வில்லியம் மில்லர்

From Tamil Wiki
Revision as of 13:33, 31 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வில்லியம் மில்லர் (13 ஜனவரி 1838 – ஜுலை 1923) கல்வியாளர், மதப்பிரச்சாரகர், தமிழ்நாட்டில் நவீனக்கல்விக்கும் நவீன இலக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்த முன்னோடிகளில் ஒருவர். சென்னை கிறி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வில்லியம் மில்லர் (13 ஜனவரி 1838 – ஜுலை 1923) கல்வியாளர், மதப்பிரச்சாரகர், தமிழ்நாட்டில் நவீனக்கல்விக்கும் நவீன இலக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்த முன்னோடிகளில் ஒருவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தலைவர். ஸ்காட்லாந்துக்காரரான மில்லர் ஃப்ரீ சர்ச் ஆப்ஃ ஸ்காட்லாந்து (Free Church of Scotland) அமைப்பின் பிரச்சாரகர். சென்னையின் சட்டச்சபையில் 1893, 1895, 1899 மற்றும் 1902ல் நான்குமுறை உறுப்பினராக இருந்தார்.

மில்லர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தோற்றத்திற்கு காரணமானவர். ஆன்மநிறைவு இறையியல் ( ) என்னும் மதக்கொள்கையை முன்வைத்தவர். இந்துமதத்துடனான உரையாடலின் விளைவான இக்கொள்கை கிறிஸ்தவ மதம் சொல்லும் மீட்பு என்பது ஆன்மா அடையும் முழுநிறைவே என்று வாதிடுகிறது. சென்னை பல்கலையின் கைசர் இ ஹிந்த் பதக்கத்தைப் பெற்றவர்.

பிறப்பு கல்வி.

மில்லர் ஸ்காட்லாந்த்தின் வடகோடியில் கெய்த்னஸ் [Caithness] மாகாணத்தில் த்ருஸோ [Thurso] என்னும் ஊரில்  1838  ஆம் ஆண்டு ஜனவரி பதிமூன்றாம் நாள் பிறந்தார்.மில்லர் நார்வே கொடிவழியினர் என்றும், தன் குலம் பற்றிய பெருமிதம் அவருக்கு இருந்தது என்றும் ஓ.கந்தசாமி குறிப்பிடுகிறார். குறிப்பாக  கடற்கொள்ளையராக இருந்து பிடிபட்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசரால் தலை துண்டிக்கப்பட்ட தன் முன்னோர் ஒருவரைப்பற்றி ஊக்கத்துடன் மில்லர் பேசுவார் என ஓ.கந்தசாமி நினைவுகூர்கிறார். நார்ஸ்மென் என்று சொல்லப்பட்டு நார்மன் எனச் சுருங்கிய தன் கொடிவழி பற்றிச் சொல்லும் மில்ல்லர் ”கெல்ட் இனத்தவர் கனவு காண்பர், சாக்ஸன்கள் தூங்குவர், நார்மன்கள் உழைப்பார்கள்’ என்று ஓர் உரையில் வேடிக்கையாகச் சொன்னதை  குறிப்பிடுகிறார்

தன் மரபிலிருந்து சாகசத்தன்மையை பெற்றுக்கொண்டதாக மில்லர் சொல்வதுண்டு வில்லியம் மோரிஸ் என்னும் ஆங்கிலக் கவிஞர் [ William Morris ] எழுதிய Sigurd The Volsung என்னும் கவிதை பிரிட்டிஷ் இலக்கியத்தில் ஓர் உச்சம் என்று மில்லர் கருதினார். தம்புசெட்டித் தெருவில் இருந்த எஸ்பிளனேட் முனையில் நிகழ்ந்த ஓர் இலக்கியக்கூட்டத்தில் மில்லர் அக்கவிதையை மிகுந்த உணர்ச்சிவேகத்துடன் சொன்னார் என கந்தசாமி நினைவுகூர்கிறார். நில்லியம் மோரிஸின் உயிர்த்துடிப்பு நார்ஸ் இனத்தவருக்கு அணியாக அமைவது என்று கருதிய மில்லர் அது தன்னுடைய இலட்சிய வாழ்க்கைச் சித்திரம் என்று எண்ணினார்.

மில்லர் அபெர்தீன் பல்கலையிலும் (Aberdeen University) எடின்பரோ பல்கலையிலும் (Edinburgh University) பயின்றார். மில்லர் தன் இருபதாம் அகவையிலேயே சீர்திருத்த கிறித்தவச் சபையின் ஊழியராக ஆகிவிட்டிருந்தார். தன் சொந்த ஊரில் பல புகழ்பெற்ற சொற்பொழிவுகளை அவர் செய்தார். சென்னையில் ஜான் ஆண்டர்சன் தொடங்கிய கிறித்தவசேவை – கல்விப்பணியில் தொய்வு ஏற்பட்டபோது அவருக்கு டாக்டர் கேண்ட்லிஷ் என்பவர் இளைஞரான மில்லரை பரிந்துரைத்தார். அவ்வாறுதான் மில்லர் 1862ல் ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து அமைப்பின் ( Free Church of Scotland) மதப்பரப்புநராக இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 24 தான்.

சென்னையின் சீர்திருத்தக் கிறித்தவ சபை ஏற்கனவே ஒரு பள்ளியை நடத்தி வந்தது. மில்லர் அதை உயர்நிலைப் பள்ளியாகவும் பின்னர் கல்லூரியாகவும் ஆக்கினார். இவ்வாறுதான் 1865ல் சென்னை கிறித்தவக் கல்லூரி அவரால் உருவாக்கப்பட்டது.