வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

From Tamil Wiki
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

தமிழில் பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை அதிகம் எழுதியவர், வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (1880-1942). வாசிப்பு என்பது சிறிய ஒரு குழுவினரிடம் மட்டுமே புழங்கிய நிலை மாறி சமூகத்தின் அனைத்து படிநிலைகளைச் சார்ந்த மக்களும் வாசிப்பை நோக்கி முன் நகர்வதற்கான சூழலை ஜே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் போன்றோர் ஏற்படுத்தினர்.

பிறப்பு கல்வி

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடுவூரில் கிருஷ்ணசாமி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை மிராசுதாராக இருந்தவர். செல்வச் செழிப்பு உள்ளார். வசதியான குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஐயங்கார் தமிழில் பட்டப்படிப்பை முடித்ததுடன், ஆங்கிலத்திலும் பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகச் சில காலம் பணியாற்றினார். இவர் சேலம், ராசிபுரம் பகுதிகளில் பணிபுரிந்தபோது காளன் - கூளன் என்னும் சேர்வராயன் மலைக்கள்ளர்கள் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டார். விக்டர் ஹ்யூகோ, ஷேக்ஸ்பியர், ஆர்த்தர் கானன் டாயில் போன்றோரது படைப்புகளைப் படித்துத் தாமும் அது போல் ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டிருந்த துரைசாமி ஐயங்காருக்கு, இச்செய்திகளை கற்பனையுடன் கலந்து ஒரு நாவலாகத் தந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

இலக்கிய வாழ்க்கை

தான் கேள்விப்பட்ட செய்திகளோடு கற்பனையையும் கலந்து ‘பாலாமணி’ என்னும் தனது முதல் நாவலைப் படைத்தார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கவே தொடர்ந்து எழுதத் தொடங்கினார், ஷேக்ஸ்பியரின் ‘சிம்பலின்’ என்ற நாடகத்தைத் தழுவி ’சுந்தராங்கி’ என்ற நாடகத்தை 1914-ம் ஆண்டில் வெளியிட்டார். பரவலான வரவேற்பைப் பெற்ற அந்நாடகம், பிரிட்டிஷாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பள்ளி இறுதி வகுப்பின் பாட நூலாக வைக்கப்பட்டது. தொடர்ந்து வடமொழி மிருச்சகடிகத்தை, ‘வசந்த கோகிலம்’ ஆகவும், ஷேக்ஸ்பியரின் கிங் லியரை, ‘மங்கையர் பகட்டா’கவும் உருமாற்றி அளித்தார். மொழிமாற்று நாடகங்கள் மட்டுமல்லாது, மாணிக்கவாசகர், திலோத்தமை, இராஜேந்திர மோகனா போன்ற நேரடி நாடகங்களையும் எழுதினார். தொடர்ந்து துப்பறியும், சமூக நாவல்களை எழுதுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தழுவல் நூல்களும், மேல்நாட்டுப் பொழுதுபோக்கு இலக்கியங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்த காலமாக அக்காலகட்டம் இருந்ததால், துரைசாமி ஐயங்கார், ரெயினால்ட்ஸின் நாவல்களைத் தழுவி எழுத ஆரம்பித்தார். வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் என்ற பெயர் பிரபலமாகத் தொடங்கியது. அதனால் தான் பார்த்துக் கொண்டிருந்த உயர் வருவாயைத் தந்து கொண்டிருந்த வேலையை விட்டு விலகி முழு நேர எழுத்தாளராகத் தன் வாழ்வைத் தொடங்கினார்.

