல் உள்ளது.

பாடல்கள்

வெள்ளத்தின் தோற்றம்

சூலையிருபத்தா றாந்தேதியில் நீர்பெருக்கம்
காலைமுதலிரண்டு நாள்வரையதிகமாக

பவானியாறுதனில் பலத்தவெள்ள மென்றுசொன்ன
அவாவுடன் தனக்கு அந்தப்பெயர் வேண்டுமென்று

சின்னாறுபெருக்கெடுத்தால் சீரேனோ எந்தனுக்கு
இன்னாவதும் பெருமை எனக்குத் தரவேண்டுமென்று

சிலவூரழித்தாவது சின்னாறுவென்றுசொல்லி
பலவூருநானழித்தேன் பாருமென் திறமையென்று

கல்நெஞ்சுடையபல கள்ளர்கூட்டத்திலொரு
புல்நெஞ்சுடையதனவான் கிடைத்தவாரெனவே

குடகுமாநகரில் வெகு குறுகலாமென்று சொலும்
அடமெலாம் தீர்த்துக்கொள்வேன் ஆருங்காணவென்று சொல்லி

பெருக்கமெடுத்துரைக்க பேசவாய்கூடலையே

வெள்ளத்தின் துயரம்

நெருஞ்சிப்பேட்டை சாமியார்மடத்திலே நீர்புகுந்து
துரும்பாய்பலபொருள்கள் தூக்கிவேகமாகவேதான்

அம்மாப்பேட்டைநகரும் அடுத்தநெடுங்குளநகரும்
சும்மாவிட்டோடிஜன துயர்க்கடலில் விழுந்தழுக

சிங்கம்பேட்டைநகரில் தீவிரமாயுட்புகுந்து
அங்கம்துடித்திடவே அலைக்கையினால் கூரைதூக்கி

காடப்பனூருடன் வெள்ளாளபாளையம் நுழைந்து
மாடமாளிகைகளெல்லாம் மடமடென வீழ்த்திடவே

புள்ளாக்கவுண்டம்பட்டி புளியம்பட்டி முதலியவூர்
வெள்ளாமையுடன்பலவாய் வீடழித்து வேகமுடன்

சின்னப்பநாய்க்கன் பாளையந்தனிலே தீவிரமாய்
என்னப்பா என்றழவே யேகிபலவீடுவீழ்த்தி

ஆடுடன்மாடுகளும் அநேகத்தட்டுப்போர்களையும்
வீடுடன் தானியமும் வேகமாகவாரிக்கொண்டு

தொட்டிலுடன்பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டுமேடுதனி
காட்டுக்கரடுகளில் கடுகிஜனம்போகச்செய்து

ஆடுபோச்சுமாடுபோச்சு ஐய்யையோ வீடுபோச்சு
தேடும்பொருள்கள் போச்சு தெய்வமேகாவென் றழுக

அதிகாரிகள் செயல்

பாலத்தின்கண்கள் எல்லாம் மூடிஜலம் பரந்துவந்தது பாலத்தின்மேல்
சேலத்திலிருந்து வந்த கனம் துரையவர்கள்சீரான இஞ்சினியர்

இஞ்சினியரவர்களுடன் மாட்சிமை தங்கிய ஜில்லா கலெக்டர் துரை
வஞ்சியரே மோட்டார் வண்டியில்இரண்டு வள்ளல்களும் வந்து தானிறங்கி

வந்தனோபசாரம் செய்தார்கள் பின்னும் வலுமையாகவே பாலத்தின்மேல்
சிந்தைவலுவுடன் முன்செலுமென்னலும் சேர்ந்துநடந்தந்த நால்வர்களும்

பக்குவமாயிரு பக்கத்திலும்சென்று பார்த்துக்கடைசிவரையிலும் போய்
சொக்கிலுயர்ந்தவர் நால்வர்களும்நின்று சொகுசாய் பிடித்தனர்போட்டோவை

போட்டோபிடித்தனர் நாலுதிசையிலும் பூரணமாயது தீர்ந்ததின் பின்
ஜோடியாய் நால்வருமேதிரும்பிவீரர் நிலைக்கு வந்ததைக்கேளடியே

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Dec-2023, 19:51:50 IST