அச்சோப் பதிகம்
அச்சோப் பதிகம் எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் இறுதிப் பதிகம்(51-ம் பதிகம்). சிவனுடைய கருணையை வியந்து பாடிய பதிகம் என்பதால் அச்சோ என்ற வியப்பு இடைச் சொல்லை பெயராகப் பெற்றது.
ஆசிரியர்
அச்சோப் பதிகம் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51-வதும், இறுதியானதுமான பதிகம். மாணிக்கவாசகர் வாதவூரார் என்றும் அழைக்கப்பட்டார். 9 -ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியனின் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர் இயற்றியவை திருவாசகமும், திருக்கோவையாரும்.
அச்சோப் பதிகம் தில்லையில் எழுதப்பட்டது.
நூல் அமைப்பு
அச்சோப் பதிகம் 9 கலிவிருத்தப் பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் கிடைக்காமல் போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 'அநுபவ வழி அறியாமை' என்ற உப தலைப்பைக் கொண்டது. 'அச்சோ' என்பது வியப்பு இடைச்சொல். இறைவன் தமக்குச் செய்த கருணையை அச்சோ என்று வியந்து பாடிய பதிகமாதலின், இஃது அச்சோப்பதிகம் எனப்பட்டது.
ஒவ்வொரு பாடலிலும் முன்னிரண்டு அடிகளில் உலக இன்பங்களிலும், அறியாமையிலும் உழன்று, இறை நெறியில் செல்லாத இழி குணம் உடையவராகத் தம்மைச் சொல்லிக்கொண்டு, அடுத்த இரண்டு அடிகளில், இத்தகைய என்னையும் கருணை செய்து ஆட்கொண்ட சிவனின் அருள் யாருக்குக் கிடைக்கும் என்று வியக்கிறார் மாணிக்கவாசகர். ஒவ்வொரு பாடலும் 'ஆர் பெருவார் அச்சோவே' என முடிகிறது.
பாடல் நடை
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
உசாத்துணை
- திருவாசகம் சில சிந்தனைகள்-அ.ச.ஞானசம்பந்தன் ஆர்கைவ் வலைத்தளம்
- திருவாசகம்-மூலமும் உரையும், தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.