இதழியல் பணிகள்

1919ல் தனது படைப்புகளை வெளியிடுவதற்காக “மனோரஞ்சனி” என்ற மாத இதழைத் தொடங்கியதுடன், கேசரி என்ற சொந்த அச்சகத்தையும் நிறுவினார். மனோரஞ்சனி இதழில் தானும் எழுதியதுடன், வை.மு.கோதைநாயகி போன்றோரையும் எழுதச் சொல்லி ஊக்குவித்தார். கும்பகோணம் வக்கீல், மதன கல்யாணி போன்றவை முதலில் மனோரஞ்சனி இதழில் தொடராக வெளியாகி, பின்னர் நூலாக்கம் பெற்றன. மனோரஞ்சனி சிறந்த பொழுதுபோக்கு இதழாக விளங்கியது. பிற்காலத்தில் வந்த மாத நாவல்கள், பாக்கெட் நாவல்கள், க்ரைம் நாவல்கள் போன்றவற்றிற்கு முன்னோடி இதழ் மனோரஞ்சனி.

சுதேசமித்திரனில் சில தொடர்களை எழுதியிருக்கிறார் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். அவற்றுள் ’மோகனாங்கி அல்லது திவான் திருமலைராயன் ஸாகஸம்’ என்பது நாயக்கர் காலகட்ட பின்னணியைக் கொண்ட வரலாற்றுத் தொடராகும்..

நாவல்களின் தன்மை

மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தனவாக துரைசாமி ஐயங்காரின் நாவல்கள் அமைந்து வாசகர்களைக் கவர்ந்தன. ‘மேனகா’, ‘கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்’, ‘மாய சுந்தரி’, ‘மருங்காபுரி மாயக் கொலை’, ‘மரணபுரத்தின் மர்மம்’, ‘முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம்’, ‘திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம்’, ‘நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி’ என நாவல்களின் தலைப்புகளே வாசகர்களை ஈர்த்து நூலை வாங்க வைத்தன.

விறுவிறுப்பான நடையும், சொல்லாற்றலுடன் கூடிய மொழிநடையும், அங்கதங்களுடன் கூடிய வர்ணனையும் கொண்டவையாக வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள் அமைந்தன. இவர் தனது கதாபாத்திரங்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர்களே நகைச்சுவைத் தன்மை உடையதாய் இருந்தன.

நரி, பரி: பரி, நரி நம்பெருமாள் செட்டியார்

வக்கீல் மிருதங்கம் ஐயர்

டாக்டர் மூஞ்சி

மகாஜாலப் பரதேசியார்

திவான் லொடபடசிங் பகதூர்

மிஸ் ப்ளிஸ்

மிஸ் இன்னோசென்ட் தேவி

பன்னியூர் படாடோப சர்மா

பாவாடைச் சாமியார்

சவுடாலப்பர்

அன்னக் காவடியர் பிள்ளை

கண்ட பேரண்ட சண்டப் பிரசண்ட வெண்ணைவெட்டி வீரசிங்கம் சர்தார் பகதூர்

ஜாம்புக் கிழவி

ஜடாயுக் கிழவி

ருத்ராக்‌ஷ பூனையார்

அடுக்கிளை வெட்டிக் கோனார்

சவுண்டியப்ப முதலியார்

சாப்பாட்டு ராமையங்கார்

அழுமூஞ்சி ஆனந்தராயர்

ஜபர்தஸ்து மரைக்காயர்

தோலிருக்கச் சுளை முழுங்கியா பிள்ளை

கூழையன்

குஞ்சுண்ணி நாயர்

- என வித்தியாசமான பெயர்களைத் தம் கதாபாத்திரங்களுக்குப் படைத்தார்.

நாவல் தலைப்புகளில், கதா பாத்திரங்களின் பெயர்களில் மட்டுமல்லாது, அத்தியாயத் தலைப்புகளிலும் வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் உத்தியை அவர் கையாண்டார்.

அகட விகட அற்புத நாடகம்

அட்டகாசக் கோனாருக்கு கட்டை விரல் சன்மானம்

அந்தரத்தில் மனிதன்; அறையில் சூரியன்

நரியைப் பரியாக்கிய நம்பெருமாள் செட்டியார்

செத்தவனைப் பிழைக்க வைக்கும் எத்தன்

கெட்டிக்காரன் புரட்டுக்கு எட்டு நாள் வாய்தா

மந்திரத்தில் மாங்காய்; தந்திரத்தில் தேங்காய்

கோட்டான் மர்மம்-குண்டன் கர்வம்

என்றெல்லாம் நகைச்சுவையாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைத்து வாசகர்களை ஈர்த்தார்.

