being created

எகுமா இஷிடா

From Tamil Wiki

எகுமா இஷிடா (Eiguma Ishida) (Lieutenant-General ) (1892 -1969) ஜப்பானிய படைத்தளபதி. சயாம் மரண ரயில்பாதை திட்டத்தை நடத்தியவர்களில் ஒருவர். போர்க்கைதிகளை கொடுமைப்படுத்தியது, சாவுக்குக் காரணமானது ஆகியவற்றுக்காக போர்க்குற்ற நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்

பார்க்க சயாம் மரண ரயில்பாதை

பிறப்பு

எகுமா இஷிடா 30 மார்ச் 1892 ல் ஜப்பானில் காகோஷிமா பகுதியில் (Kagoshima) பிறந்தார்.

ராணுவப்பணி

எகுமா இஷிடா 1939 ல் ஜப்பானிய ராணுவம் ஏழாவது படைப்பிரிவில் பதவி உயர்வுடன் சேர்ந்தார். 1942 ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரை தாக்கிய ஜப்பானியப் படைப்பிரிவுகளில் ஒன்றை வழிநடத்தினார். 1943 ஆகஸ்ட் மாதம் முதல் மூன்றாவது பர்மா ரயில்பாதைப் பணியின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 1944 பெப்ருவரி முதல் நான்காவது ரயில்பாதை பணியிலும் 1945 மே மாதம் முதல் தென்னக ராணுவ ரயில்பாதைப் பணி ஆணையராகவும் பணியாற்றினார். 1945 ஆகஸ்ட் 27ல் ரயில் பாதைப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 27 ஆகஸ்ட்1945ல் ஓய்வு பெற்றார். உடனே மீண்டும் கூடுதல் பணிக்காக அழைக்கப்பட்டார். 2 செப்டெம்பர் 1945 வரை ஜப்பானிய ராணுவ உளவுத்துறையான கெம்பித்தாய் அமைப்பின் மேற்குப்பகுதி நிர்வாகியாக பணியாற்றினார்

போர்க்குற்ற விசாரணை

போர் முடிந்தபின் லெப்டினன்ட் ஜெனரல் எகுமா இஷிடா சிங்கப்பூரில் 21 அக்டோபர் 1946ல் நடைபெற்ற போர்க்குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார் போர்க்கைதிகளை சர்வதேச நெறிமுறைப்படி நடத்தாமை, சாவுக்குக் காரணமாக அமைந்தமை ஆகியவற்றுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு 3 டிசம்பர் 1946ல் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவரது துணை அதிகாரிகள் கர்னல் ஷெய்கோ நகுமுரா( Shigeo Nakamura) கர்னல் டாம்மி இஷி (Tamie Ishii) லெப்-கர்னல் ஷோய்ச்சி யானகிட்டா ( Shoichi Yanagita) ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.  

குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர் போர்க்குற்றவிசாரணைகள் பற்றி பிரிட்டனில் எதிர்ப்புகள் எழுந்தன. தண்டிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் முகாம்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களே ஒழிய அந்த ரயில்பாதையை அமைக்கும் திட்டத்தை வகுத்து அதற்காக ஆணையிட்டவர்கள் விசாரணை வளையத்திற்குள் வரவில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர், ஆனால் மேல்மட்டத்தினர் சிறிய தண்டனைகளுடன் தப்பித்துக்கொண்டனர். போர்க்கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டமை மட்டுமே விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது. பல்லாயிரம் ஆசியமக்கள், தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டமை விசாரிக்கப்படவில்லை. அதன்பொருட்டு எவரும் தண்டிக்கப்படவில்லை.

மரணம்

எகுமா இஷிடா 21 ஆகஸ்ட் 1969 ல் ஜப்பானில் மறைந்தார்

உசாத்துணை

  • Hayashi (2005): Hirofumi Hayashi, "BC Class War Crimes Trial", Iwanami Shoten 2005 (Iwanami Shinsho). : ISBN 4-00-430952-2
  • Hayashi (1998): Hirofumi Hayashi, "Judgment of War Crimes: British War Crimes Trial against Japan", Iwanami Shoten 1998.
  • Iwakawa (1995): Takashi Iwakawa, "Soil on an isolated island-BC-class war criminal trial", Kodansha, 1995.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.