under review

கற்பு முல்லை(பொதுவியல் திணை)

From Tamil Wiki
Revision as of 18:42, 26 June 2025 by Logamadevi (talk | contribs)

கற்பு முல்லை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. போர்த்துறைகளில் இவை அடங்காததால் பொதுவியல் திணையில் கூறப்படுகின்றன.

கற்பு முல்லை கற்பின் மிகுதியைக் கூறுவது. கணவன் அருகில்லாத போதும் தன் கற்பையே நிறையாகவும், காவலாகவும் கொண்டு வாழ்தலையும், விருந்தோம்பும் செல்வமிக்க தன் புகுந்த இல்லத்தின் செல்வத்தை சிறப்பித்துக் கூறலும் இத்துறையில் அடங்கும்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் மூன்றுகொளுப்பாடல்கள் இத்துறையின் இலக்கணத்தைக் கூறுகின்றன.

கொளு 1

பொன்மேனியும், பொலிவமைந்த கண்களையும் உடைய ஒருத்தி, நன்மையை அறிவானான தன் கணவனுடைய நலத்தை மிகுத்துச்சொல்லியது,

பொன்திகழ் சுணங்கின் பூ கண் அரிவை
நன்றறி கொழுநனை நலமிகுந்தன்று (கொளு 13.8)

வெண்பா

நெய்கொள் நிணம் தூநிறைய அமைத்திட்ட
குய்கொள் அடிசில் பிறர் நுகர்க - வைகலும்
அங்குழைக் கீரை அடகும் இசையினும்
எம்கணவன் நல்கல் இனிது (282)

பொருள்: நெய்யைத் தன்னிடத்தே கொண்ட, நிணமும் தசையும் மிகுதியாகக் கூட்டி ஆக்கின, பொரிக்கறியை உடைத்தான சோற்றைப், பிறர் அருந்த, அழகிய தளிரையுடைய கீரையாகிய இலைக்கறியையே அருந்தினாலும், எமது கணவன் எமக்கு அருளும் அதுவே, எமக்கு நுகர்தற்கு இனிதாயிருக்கும். கணவன் அருளுதலைப்பெற்றால் கீரை இனிது எனக் கற்பின் மிகுதியால் உரைத்த இயல்பு கூறப்பட்டது.

கொளு 2

கணவன் பிரிந்த காலத்தில் தலைவி தன் உள்ளத்துத் துன்பம் பிறர்க்குத் தோன்றாமல் காக்கும் தன் நிறையே தனக்குக் காவலாக வாழ்வதைச் சிறப்பித்தல்.

மேவரும் கணவன் தணப்பத் தன்வயின்
காவல் கூறினும் அத்துறை ஆகும் (கொளு 13.9)

வெண்பா

மௌவல் விரியும் மணம் கமழும் மால் மாலைத்
தௌவல் முதுகுரம்பைத் தான் தமியள் - செவ்வன்
இறைகாக்கும் இவ்உலகில் இல் பிறந்த நல்லாள்
நிறைகாப்ப வைகும் நிறை (283)

பொருள்: மன்னவன் காத்துவருகின்ற இந்த உலகினிடத்தே, நற்குடியிலே பிறந்த நற்பண்பினை உடைய பெண் முல்லை மலரும் மணங்கமழும் மயக்கத்தையுடைய மாலைப் பொழுதிலே, அழிந்த பழங்கூரையினைக் கொண்ட குடிலில், தான் தனியளாகவே இருக்கின்றனள்; எனினும் காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கமாகிய நிறையுடைமை காத்தலினாலே, அவளுடைய கற்பும் நிலைபெற்று நின்றது.

கொளு 3

நாளும் விருந்தோம்பும் செல்வம் செழித்த புக்ககம் சென்ற தலைவி, அத்தகைய கணவனது பெருஞ் செல்வத்தைப் புகழ்ந்து கூறுதல்.

திருவளர் நல்நகர் அடைந்த கொழுநன்
பெருவளம் ஏந்தினும் அத்துறை ஆகும் (கொளு 13.10)

வெண்பா

ஊழிதோறும் ஊழி தொழப்பட்டு உலைவின்றி
ஆழிசூழ் வையத்து அகம் மலிய - வாழி
கருவரை மார்பின் எம் காதலன் நல்க
வருவிருந்து ஓம்பும் வளம் (284)

பொருள்:வலிய மலைபோன்ற மார்பகத்தை உடையவனான எம் காதலன் அருள,யான் வருகிற விருந்தினரைப் போற்றுகின்ற இந்த வளமானது, நெடுங்காலந்தோறும் நெடுங்காலந் தோறும் வணங்கப்பட்டுக் கெடுதலின்றிக், கடல் சூழ்ந்த இவ்வுலகிடத்தே பெருக வாழ்வதாக!

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page