தனது நாவல்களின் விற்பனையால் செல்வந்தரான துரைசாமி ஐயங்கார், சென்னை திருவல்லிக்கேணியில் அப்போதைய ஃபைகிராஃப்ட்ஸ் தெருவில் (இன்றைய பாரதி சாலை) மிகப் பெரிய மூன்றடுக்கு வீட்டை வாங்கி, அதற்கு ‘வடுவூர் ஹவுஸ்’ என்று பெயரிட்டு, தனது மனைவி நாமகிரி அம்மாள், குழந்தைகள் விஜயராகவன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி ஆகியோருடன் வசித்தார். தனது சமகால எழுத்தாளர்கள் யாரும் பெற முடியாத புகழையும், செல்வத்தையும் பெற்று வளமாக வாழ்ந்தார்.

நாவல்கள் காட்டும் சமூக நிலை

1900-1930 கால கட்டங்களைப் பற்றி, அக்கால மக்கள் சிலரது வாழ்க்கை முறை, சூழல்கள், மேட்டுக்குடி மனோபாவ சிந்தனைகளைப் பற்றி அறிய வடுவூராரின் எழுத்துக்கள் துணை நிற்கின்றன. அக்காலத்துச் சமூக நிலைகளை, பழக்க வழக்கங்களை, மக்களின் நம்பிக்கைகளை அறிய உதவுகின்றன. பாத்திரப் படைப்பும் மனிதர்களின் குண நலன்களைத் தெளிவாகச் சித்திரிக்கும் யுக்தியும் துரைசாமி ஐயங்காரின் படைப்புகளுக்கு வலு சேர்க்கின்றன. அக்காலச் சமுதாயத்தின் சிறப்புக்களையும், ஜமீந்தார் போன்றோருக்கு ஏற்பட்ட சீரழிவுகளையும், தாசிகளால் மேட்டுகுடியினருக்கு மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் நேரும் இன்னல்களையும் தன் படைப்பில் காட்டியிருக்கிறார் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்.

திரைப்படத்துறை

வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ‘மேனகா’ நாவலால் ஈர்க்கப்பட்ட டி.கே.எஸ். சகோதரர்கள் அவரிடம் அனுமதி பெற்று அதனை நாடகமாக நடத்த முன் வந்தனர். எம்.ஜி.ஆரின் குருவும், எம்.கே.ராதாவின் தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அதற்கு வசனம் எழுதினார். அந்த நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பால், 1935-ல், ‘மேனகா’ நாவல் திரைப்படமாக உருவானது. (ராஜா சாண்டோ இயக்கினார். டி.கே.பகவதி, டி.கே.சண்முகம், டி.கே.சங்கரன், என்.எஸ்.கிருஷ்ணன் கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சகஸ்ரநாமம் உள்ளிட்டோர் அதில் நடித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கு அது முதல் படம். பாரதியாரின் பாடல் முதன் முதலில் இடம் பெற்ற படமும் மேனகா தான்)

தொடர்ந்து ‘வித்யாபதி’ என்ற நாவல் திரைப்படமானது. வித்யாபதியில் சிறு வேடத்தில் தோன்றிய எம்.என்.நம்பியார், வடுவூராரின் நாவலான திகம்பர சாமியார் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் தோன்றிப் புகழ்பெற்றார். பாலாமணி, சின்னதுரை (இருமன மோஹினிகள்), மைனர் ராஜாமணி போன்ற நாவல்களும் திரைப்படமாகி வடுவூர் துரைசாமி ஐயங்காருக்குப் புகழ் சேர்த்தன.

சமய ஆராய்ச்சி

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நாவல் எழுதுவது மட்டுமின்றி சமயம் சார்ந்த ஆராய்ச்சி ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார். இதனை தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் நினைவு கூரும், க.நா.சுப்ரமண்யன், “அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்” என்கிறார்.

