under review

புலனறி சிறப்பு

From Tamil Wiki
Revision as of 01:04, 30 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புலனறி சிறப்பு வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சியார் கவர்ந்த ஆநிரையைப் பங்கிடும்போது ஒற்றறிந்தவர்களுக்கு மற்றவர்களைவிட அதிகமான பங்கை அளிப்பதைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கொடிய பகைவர் நாட்டுக்குச் சென்று ஒற்றறிந்து (வேவு பார்த்து) அந்நாட்டின் நிலைமையை ஆய்ந்து உரைத்தவர்களுக்கு, போரிட்டு ஆநிரையைக் கவர்ந்து வந்த மறவர்கள் பங்கினைவிட மிகுதியாகக் கொடுத்துச் சிறப்பித்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. பகிர்ந்து அளிப்பதைக் கூறுவதால் இது பாதீடுஎன்பதைச் சார்ந்தது என்றும் கூறுவர்.

வெம்முனை நிலை உணர்த்தியோர்க்குத்
தம்மினு மிகச் சிறப்பு ஈந்தன்று (கொளு 1.20)

வெண்பா

இறுமுறை எண்ணாது இரவும் பகலும்
செறுமுனையுள் சென்றறிந்து வந்தார் - பெறுமுனையின்
அட்டுக் கனலும் அயில் வேலோய் ஒன்றிரண்டு
இட்டுக் கொடுத்தல் இயல்பு (17)

பொருள்: பகைவரைக் கொன்று, மேலும் சினத்தாற் கொதிப்புறுகின்ற கூரிய வேலினைக் கொண்டுள்ளோனாகிய தலைவனே! தாம் சாதலும் நேருமென்பதனை எண்ணாதவராக, இரவும், பகலும் பகைவரது போர்முனையுள் அவரறியாதவாறு சென்று, அவரது நிலையினை அறிந்து வந்தவர்கள் இவ்வொற்றர்கள். ஆதலின், அனைவரும் பெறுகின்ற பங்கினது முறைமையின் மேலாக இவருக்கு ஒன்றோ இரண்டோ ஏற்றிக் கொடுத்தலே இயல்பு உடையதாம்.

'ஒற்றர் உளவறிந்து வந்து கூறிய தன்மையினாலேயே வெற்றி வாய்ப்பது எளிதாகுமாதலின், அவருக்குப் பிறரினும் அதிகப்படியாக வழங்குவது இயல்பு' என்பது கூறப்படுகிறது.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:57:32 IST