under review

தோலுழிஞை

From Tamil Wiki
Revision as of 03:44, 7 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

தோலுழிஞை(தோல் உழிஞை) உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. தோல் - கிடுகுப் படை (கேடயம் ஏந்திய படை). தோலினை (கேடயத்தை) உடைய வீரரின் திறனைக் கூறுவது தோல் உழிஞை. கேடயம் என்பது கேடயம் ஏந்திய வீரருக்கு ஆகு பெயராகியது.

கிடுகுப் படை என்பது பண்டைக் காலப் போர்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான கேடயம் ஆகும். இதைப் போரில் வீரர்கள் தங்கள் தலைக்கு மேலே பிடித்துக்கொண்டு, எதிரிகளின் அம்புகள் மற்றும் ஈட்டிகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டனர்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெற்றியையும் புகழையும் விளைவிக்கும் என்று சொல்லும்படி பண்டுதொட்டு வந்த கிடுகுப் படையைப் பாராட்டுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வென்றியொடு புகழ் விளைக்கும் என்னத்
தொன்றுவந்த தோல் மிகுத்தன்று(கொளு 6.12)

வெண்பா

நின்ற புகழ் ஒழிய நில்லா உயிர் ஓம்பி
இன்று நாம் வைகல் இழிவாகும் - வென்று ஒளிரும்
பாண்டில் நிரைத்தோல் பணியார் பகை அரணம்
வேண்டின் எளிது என்றான் வேந்து (106)

பொருள்: நம் உழிஞை வேந்தன், பகைவரை வென்று விளங்கும் நம்முடைய கிடுகுப்படை, பணியாத பகைவரின் அரணைக் கைப்பற்ற வேண்டுமெனக் கருதின், அவ்வாறு கைப்பற்றுதல் எளியதாம் என்று சொன்னான். ஆதலால், கிடுகுப் படையைச் சேர்ந்த நாம் இதுவரை வந்த புகழ் ஒழியும்படியாகவும், நில்லா உயிரைக் காக்கும்படியாகவும் இன்று போரிடாமல் சோம்பலுடன் தங்கியிருந்தால், அஃது, இழிந்த செயலாகிப் போகும்’ என்கின்றான் கிடுகுப் படைத் தலைவன்.

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jul-2025, 10:04:34 IST