first review completed

அக்கினி வளையங்கள்

From Tamil Wiki
Revision as of 18:01, 7 July 2022 by Logamadevi (talk | contribs)
அக்கினி வளையங்கள்

அக்கினி வளையங்கள் (2019) மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது எழுதிய இரண்டாவது நாவல். இந்நாவல் மலேசியாவில் 1930-கள் முதல் 1960-கள் வரையில் தீவிரவாதப் போக்குடைய இயக்கமாக இயங்கி வந்த மலாயா கம்யூனிஸ்டு இயக்கத்தின் வரலாற்றையும் அக்காலக்கட்டத்தையும் பின்னணியாகக் கொண்டது.

பதிப்பு வெளியீடு

இந்நாவல் 2009-ஆம் ஆண்டு  தென்றல் வார இதழில் 48 வாரங்களுக்குத் தொடர் கதையாக வெளிவந்து பல வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. கதைப்போக்கில் மாற்றமும் செறிவும் பெற்று வல்லினம் பதிப்பகமும் யாவரும் பதிப்பகமும் இணைந்து நவம்பர் 2019-ஆம் ஆண்டு இந்நாவலை வெளியிட்டன.

வரலாற்றுப் பின்னணி

மலாயாவில் தோற்றம் கண்ட கம்யூனிச இயக்கத்தின் தாக்கம், மலாயா மக்களிடம்  தன்னுரிமை, சமத்துவச் சிந்தனைகளை விதைத்தது. அதிகளவிலான சீனர்களின் பங்கெடுப்பால் மலாயாவில் ரஷ்ய ஆதரவு கம்யூனிசத்தை விடவும் சீன ஆதரவு கம்யூனிசம் பலம்பெற்றிருந்தது. 1927-1928 க்கிடையில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட நன்யாங் கம்யூனிஸ்டு கட்சி பின்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியானது. அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளனத்துடன் இணைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் இக்கட்சி மலேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தைச் செலுத்தியது. பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிராகப் போராடிய மலாயா கம்யூனிஸ்டு கட்சி 1930-களிலே தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்தங்கள், போராட்டங்களில் ஈடுபட்டது. ஜப்பானிய ஆட்சியின் போது மலாயா மக்கள் ஜப்பானிய எதிர்ப்பு இயக்கம் MPAJA எனும் பெயர் மாற்றத்துடன் ஜப்பானுக்கு எதிரான கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரிட்டன் ஆட்சியில்  மலாயாவைக் கம்யூனிஸ்டு நாடாக்கும் முயற்சியில் மின் நிலையங்கள், நீர் தேக்கங்கள் போன்ற பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துதல், பெருமுதலாளிகளின் தோட்டங்களில் தாக்குதல் நடத்துதல், பொதுப் போக்குவரத்துக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் பெரும்பான்மை சீனர்களுடன் கனிசமான இந்தியர்களும் மலாய்க்காரர்களும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டக் களத்தை நாவலுக்கான வரலாற்றுப் பின்னணியாக நாவலாசிரியர் அமைத்திருக்கிறார்.

