under review

இரா. நாகசாமி

From Tamil Wiki
Revision as of 20:23, 20 April 2025 by Madhusaml (talk | contribs) (Added Categories)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இரா. நாகசாமி
பத்மபூஷண் விருது, நன்றி: கல்கி இதழ்

இரா. நாகசாமி (இராமச்சந்திரன் நாகசாமி )(ஆகஸ்ட் 10, 1930 - ஜனவரி 23, 2022) இந்தியத் தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர். கோயில் கல்வெட்டுகள் மற்றும் கலை வரலாற்றியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர். இந்தியாவில் முதல்முறையாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொண்டார். மத்திய அரசின் கலை, பண்பாட்டுக் குழுக்களில் அங்கம் வகித்தார். இவரது கட்டுரைகளை 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டன. பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவைத் தொடங்கினார்.

பிறப்பு, கல்வி

இரா. நாகசாமி சமஸ்கிருத வித்துவான் இராமச்சந்திரனுக்கு ஆகஸ்டு 10,1930-ல் கொடுமுடியில் பிறந்தார். பள்ளிக்கல்வியைக் கொடுமுடியில் முடித்தபின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுகலைப்பட்டம் பெற்றார். பூனா டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இரா. நாகசாமி இந்திய விமானப்படையில் பணியாற்றினார். விமானத்தைப் பழுதுபார்க்கும் திறமை கொண்டவர். புகைப்படக் கலைஞர். தனது நூல்களுக்கான புகைப்படங்களைத் தானே எடுத்தார். யோகக்கலையில் பயிற்சி பெற்றவர். இசையில் பயிற்சி பெற்றவர்.

இரா. நாகசாமி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து தொல்லியல் துறையில் பயிற்சி பெற்றார். 1959 முதல் 1963 வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கலைப்பிரிவின் காப்பாட்சியராகப் (curator) பணியாற்றினார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும் (1963-66), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராகவும்(1966-1988) பணியாற்றினார்.

இரா. நாகசாமியின் மனைவி பார்வதி. மகன்கள்: ராமச்சந்திரன், மோகன். மகள்கள்: கலா, உமா.

The Hindu Jan 27,2022

கல்வெட்டியல்

விழாக்கள், கண்காட்சிகள்

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஐரோப்பிய நகரங்களில் இந்தியத் திருவிழாக்கள் நடைபெற்றன. அப்போது இரா. நாகசாமி தென்னிந்தியாவின் முற்கால வெண்கலச் சிற்பங்களைப் பற்றித் தொகுத்தளித்த Masterpieces of early South Indian Bronzes மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

1966-ல் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 'பூம்புகார் போற்றுதும்' என்ற தலைப்பில் கண்காட்சியும் மாநாடும் நடத்தினார். தமிழ்நாட்டு ஆலயங்களிலுள்ள விலை மதிப்புள்ள நகைகளைக் கொண்டு வந்து மிகுந்த பாதுகாப்புடன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடத்தில் கண்காட்சி நடத்தினார்.

காப்பாட்சியர்(Curator)

இரா. நாகசாமி சென்னை அருங்காட்சியகத்தில் காப்பாட்சியராக இருந்தபோது அதுவரை பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்ததை மாற்றி தமிழில் கையேடுகள், வழிநூல்கள் முதலியவற்றை உருவாக்கினார்.

தொல்லியல் துறை இயக்குனர்

இரா. நாகசாமி தொல்லியல் துறை இயக்குனராக இருந்தபோது இன்ஸ்டிட்யூட் ஆஃப் எபிகிராஃபி’ (Institute of epigraphy) என்ற நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக ஏற்படுத்தினார். அதில் சரித்திரம், தமிழ் இலக்கியம், தொல்லியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களைச் சேர்த்தார். அவர்களுக்கு ஒரு வருட காலம் கல்வெட்டியலில் மிக விரிவாகப் பயிற்சி கொடுக்கப்பட்டு, முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் பெற்றவர்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முழு நேர ஊழியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

