அபிமானி
அபிமானி (மணி) (பிறப்பு: பிப்ரவரி 07, 1958) எழுத்தாளர். தூத்துக்குடி துறைமுகத்தில் முதுநிலை எழுத்தராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு உள்பட பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்றார்.
பிறப்பு, கல்வி
மணி என்னும் இயற்பெயரை உடைய அபிமானி, பிப்ரவரி 07, 1958 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி என்னும் ஊரில் இசக்கிமுத்து - ஏசுவடியாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை பணகுடியில் கற்றார். நடுநிலைக் கல்வியை அஸ்ஸே பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். திருநெல்வேலி மாவட்டம் கள்ளிக்குளத்தில் உள்ள தட்சிணமாற நாடார் சங்க கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அரசுப் பணியின் காரணமாக படிப்பிலிருந்து இடை நின்றார்.
தனி வாழ்க்கை
அபிமானி, தூத்துக்குடித் துறைமுகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். முதுநிலை எழுத்தராக உயர்வு பெற்றார். எழுத்துலகில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் விருப்ப ஓய்வு பெற்று முழு நேர எழுத்தாளராகச் செயல்பட்டார். மணமானவர். மனைவி: அமுதா. பிள்ளைகள்: ஸ்டாலின் ஜெயந்தன் (அமரர்); அம்பேத்கார் அகிலன். மகள்: சூரியா.
இலக்கிய வாழ்க்கை
அபிமானி, பள்ளியில் கலந்து கொண்ட பல போட்டிகள் மூலமும், நூல்களை வாசித்தும் இலக்கிய ஆர்வம் பெற்றார். தி.ஜானகிராமனும், பா. செயப்பிரகாசமும் அபிமானியின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள். அபிமானியின் முதல் சிறுகதை ‘நோக்காடு’ தாமரை இதழில் வெளியாகி அபிமானியை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து அபிமானியின் படைப்புகள் தாமரை, கணையாழி, இன்று, ஆனந்த விகடன், உயிர் எழுத்து, குங்குமம், தாய், குமுதம், கல்கி, தினமணி கதிர், புதிய கோடாங்கி, மனஓசை, கலைமகள், கவிதாசரண், காக்கைச்சிறகினிலே உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகின.
அபிமானி கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்தார்.
பொறுப்பு
துறைமுகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஊழியர்கள் நலச் சங்கத்தை ஏற்படுத்தி முக்கியப் பொறுப்பு வகித்தார்.
விருதுகள்
- ’பனைமுனி’ குறு நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
- ’பனைமுனி’ குறு நாவலுக்கு எட்டையபுரம் முற்போக்கு வாலிபர் சங்க விருது
- ’ஊர்ச்சோறு’ படைப்புக்கு தமிழக அரசின் விருது
- ’ஏதிராக’ படைப்புக்கு தமிழ்நாடு முற்போக்கு வாலிபர் சங்க விருது
- ’இல்லாதவர்கள்’ குறுநாவல் கலைமகள் இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது
- ’சந்ததிப் பிழைகள்’ குறுநாவல் கணையாழி இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது
- கல்கி இதழ் நடத்திய கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ’உலை அமரா’ சிறுகதை பரிசு பெற்றது
- ’ஆட்டம்’ சிறுகதை மனோரஞ்சிதம் இதழ் அளித்த முதல் பரிசைப் பெற்றது
- சேலம் நாகம்மாள் அறக்கட்டளை விருது
மதிப்பீடு
அபிமானியின் படைப்புகள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வியல் நிகழ்வுகளை, அவலங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, பிரச்சனைகளை, முரண்பாடுகளைப் பேசுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதிக்கும் ஆதிக்க சாதிக்கும் இடையேயான பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வீரியமாகப் பேசுவதாக அபிமானியின் பல படைப்புகள் அமைந்துள்ளன. அம்மக்களின் வட்டார மொழிகளைத் தனதுப் படைப்புகளில் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். தமிழின் ’தலித்’ சார்ந்த இலக்கியம் படைப்பவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக அபிமானி அறியப்படுகிறார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- ஏதிராக
சிறுகதைத் தொகுப்பு
- நோக்காடு
- பனைமுனி
- ஊர்ச் சோறு
- தெரிந்தவன்
- நட்சத்திரங்களைத் திருடியவர்கள்
- அபிமானி சிறுகதைகள்
குறுநாவல்
- இல்லாதவர்கள்
- சந்ததிப் பிழைகள்
- தேட்டம்
- தீர்ப்புகளின் காலம்
நாவல்
- நீர்க்கொத்தி மனிதர்கள்
- பாதரவே
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.