ஐயங்காரின் அந்தப் பல்லாண்டு கால ஆராய்ச்சி ‘Long Missing Links, Or, The Marvelous Discoveries about the Aryans, Jesus Christ and Allah - Volume 1’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நூலாக வெளியானது. அதில் உள்ள விவரங்களைத் தமிழில் ‘சமய ஆராய்ச்சி’, ‘ஜோதிட ஆராய்ச்சி’ போன்ற தலைப்புகளில் நூலாக எழுதி, தனது சொந்தப் பதிப்பகமான ’ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ என்ற நிறுவனம் மூலம் வெளியிட்டார்.

சர்ச்சைகள்

வை.மு. கோதைநாயகி அம்மாள் எழுதிய வைதேகி என்ற நாவலை வடுவூர் துரைசாமி ஐயங்கார், தான் ஆசிரியராக இருந்த மனோரஞ்சினி இதழில் வெளியிட்டார். அது மிகவும் புகழ் பெறவே, அதைத் தானே எழுதியதாக அறிவித்தார். அதனை வை.மு.கோதைநாயகி அம்மாள் எதிர்க்கவே நாவலை பாதியில் நிறுத்திவிட்டு, கோதைநாயகி தன்னிடம் அளித்திருந்த கைப்பிரதியையும் அழித்துவிட்டார். அதனால் சினமுற்ற வை.மு.கோதைநாயகி அம்மாள் ‘ஜகன்மோகினி’ என்னும் இதழின் உரிமையை வாங்கச் செய்து, மாதா மாதம் அதில் தொடராக வைதேகியை எழுதினார். பின்னர் அந்தப் படைப்பைப் புத்தகமாகவும் வெளியிட்டார். ஜகன்மோகினி இதழால் மனோரஞ்சனி இதழின் விற்பனை பெருமளவு பாதிக்கப்படவே, வடுவூர் துரைசாமி ஐயங்கார், அதுவரை தன் ‘மனோரஞ்சனி’ இதழில் வெளிவந்த கோதைநாயகியின் படைப்புகள் யாவும் தான் எழுதியதே என்று தன் இதழில் அறிவிப்புச் செய்தார். ஆனாலும், வை.மு.கோதைநாயகி அம்மாள் அதனைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பல நாவல்களை எழுதி, தமிழின் அக்காலத்து முன்னணி பெண் நாவலாசிரியர் ஆனார்.

அக்காலத்தில் துரைசாமி ஐயங்காரின் எழுத்திற்கு வரவேற்பு இருந்தது போலவே சம அளவில் எதிர்ப்பும் இருந்தது. தமது நாவல்கள் மூலம் மேல்நாட்டுப் பழக்கவழக்கங்களையும், அவர்களது மனோபாவங்களையும் தமிழ்நாட்டில் பரப்பி அதன்மூலம் தமிழ்மக்களின் பண்பாடு, கலாசாரத்தைச் சீர்குலைக்கிறார் என்று அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ரெய்னால்ட்ஸ் போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியவர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் துரைசாமி ஐயங்கார் மீது இருந்தாலும் சொந்தமாகவும் பல நாவல்களை எழுதியிருக்கிறார். அரசியல் தத்துவம், இங்கிலாந்து தேச சரித்திரம், தேக ஆரோக்கியம் போன்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதியிருக்கிறார். பள்ளி மாணவர்களுக்காக எளிய தமிழில் வரலாறு, புவியியல் நூல்களையும், தொடக்கக் கல்வி நூல்களையும் எழுதியுள்ளார்.

