being created

ஒள்வாள் அமலை

From Tamil Wiki

ஒள்வாள் அமலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரின் வெற்றியைக் கொண்டாட மன்னனுடன் வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலை.

விளக்கம்

தொல்காப்பியம் இதனை வாளோர் ஆடும் அமலை எனக் குறிப்பிடுகிறது. வீழ்ந்த பகை வேந்தனைச் சுற்றி வென்ற வேந்தனின் வாள் வீரர்கள் ஆடும் அமலை என்பது தொல்காப்பியர் கருத்து.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வலிமையான தோளையுடய வீரர்கள் கையில் வாளோடு ஒலிக்கும் கழல்களை உடைய மன்னனுடன் ஆடுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வலிகெழு தோள் வாள் வயவர்
ஒலிகழலான் உடன் ஆடின்று (கொளு 7.21)

வெண்பா

வாளை பிறழும் கயம் கடுப்ப வந்தடையார்
ஆள் அமர் வென்றி அடுகளத்துத் - தோள் பெயராக்
காய்ந்தடு துப்பின் கழல் மறவர் ஆடினார்
வேந்தொடு வெள்வாள் விதந்து (147)

பொருள்:வீரர்கள் ஆடும் நிலையைக் குளத்தில் மீன்கள் பிறழ்வது போலக் கூரிய வாள்களைச் சுழற்றிக்கொண்டு வென்ற மன்னன் வீரர்கள் அவனுடன் கூடி ஆடினர்.

எடுத்துக்காட்டு

பதிற்றுப்பத்து 56

விழவுவீற் றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லா னல்லன்; வாழ்கஅவன் கண்ணி!
வலம்படு முரசம் துவைப்ப வாளுயர்த்து
இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன்5

மடல்பெரு மையின் உடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத்து ஆடுங் கோவே.

தம் அறியாமையாலே செருக்கிப் போர்க்கெழுந்தவரான பகைமன்னரை அழித்து வெற்றியடைந்து, அக் களத்திலே நின்று, தன் வாள்வீரர்களுடன் வெற்றிக் கூத்தாடுவதற்குச்(அமலை ஆடுதற்கு) சேரலாதன் வல்லவனேயல்லாமல், கூத்தர் முன்பாக நின்று களிக்கூத்து ஆடிக் களித்தலில் வல்லவன் அல்லன்.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.