under review

நெஞ்சொடு மெலிதல்(கைக்கிளை)

From Tamil Wiki
Revision as of 03:44, 22 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நெஞ்சொடு மெலிதல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் கொண்ட பெண் தன் துயரத்தை நெஞ்சிடம் கூறி வருந்துதலை கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

கொளு1

புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் இதன் இலக்கணத்தைக் கூறுகின்றன. இனிமையாகப் பேசும் இப்பெண் (தலைவனைத் தேடி) இருளின்கண் செல்ல விரும்பித் தன் மனத்திடம் கூறுதல்

அஞ்சொல் வஞ்சி அல்இருள் செலீஇய
நெஞ்சொடு புகன்று நிலை உரைத்தன்று(கொளு 15.11)

வெண்பா

மல்ஆடு தோளான் அளியவாய் மால் இருள்கண்
செல்லாம் ஒழிக செலவு என்பாய் - நில்லாய்
புனைஇழை இழந்த பூசல்
நினையினும் நினைதியோ வாழி என் நெஞ்சே (304)

பொருள்: நெஞ்சே! மற்போர் வல்லவனான தலைவனின் அன்பிற்கு ஆசைப்பட்டு மயக்கம் தரும் இருளில் செல்லவேண்டாம் என்று என்னிடம் சொல்கிறாய்; ஆனால் என் அணிகலன்கள் சோர்ந்து விழும் நிலையை நீ எண்ணிப்பார்க்கவில்லையா

கொளு 2

வளையல்களை நெகிழச் செய்தவன் இடத்திற்குச் செல்லக் கருதியுள்ளேன்; பெண்கள் அனைவரும் இதனை அறிக என்று கூறுதல்.

வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன்
அரிவையர் அறிக என உரைப்பினும் அதுவே(கொளு 15.12)

வெண்பா

நல்வளை ஏக நலம் தொலைவு காட்டிய
செல்லல் வலித்தெனச் செம்மல்முன்பு - இல்லாத
வம்ப உரையொடு மயங்கிய
அம் பல் பெண்டிரும் அறைக எம் அலரே (305)

பொருள்: அழகிய வளையல் கழல என் அழகினை அழியச் செய்கிறவனைக் காணக் கருதியுள்ளேன்; புதுப்புது வார்த்தைகளில் பெண்களே என்னைப் பற்றி அலர்தூற்றுங்கள்.

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 19:01:25 IST