டாக்டர். இரா. நாகசாமி தனது 22 ஆண்டுகால பதவிக் காலத்தில் தமிழகம் முழுவதும் பல அருங்காட்சியகங்களையும், மாவட்ட ரீதியான தொல்லியல் துறைகளையும் நிறுவினார். ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியருக்கு வரலாற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் ஊருக்கு அருகிலுள்ள கோயில்கள், கோட்டைகள், மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு களப் பயணங்கள் செல்ல ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கும் அதற்கான பயிற்சியை அளித்தார். சிறிய பாக்கெட் வழிகாட்டி புத்தகங்களைத் தமிழக அரசு சார்பில் அச்சடித்து வரலாற்றுச் சுற்றுலாத் தளங்களில் விற்று மக்களிடையே சரித்திரத்தில் ஆர்வத்தை ஊட்டினார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனிக்கட்டுரைகள், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட செய்திகளின் எழுத்து வடிவம், மொழிபெயர்ப்புகள் மற்றும் வழிகாட்டிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

கல்வெட்டாய்வு

இரா. நாகசாமி தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், செப்பேடுகள். நடுகற்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள் போன்றவற்றை ஆராய்ந்தார். நடுகற்களைப் பற்றிய அவரின் ஆராய்ச்சி பல்லவர்களின் சரித்திரத்தை மேலும் ஆராயத் துண்டியது. அதுவரை, பல்லவர்களின் வரலாறு, அரச மரபினரைப் பற்றிய செப்பேடுகள், கல்வெட்டுகள் மூலம் எழுதப்பட்டுவந்தது. நாகசாமியின் முயற்சிகளால், செங்கம் பகுதியில் உள்ள சாதாரண மக்களால் எழுப்பப்பட்ட நடுகற்கள் மூலம், பல்லவர் வரலாறு, சமூகக் கண்களோடு கூடிய வரலாறாக மீளாய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது.

இரா. நாகசாமி கரூர், அழகன்குளம், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற சரித்திரப் புகழ் மிக்க இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டார். தமிழகத்தை முற்காலத்தில் ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம் பற்றிய தொல்லியல் சான்றுகள் அகழ்வாராய்ச்சி மூலம் அவர் இயக்குனராக மேற்கொண்ட அகழ்வாய்வில் கிடைத்தன. தமிழகக் கடற்கரையில், பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை முதன் முதலில் ஆழ்கடலில் அகழாய்வு மேற்கொண்டார்.

முக்கியமான அகழ்வாய்வுகள்/கண்டுபிடிப்புகள்:

