குற்றுழிஞை
குற்றுழிஞை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. மதிலைக் குறுகிச் சென்று போர் செய்வதால் இது குற்றுழி்ஞை எனப்பட்டது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் மூன்று கொளுப்பாடல்கள் இதன் இலக்கணத்தை வகுக்கின்றன.
கொளு 1
பகைவரது அழிவற்ற அரண் ஒன்றின்மேல், தான் ஒருவன் மட்டுமே நின்று உழிஞை மறவன் ஒருவன் தன் வீரத்தை வெளிப்படுத்திப் போரிடுவது .
கருதாதார் மதில் குமரி மேல்
ஒருதானாகி இகல் மிகுத்தன்று(கொளு 6.13)
வெண்பா
குளிறு முரசினான் கொண்டான் அரணம்
களிறும் கதவு இறப் பாய்ந்த - ஒளிறும்
அயிற்றுப் படைந்த அணிஎழு எல்லாம்
எயிற்றுப் படையால் இடந்து (107)
வெண்பா: உழிஞை வேந்தன் நொச்சியாரின் அரணை வென்று கைப்பற்றக் கருதினான். எயிலின் புறத்தே காத்து நின்ற நொச்சியாரை வென்று அரணின் வாயிலை அடைந்தான். அடைந்ததும் அவன் களிறுகளும், தமது கொம்புகளால் வாயில் கதவுகளும் உடையும்படி குத்திப் பாய்ந்தன.
கொளு 2
வீரச்சங்கம் முழங்க ஊதுகொம்பு ஆரவாரிக்க உழிஞை மறவர்கள் நொச்சியாரின் கடத்தற்கரிய காவல்காட்டினைக் கடந்து எயிலுக்குள் புகுவதும் குற்றுழிஞை.
வளை ஞரல அயிர் ஆர்ப்ப
மிளைகடத்தலும் அத்துறை ஆகும்(கொளு 6.14)
வெண்பா
அந்தரம் தோயும் அமை ஓங்கு அருமிளை
மைந்தர் மறிய மறங்கடந்து - பைந்தார்
விரை மார்பின் வில் நரல் வெம்கணை தூவார்
வரைமார்பில் வைகின வாள் (108)
பொருள்: உழிஞை மறவருடைய வாள்கள், கடத்தற்கரிய காவற்காட்டில் நின்று போர் புரியும் நொச்சி மறவர் முதுகிடும்படி போரை வென்று, நொச்சி மறவருடைய மலை போன்ற மார்பிடத்தே தங்கின.
கொளு 3
பெருமையினை உடைய கிடுகுப் படையைக் கொண்ட உழிஞை மறவர்கள் மறக்களிப்பால் கூத்தாடியபடி அரணினைக் குறுகுவது
படரும் தோல் படை மறவர்
ஆடலொடு அடையினும் அத்துறை ஆகும்(கொளு 6.15)
வெண்பா
நிறைபொறி வாயில் நெடுமதில் சூழி
வரைபுகு புள்ளின மான - விரைபடைந்தார்
வேல்ஏந்து தானை விறலோன் விறல் மறவர்
தோல் ஏந்தி ஆடல் தொடர்ந்து (109)
பொருள்: மிக்க வெற்றியை உடையவன் உழிஞை மன்னனின் மறவர்களும் வெற்றியாளரே. இவர்கள் கிடுகுப்படையைத் தம் கரங்களில் ஏந்தி மறக்களிப்பால் ஆடத் தொடங்கினார்கள்; ஆடியபடியே பெரிய மதிலின் உச்சியை விரைந்து சேர்ந்தார்கள். அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த காட்சி மலையின் உச்சியை அடைந்த பறவைக் கூட்டம் போன்று இருந்தது.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.