under review

க. தேவராஜ் (தெருக்கூத்து)

From Tamil Wiki
Revision as of 01:03, 16 January 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
க. தேவராஜ்

க. தேவராஜ் (பிறப்பு: 1956) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். தெற்கத்தி பாணிக்கூத்துக் கலைஞர். பாரதக்கூத்துக்கள், தனிக்கூத்து, நாடகங்கள் ஆகியவை ஆடினார். பெண் வேடங்களுக்காகப் புகழ் பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

க. தேவராஜ் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தென்நெற்குணத்தில் 1956-ல் பிறந்தார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார். அப்பா, சின்னத்தாத்தா, தாய்மாமா ஆகியோர் கூத்துக் கலைஞர்கள்.

கலை வாழ்க்கை

க. தேவராஜ் தன் தாய்மாமா அர்ச்சுனனிடம் கூத்து கற்றுக் கொண்டார். அர்ச்சுனன் தன் வாத்தியாரான மாணிக்கத்திடமிருந்து பிரிந்து தனிக்குழுவாக செயல்பட்டபோது க.தேவராஜ் அவர் குழுவில் கூத்தாடினார். தேவராஜ் குரல்வளம் மிக்கவர் என்பதால் அவர் வெகுவாக ரசிக்கப்பட்டார். பதினைந்து வயது முதல் பல்வேறு குழுக்களில் கூத்து ஆடியுள்ளார். முதல் மூன்றாண்டுகள் பெண் வேடத்தில் ஆடினார். அதில் திறமையாக நடித்ததால் பல்வேறு குழுக்களிலிருந்து பிரத்யேகமாக பெண் வேடங்களில் நடிக்க இவரை அழைத்தனர். குறிப்பாக நளாங்கினி, சந்திரமதி, விராடபருவத்தில் பேடி ஆகிய பாத்திரங்கள் புகழ்பெற்றவை. சாமியாக இவர் ஆடும் கூத்துகளை மக்கள் விரும்பியதால் கருமாரி, செல்லியம்மன், அங்காளம்மன், பூஞ்சோலை ஆகிய முக்கிய கூத்துக்களிலும் நடித்தார். அதன்பிறகு எல்லா வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அர்ஜுனன், பீமன், சூரன் ஆகிய வேடங்களில் நடித்தார். கூத்தாண்டவர் களபலியில் நாககன்னி வேடம் போடுவார்.

ஒரு ஊரில் பாரதக்கூத்து ஆடினால் பதினாறு நாட்கள் தொடர்ந்து கூத்தாடுவர். பத்து முதல் இருபத்தியேழு நாள் வரை கூத்தாடியுள்ளார். முதன்முதலாக 'சின்ன அர்ச்சுனன் சண்டை' (புலேந்திரன் களவு) என்னும் நாடகத்தில் நடித்தார். திருக்கனூர் திருமலைவாசா நாடக சபா, செல்வ விநாயகர் நாடக சபா, சித்தி விநாயகர் நாடக சபா ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். கூத்து வாத்தியாராக இருபது ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக கூத்து ஆடினார். சிதம்பரம், சின்னக்காஞ்சியார் தெரு, திருக்கோவிலூர் தாண்டி ஏகதுருவம், கீழ்பாடி, மேல்பாடி, மருதாடு, செய்யாறு, ஆரணி, செஞ்சி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய ஊர்களில் கூத்து ஆடியுள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • கிருஷ்ண ஜனனம்
  • கிருபாங்கினி சரித்திரம்
  • திரெளபதி பிறப்பு
  • துஷ்டத்துய்மனன்
  • குருகுலபயிற்சி
  • அரக்கு மாளிகை
  • திரெளபதி மாலையீடு
  • சுபத்திரை மாலையீடு
  • சுந்தரி மாலையீடு
  • நாகக்கன்னி மாலையீடு
  • சித்ராங்கதை மாலையீடு
  • அல்லி மாலையீடு
  • ராஜசுயயாகம்
  • துயில்
  • தபசு
  • பதினெட்டாம் போர்
  • தேவர் பட்டம்
  • கீச்சக சம்மாரம்
  • அபிமன்னன் கொன்றை மாலை
  • கர்ண மோட்சம்
தனிக்கூத்து
  • புரூர் சக்கரவர்த்தி (சனீஸ்வரன் தொடர்பானது)
  • பிரிந்தர மோட்சம்
  • காம தகனம் (ரதி மன்மதன்)
  • காத்தவராயன் (கழுவேறுதல்)
  • மதுரை வீரன்
  • செல்லியம்மன்
  • அங்காளம்மன்
  • பூஞ்சோலை
  • ஞானசெளந்தரி

பங்கேற்ற நாடகங்கள்

  • சின்ன அர்ச்சுனன் சண்டை
  • துர்வாசகர் நாடகம்
  • கருமாரி பிறப்பு

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2025, 08:16:45 IST