  • புகலூருக்கு அருகிலுள்ள வேலாயுத மலையில் கிடைத்த முதலாம் நூற்றாண்டு சேரர் காலக் கல்வெட்டுகளில் மூன்று சேர மன்னர்களைப் பற்றிய குறிப்பு இருந்தது. "கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுக்கோ இளங்கடுக்கோ இளங்கோ ஆகி அறிவித்த கல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
  • கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் மாளிகையின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டன
  • பாஞ்சாலங்குறிச்சியில் வீர பாண்டிய கட்டபொம்மனின் அரண்மனையின் சுவடுகள்,
  • கரூர் தான் சேரரின் முற்காலத் தலைநகர்
  • எட்டயபுரத்தில் தேசிய கவி பாரதியின் பிறந்த வீடு.
  • பொ.யு. 3-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட நடுகல்களை இவர் கண்டுபிடித்துள்ளார்.
பிற பணிகள்
  • எட்டயபுரத்தில் மகாகவி பாரதி பிறந்த வீடு வெடிமருந்து வைக்கும் கிடங்காகியிருப்பதை அறிந்து அதை மீட்டு, தமிழக அரசின் உதவியுடன் அதன் பழமை மாறாமல் புதுப்பித்து நினைவுச் சின்னமாக மாற்றினார்.
  • பத்தூர் கோவிலில் இருந்த நடராஜர் சிலை காணாமலாகி, லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டபோது இந்தியாவின் சார்பில் கல்வெட்டுச் சான்றுகள், ஆலய வரலாறுகளைச் சான்று காட்டி நீதிமன்றத்தில் வாதாடி அதை மீட்டுக் கொண்டு வந்தார்.
  • 1965-ல் முதல் உலகத் தமிழ் மாநாடு, கோலாலம்பூரில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் 1983-ல் நடைபெற்ற அணிசேரா உச்சி மாநாட்டின் போது புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் தென்னிந்திய வெண்கலங்கள் குறித்த சிறப்புக் கண்காட்சி உட்படப் பல கண்காட்சிகளை நடத்தினார்.
  • பூண்டியில் ஒரு வரலாற்றுக்கு முந்தைய தொல்பொருள்களின் அருங்காட்சியகம் மற்றும் வட ஆற்காட்டில் இஸ்லாமிய அருங்காட்சியகம் உட்பட 12 பிராந்திய அருங்காட்சியகங்களைத் தொடங்கினார். கல்வெட்டியலில் முதுகலைப் பட்டயப் படிப்பு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காக தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் கீழ் கல்வெட்டுக் கழகத்தைத் தொடங்கினார்.
  • 2001-ல் சிதம்பரத்தில் கலை மற்றும் சமயம் பற்றிய சர்வதேச மாநாடு உட்பட பல மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளை நடத்தினார். கருத்தரங்கின் நிகழ்வுகளை 'Foundations of Indian Art' என்ற நூலாகத் தொகுத்தார்.
நாட்டியம், கவின் கலைகள்

இந்தியத் தொல்லியல் துறையை, மக்கள் மத்தியில் பிரபலப் படுத்த, இரா. நாகசாமி இசையையும், நாட்டியத்தையும் கருவிகளாகப் பயன்படுத்தினார். 1981-ம் ஆண்டு கபிலா வாத்சாயனாவுடன் இணைந்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவை நிறுவினார்.

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், மணிமேகலை, அருணகிரிநாதர், அப்பர் போன்ற வரலாற்று புகழ்பெற்ற மக்களின் வாழ்க்கையை நாட்டிய நாடகங்களாக தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகில் பல நாடுகளில் பரப்பினார்.

1982-ம் ஆண்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் முதன் முறையாக ஒளி ஒலிக் காட்சிகள் நடத்த ஆவன செய்தார்.

எழுத்து

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஐரோப்பிய நகரங்களில் இந்தியத் திருவிழாக்கள் நடைபெற்றன. அப்போது அவர் தென்னிந்தியாவின் முற்கால வெண்கலச் சிற்பங்களைப் பற்றித் தொகுத்தளித்த Masterpieces of early South Indian Bronzes மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மூன்று மொழிகளிலுமாக 150 நூல்களுக்கு மேல் எழுதினார்.

விருதுகள்

  • இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் (ICHR), , 'குருகுல ஆய்வுநல்கை' (2017)
  • பத்ம பூஷண் விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது

மதிப்பீடு

"பூலாங்குறிச்சியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், விழுப்புரம் அருகில் ஜம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சி பற்றிய தமிழ்–பிராமி கல்வெட்டுச் சொற்கள், கங்கைகொண்ட சோழபுரம், கோவலன்பொட்டல் போன்ற இடங்களில் நாகசாமி செய்த அகழாய்வுகள் என்று அவரது சாதனைகள் பெரும் பட்டியலாக நீளும். பற்பல தமிழ்–பிராமி, வட்டெழுத்துகள் பொறித்த கல்வெட்டுகளைப் படித்து அவற்றில் உள்ள செய்திகளையெல்லாம் வெளி உலகுக்கு எடுத்துக்கூறியவர் நாகசாமி” என்று தொல்லியல் ஆய்வாளர் சுப்பராயலு குறிப்பிடுகிறார்.