மறைவு

திரைப்படமான வடுவூராரின் ‘மைனர் ராஜாமணி’ நாவல் திரைப்படமானபோது, அதற்கு சாதீய ரீதியாக எதிர்ப்புக் கிளம்பியது. துரைசாமி ஐயங்கார் மீது வழக்கும் தொடரப்பட்டது. அதுவரை புகழின் உச்சியில் வாழ்ந்த வடுவூராரால் அந்த எதிர்ப்பையும், அதனால் எழுந்த சர்ச்சைகளையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெரிதும் மனம் புண்பட்டார். ஏற்கனவே பல்லாண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக எழுதிய Long missing Links நூலும் அதிகம் விற்பனையாகவில்லை. அந்த நூல் உருவாக்கத்திற்காகத் தனது சொத்துக்களை விற்றுப் பெரும் பணம் செலவழித்திருந்தார். ஆனால் அது விற்பனையாகாமல் பெருத்த இழப்பைச் சந்தித்தார். அதனால் விளைந்த நஷ்டமும், சாதீய எதிர்ப்பினால் ஏற்பட்ட மன அழுத்தமும் அவரது உடலைப் பாதித்தது. நோய் தீவிரமாகி, சிகிச்சை அளித்தும் பலனின்றி 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார்.

இலக்கிய இடம்

பொதுவாசிப்புக்குரிய எளிமையான மர்மநாவல்களை, தழுவல் கதைகளை எழுதியவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். இவரது படைப்புகளைப் பற்றி மது.ச.விமலானந்தம், தான் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலின் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். .............

எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சுப்ரமண்யன், தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ கீழ்காணும் குறிப்பைத் தந்துள்ளார்.

நூல்கள்

  • மங்கையர் பகட்டு
  • பாலாமணி அல்லது பக்காத் திருடன் - இரண்டு பாகங்கள்
  • சுந்தராங்கி
  • திலோத்தமை
  • கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)
  • மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் (1942)
  • டாக்டர் சோணாசலம்
  • நங்கை மடவன்னம்
  • பாவாடைச் சாமியார்
  • முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம்
  • பச்சைக்காளி, அல்லது, பணத்தைக் காத்த பயங்கரப் பேய்
  • மருங்காபுரி மாயக் கொலை
  • திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம்
  • இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி
  • சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி
  • சௌந்திரகோகிலம் - நான்கு பாகங்கள்
  • நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி
  • பூஞ்சோலையம்மாள்
  • பூர்ண சந்திரோதயம் - ஐந்து பாகங்கள்
  • மாயாவினோதப் பரதேசி - மூன்று பாகங்கள்
  • மேனகா - இரண்டு பாகங்கள்
  • வித்தியாசாகரம்
  • சொக்கன் செட்டி
  • லக்ஷ்மீகாந்தம்
  • துரைராஜா
  • கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் - இரண்டு பாகங்கள்
  • சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு
  • பிச்சு முத்துக் கோனான்
  • ஸதாநந்த போதக சாமியார்
  • தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம்
  • வசந்தகோகிலம்
  • வசந்த மல்லிகா
  • சிவராமக்ருஷ்ணன்
  • மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே!
  • சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள்
  • நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம்
  • மதன கல்யாணி - மூன்று பாகங்கள்
  • திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்
  • கனகாம்புஜம்
  • இராஜேந்திர மோகனா அல்லது காதலின் மகத்துவம்
  • காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண்
  • புதையல்
  • திகம்பரசாமியார் பால்யலீலை
  • தில்லை நாயகி அல்லது திகம்பர சாமியார் அந்தரத்யானம்
  • திவான் லொடபடசிங் பகதூர்
  • துரைக் கண்ணம்மாள்
  • பன்னியூர் படாடோப சர்மா அல்லது மயன் திருநடன மதிமயக்கம்
  • மன்மதபுரியின் மூடு மந்திரம் அல்லது திகம்பர சாமியார் திருநடன வைபவம்
  • மாய சுந்தரி
  • மிஸிஸ் லைலா மோகினி அல்லது மயன் ஜாலம்
  • லக்ஷ்மிகாந்தம்
  • வித்யா சாகரம்
  • துரைக்கண்ணம்மாள் அல்லது திருசங்கு சாஸ்திரியார்
  • சுயமரணபுரி மர்மம்

உசாத்துணை

அடிகுறிப்புகள்