கதைச்சுருக்கம்

சை. பீர்முகம்மது

1951ல் புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்தினருக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நிகழ்ந்த தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்து நாவல் தொடங்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து தன்னுடைய அயரா உழைப்பால் பல தோட்டங்களுக்கு உரிமையாளராகிறார் சண்முகம் பிள்ளை. தொழில், வணிகப் பெருக்கம் என அலைந்து செல்வந்தராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் சண்முகம் பிள்ளை தனிவாழ்வில் பெரும் வெறுமையை உணர்கிறார். விபச்சார விடுதியில் அறிமுகமாகும் ஜெயா எனும் பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார். அவளுடைய வருகையினால் தான் அந்தரங்கமாக உணரும் அகத்தனிமையைப் போக்கிக் கொள்கிறார். நாட்டில் பெருமுதலாளிகளைக் குறிவைத்து கம்யூனிஸ்டு இயக்கத்தினர் மேற்கொள்ளும் தாக்குதலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள உடல் வலிமை மிகுந்த முத்து எனும் தோட்டப்பாட்டாளியின் மகனை ஒட்டுநராகவும் பாதுகாவலராகவும் ஆக்குகிறார். முத்து தான் வசிக்கும் தோட்டத்தில் கம்யூனிஸ்டு போராட்டங்களில் மறைமுகமாகப் பங்கேற்கும் தேசிங்கு என்பவரின் ஈர்ப்பினால் மெல்ல  கம்யூனிஸ்டு இயக்கத்தில் பங்குபெறுகிறான். பெருமுதலாளிகளைக் கடத்தி மிரட்டுவதன் மூலமாக கம்யூனிஸ்டுகளின் உணவுத்தேவையை நிறைவு செய்து கொள்ள முடியுமென இயக்கம் திட்டமிடுகிறது. அதற்காகச் சண்முகம் பிள்ளையைக் கடத்த இயக்கத்துக்கு முத்து உதவி செய்கிறான். அதற்காக, முதலாளியின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்கிறான். இதைக் கண்டு உள்ளூர ஜெயா வருத்தமும் கோபமும் அடைகிறாள். அவன் மீதான பரிவு மெல்ல ஈர்ப்பாக மாறுகிறது. சண்முகம் பிள்ளையிடமிருந்து விலகுகின்ற முத்துவும் ஜெயாவும் கம்யூனிஸ்டு போராளிக் குழுவினருடன் இணைவதே நாவலின் கதையாக அமைந்திருக்கிறது.

கதைமாந்தர்கள்

  • முத்து - முதன்மை கதாமந்தர்களில் ஒருவன். சண்முகம் பிள்ளையின் கார் ஒட்டுநராக வந்து கம்யூனிசப் போராளிக் குழுவில் பங்கு பெறுகிறான்.
  • ஜெயா - சண்முகம் பிள்ளையின் ஆசை நாயகி. பின்னாளில் முத்துவுக்கு துணையாக நிற்பவள்.
  • சண்முகம் பிள்ளை - தோட்ட முதலாளி. நாவலை முழுமையாக இணைக்கும் மைய பாத்திரம்.
  • தேசிங்கு - கம்யூனிச இயக்கத்தின் போராளி
  • பாத்திமா - மறைமுகமாகக் கம்யூனிச இயக்கத்துக்கு உணவுப் பொருட்களைத் தன் கடையிலிருந்து தருபவள்.
  • ராஜலட்சுமி - ஜெயாவுடன் இணைந்து கம்யூனிச இயக்கத்தில் பங்கேற்கும் திருநங்கை
  • சாமியார் - நாவலின் முற்பகுதியில் வந்து சண்முகம் பிள்ளைக்குச் சம்பந்தியாக நினைப்பவர்.
  • சின் பெங் - மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர்

இலக்கிய இடம் /மதிப்பீடு

'இந்நாவலின் பாத்திரங்களை இலக்கியப் பூர்வமான பாத்திரங்களாக வடிவெடுத்திருக்கின்றனர். காலமும் களமும் சரியான பின்னணியில் வரலாற்றின் தேவையான தகவல்களோடு பின்னிப்பிணைவு கொண்டிருக்கிறது' என எழுத்தாளர் சு. வேணுகோபால் குறிப்பிடுகிறார். மேலும் இந்நாவலில் அமைந்திருக்கும் சண்முகம்பிள்ளை கதாப்பாத்திரம் ரத்தமும் சதையுமான நிலவுடைமைச் சமூகத்தின் அசலான பிரதிநிதியாக அமைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

விருது

  • டான் ஶ்ரீ கே. ஆர் சோமா மொழி இலக்கியத்தின் அனைத்துலக புத்தகப் பரிசு போட்டியின் மலேசியப் பிரிவில் 10,000 ரிங்கிட் பரிசு பெற்றது - 2021

உசாத்துணை

  • புதைந்துபோன ஒரு கனவின் பாதை - சு. வேணுகோபால்
  • ம.நவீன், அக்கினி வளையங்கள் நாவல் முன்னுரை, வல்லினம் பதிப்பகம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.