under review

துணை வஞ்சி

From Tamil Wiki
Revision as of 03:44, 7 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

துணைவஞ்சி வஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. இரு வேந்தர்கள் போரிட முனயும் போது அவர்களைத் துணைவர்களாகும்படி புலவரோ மற்றொருவரோ வேண்டி சமாதானம் செய்வதும், தண்டிக்கப்படும் உயிர்களைக் காப்பதும் துணை வஞ்சி. இத்துறை தொல்காப்பியத்திலோ, புறப்பொருள் வெண்பாமாலையிலோ குறிப்பிடப்படவில்லை. இத்துறை பன்னிரு படலம் என்ற பண்டை இலக்கிய நூலில் காணப்படுகிறது.

புறநானூற்றில் துணைவஞ்சி

புறநானூற்றில் துணைவஞ்சித் துறையில் 6 பாடல்கள் உள்ளன. இரு மன்னர்களுக்கிடையே நல்லுறவு வேண்டியோ அல்லது ஒருவரை தண்டமையிலிருந்து காக்கவோ வேண்டிப் பாடப்பட்டவை.

  • புறநானூறு 36-கருவூரில் சேர நட்டை முற்றுகையிட்டு காவல் மரத்தை வெட்டும்போது கோட்டைக்குள் பதுங்கியிருக்கும் சேரனைத் துணைவனாக எண்ணுமாறு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் வேண்டியது.
  • புறநானூறு 45- கோட்டையை அடைத்குக்கொண்டு உள்ளே இருந்த நெடுங்கிள்ளியும், கோட்டையை முற்றுகையிட்டிருந்த நலங்கிள்ளியும் விட்டுக்கொடுத்துத் துணைவராகும்படி கோவூர் கிழார் வேண்டியது.
  • புறநானூறு 46- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலடியில் இடும்போது தடுத்து அம் மக்களுக்குத் துணையாகும்படி கோவூர் கிழார் வேண்டியது.
  • புறநானூறு - சோழன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி நலங்கிள்ளி தன் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது உறையூருக்கு வந்த புலவர் இளந்தத்தனை ஒற்று வந்தான் என எண்ணிக் கொல்லச் சென்றபோது தடுத்து நிறுத்தி கோவூர் கிழார் காப்பாற்றியது.
  • புறநானூறு 57- பிறர் நாட்டைச் சூறையாடும்போது அந்நாட்டுக் காவல் மரத்தை வெட்டவேண்டாம். (பகைவன் மக்களைத் துணையாகக் கொள்க) என காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் வேண்டியது.
  • புறநானூறு 213- கோப்பெருஞ்சோழன் மகன்கள் தமக்குள் பகைமை கொண்டிருந்தனர். (நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோர் இவர்கள்) அதனால் அரசன் அவர்களுக்கு அரசு தராமல் தானே ஆண்டுவந்தான். அரசனுக்குப் பின்னர் ஆட்சி யாருக்குச் சேரும் என்னும் உண்மையை எடுத்துக் கூறி மக்களோடு துணைநின்று நாட்டை விட்டுக்கொடுக்கும்படி புல்லாற்றூர் எயிற்றியனார் கூறியது. (கோப்பெருஞ்சோழன் விட்டுக்கொடுத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான்.

எடுத்துக்காட்டு

புறநானூறு 46
  • பாடியவர்: கோவூர் கிழார்
  • பாடப்பட்டோன் - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
  • திணை: வஞ்சி; துறை: துணை வஞ்சி

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானையின் காலின்கீழ் இட்டுக் கொல்ல முற்பட்டபோது, கோவூர் கிழார் பாடி அவர்களைக் காப்பாற்றியது.

நீ புறாவின் துன்பம் போக்கிய சோழன் (சிபி) மரபில் வந்தவன்.இந்தக் குழந்தைகள் நிலத்தை உழுது உண்ணும் உழவர்களின் துன்பத்தைக் கண்டு அச்சம் கொண்டு தன்னிடம் இருந்ததைப் பகிர்ந்து கொடுத்து உண்ட மன்னனின் மக்கள். உன் யானை தன்னை மிதிக்க வருவதைக் கண்டு தந்தை இல்லாமல் அழும் அழுகையை மறந்து நிறுத்திக் கொண்டவர்கள்.அத்துடன் மன்றத்தில் புதியவர்கள் இருப்பதைக் பார்த்து மருண்டு மெல்லிய உள்ளம் உடையவர்கள். நான் சொல்லியனவற்றைக் கேட்டு எண்ணிப்பார்த்த பின்னர் நீ விரும்பியதைச் செய்க.

உசாத்துணை

துணை வஞ்சிப் பாடல்கள், வஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jul-2025, 09:57:51 IST