"அவருடைய முதன்மையான கொடை என்பது தொல்லியல் சான்றுகளை இந்தியவரலாறு – பண்பாடு சார்ந்து நுண்மையான பகுப்புகளுடன் அட்டவணையிடுவதற்கு ஒரு முறைமையை உருவாக்கியது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அத்துறையில் ஒரு முன்னோடி, திட்டவட்டமான முறைமைகளைத் தொடர்ந்து வலியுறுத்தியவர், ஆகவே அறிவியல்பூர்வமான தொல்லியல் தரவுகளைத் திரட்டி முறையான அட்டவணைப்படுத்துதலைச் செய்தவர், தன் முறைமைகளை கற்பித்து ஒரு மாணவர் வரிசையை உருவாக்கியவர்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

விவாதங்கள்

இரா.நாகசாமி எழுதிய 'Mirror of Tamil and Sanskrit' என்ற நூலை ஒட்டி விவாதங்கள் எழுந்தன. அதில் அவர் தமிழின் தொன்மையை பின்தள்ளி, சமஸ்கிருத மரபுக்கு பின்பே தமிழை வைத்தார் என்று விவாதங்கள் எழுந்தன. தமிழண்ணல் 'தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும்' என்ற நூலில் நாகசாமி இந்நூலில் தமிழைப்பற்றி முன்வைத்த கருத்துகளைக் கடுமையாக மறுத்தார்.

இரா. நாகசாமியை தேர்ந்த தொல்லியலாளர் என மதிப்பிடும் எழுத்தாளர் ஜெயமோகன் அதே சமயத்தில் அவரது வரலாற்றெழுத்தில் அவரது சார்புநிலைகள் குறுக்கிடுவதாகவும் கருதுகிறார்.

நூல் பட்டியல்

தமிழ்
  • மாமல்லை
  • ஓவியப்பாவை
  • உத்தரமேரூர்
  • கலவை
  • கவின்மிகு சோழர் கலைகள்
  • செந்தமிழ் நாடும் பண்பும்
  • பொம்மை பழைய பொம்மை-வரலாறு
  • கலைச் செல்வங்கள்-வரலாறு
  • விநாயக புராணம்
  • தவம் செய்த தவம்
  • யாவரும் கேளிர்
  • சொல்மாலை
  • பொய்யிலி மாலை
  • செந்தமிழ் நாடும் பண்பும்

ஆங்கிலம்

  • Tirukkural - An Abridgement of Shaastras
  • Tamil Nadu – The Land of Vedas
  • Mahabalipuram
  • Studies in Ancient Tamil Law and Society
  • Masterpieces of Early South Indian Bronzes
  • Vedic Roots of Hindu Iconography
  • Mirror of Tamil and Sanskrit
  • Vishnu Temples of Kanchipuram
  • Brhadisvara Temple: Form and Meaning
  • Uttaramerur: the Historic Village in Tamil Nadu
  • Timeless delight: South Indian bronzes in the collection of Sarabhai Foundation = Utsavamūrtināṃ rasāsvādanā
  • The Kailasanatha temple;: A guide, (Tamil Nadu. Dept. of Archaeology. T.N.D.A. pub. no. 4)
  • Art and Culture of Tamil Nadu
  • Facets of South Indian Art and Architecture
  • Kalavai: The Sacred Spring of Divine Fragrance
  • Siva Bhakti
  • Vasavasamudram: A report on the excavation conducted by the Tamilnadu State Department of Archaeology
  • Gangaikondacholapuram,
  • Foundations of Indian Art: Proceedings of the Chidambaram Seminar on Art and Religion, Feb. 2001
  • Damilica: Volume II: Journal of the Tamilnadu State Dept. of Archaeology, Part 3
  • Art and Religion of the Bhairavas: Illumined By Two Rare Sanskrit Texts: Sarva-Siddhanta-Viveka and Jnana-Siddhi
  • The art of Tamilnadu,
  • South Indian Studies 2 Parts
  • Thiruttani and Velanjeri copper plates
  • Ramanathapuram district: An archaeological guide
  • Roman Karur. A Peep Into Tamils' Past
  • Tarangampadi

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Aug-2024, 19:06:58 IST