being created

டி.என். மாரியப்பன்

From Tamil Wiki
Revision as of 16:21, 26 August 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "டி.என். மாரியப்பன் (மே 7, 1934) மலேசிய இசைத்துறையில் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். மலேசிய இசைத்துறை வளர பங்காற்றியவர். == பிறப்பு, கல்வி == டி.என். மாரியப்பன் பினாங்குத் தீவில் உள்ள ஆயர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

டி.என். மாரியப்பன் (மே 7, 1934) மலேசிய இசைத்துறையில் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். மலேசிய இசைத்துறை வளர பங்காற்றியவர்.

பிறப்பு, கல்வி

டி.என். மாரியப்பன் பினாங்குத் தீவில் உள்ள ஆயர் ஈத்தாம் என்ற கிராமத்தில் மே 7, 1934ல் பிறந்தார். தந்தையின் பெயர் நாகப்பன். தாயார் பெயர் பொன்னம்மாள். அவ்வூரில் இருந்த மாரியம்மன் கோயில் நினைவாக மாரியப்பன் எனும் பெயர் சூட்டப்பட்டது.

மாரியப்பன் தனது பதினோராவது வயதில்தான் தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். பினாங்கு இந்து சபா தமிழ்ப்பள்ளியில் 1945ல் அவர் ஆரம்பக்கல்வி தொடங்கி 1950ல் நிறைவடைந்தது. ஆசிரியர் க.கு. மாணிக்கம் முதலியார் என்பவரால் தமிழ் கற்பிக்கப்பட்டார். ஆசிரியர் R.M இராமநாதன் அடிப்படை இசை பயிற்சியையும் வழங்கினார். ஆறாம் வகுப்பு முடித்த பின்னர் அரசாங்கத் தேர்வான ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பினாங்கு இந்து சபா பள்ளியிலேயே அவருக்கு வேலை கிடைத்தது. சிறிய குழந்தைகளுக்குப் பாடமும் இசையும் போதிக்கும் பணியை இரண்டு வாரம் மட்டுமே செய்தார்.

குடும்பம்

1960ல் சாந்தா என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு தமிழ்ச்செல்வி, தாமரை என்ற இரு மகள்களும் துருவன் என்ற மகனும் உள்ளனர். மூவரும் இசைத்துறையில் திறன் பெற்றவர்கள்.

தொழில்

1954-55 ஆகிய ஆண்டுகளில் இந்திய வர்த்தக சங்கத்தில் உதவியாளராக (பியூன்) பணிசெய்தார். 1971ல் மலேசிய வானொலி பணியில் இணைந்தார். ஒன்பது ஆண்டுகளில் வானொலியில் பணியாற்றினார். வானொலியில் பணியாற்றிய காலங்களில் 2000ம் பாடல்களுக்கு மேல் இசையமைத்தும் பாடியும் உள்ளார்.

இசை பயிற்சி

இசையின் மீது இருந்த ஆர்வத்தால் அவருடைய தமையனார் அவரை தமிழகத்திற்கு ராஜூலா கப்பலில் இசை பழக 1950ல் அழைத்துச்சென்றார். நாகப்பட்டினம் சென்றவர் தமிழகத்தில் தஞ்சாவூரில் அமைந்துள்ள தனது தந்தையின் ஊரான பாப்பனஞ்சேரி கிராமத்தில் சில மாதங்கள் தங்கினார். பின்னர் இராமநாதபுரத்தில் நடந்த ஶ்ரீதேவி நாடகசபாவில் மூன்று ஆண்டு காலம் பயிற்சி பெற்று மலாயா திரும்பினார்.

கலை பயணம்

நாடு திரும்பிய டி.என். மாரியப்பனுக்கு அப்போது கலையை வளர்ப்பதில் மும்முறமாகப் பணியாற்றிய தமிழ் இளைஞர் மணிமன்றம் நல்ல களமாக அமைந்தது. பினாங்கில் சிலமேடைநாடகங்களில் பங்கெடுத்தார். 'ரெடி வியூசன்' கேபில் டிவி வழி நாடகங்கள் நடித்தும் பாடல்கள் பாடியும் வந்தார். அப்போது இவருடன் இணைந்து மைதீ. அசன்கனி, மைதீ. சுல்தான் போன்றவர்கள் கலைத்துறையில் ஈடுபட்டனர். மேலும் அப்போது இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிபரப்பான மலேசிய வானொலியிலும் பாடல்கள் பாடினார். 1957ல் டி.கே.எஸ்.பிரதர்ஸ் குழு நாடகம் நடத்த மலாயா வந்தனர். மாரியப்பனின் பாடல் திறனைப் பார்த்த டி.கே.சண்முகம் அவரது திறனை மேலும் வளர்க்க எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார். 1957ல் சென்னைக்குச் சென்ற மாரியப்பன் எஸ்.பி. சகஸ்ரநாமம், எம்.எஸ். திரௌபதை, எம்.எஸ். குண்டுகருப்பையா, ஏ.வி. ராஜன் நாடக மன்றம் முதலிய நாடக மன்றங்களில் இணைந்து  தன் இசை அறிவை வளர்த்துக்கொண்டார்.

பாடல்கள்

டி. என். மாரியப்பன் வானொலியில் பணியாற்றிய காலத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். மலேசிய கலைஞர்கள் இயற்றிய கீர்த்தனைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். இவர் கலைப்பணி இலக்கிய வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளது. திருக்குறளின் 1330 பாக்களுக்கும் இசையமைத்துப்பாடியுள்ளார் மாரியப்பன். மேலும் 133 மெல்லிசை பாடல்கள் கொண்ட நூலை எழுதி வெளியிட்டுள்ளார். மலேசிய கவிஞர்கள் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் கீர்த்தனைகளுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.

எழுத்து

இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட டி.என். மாரியப்பன் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும் நகைச்சுவை நாடகங்கள், சமூக நாடகங்கள் போன்றவையும் இவரால் எழுதப்பட்டுள்ளன.

பங்களிப்புகள்

நாற்பது ஆண்டுகளாக சாரீரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார் மாரியப்பன். உலகக் கர்நாடக இசை மாணவர்களுக்கு 'சுரமாலிகா' என்ற நூல் ஒன்றனை பாலமுரளி கிருஷ்ணா மேற்பார்வை செய்து தர  நவம்பர் 2013ல் சென்னையில் வெளியிட்டுள்ளார். ஆரம்ப இசைப்பயிலும் மாணவர்களுக்கு தமிழில் 23 கீதங்கள் செய்துள்ளார். மேலும் பதினைந்து வருட உழைப்பில் ஆங்கிலத்தில் இலக்கணத்தமிழை நான்கு புள்ளிகள் முறையில் இலக்கணம் வடிவமைத்துள்ளார்.

நூல்கள்

  • சுரமாலிகா (இசை பாட நூல்) - 2013
  • சுகமான ராகங்கள் (சிறுகதை) - 2016

விருது

  • இசைத் தென்றல் பட்டம் - பினாங்குத் தமிழிளைஞர் மணிமன்றம் (1956)
  • சிறந்த இசையமைப்பாளர் விருது - ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி (2010)
  • திருக்குறள் இசைமணி - திருக்குறள் ஆராய்ச்சி மையம்
  • வாழ்நாள் சாதனை - கோலாலம்பூர் தமிழ்ச்சங்கம்

உசாத்துணை

  • மலேசிய முத்தமிழ்ச் சான்றோர்கள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.