கையறு

From Tamil Wiki
கையறு

கையறு ( ) மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய நாவல். சயாம் மரண ரயில்பாதைத் திட்டத்தின் பின்னணியில் தமிழர்களின் அழிவை கருவாக்கி எழுதப்பட்டது. அந்தக் கருகொண்ட நாவல்களில் முதன்மையானதாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.

எழுத்து, வெளியீடு

கோ. புண்ணியவான் இந்நாவலை ல் எழுதினார். அவரே நூலை வெளியிட்டு கேட்பவர்களுக்கு தபால்கள் வழியாகவும் நேரடியாகவும் அனுப்பினார். தமிழகத்தில் இந்நாவலை யாவரும் பதிப்பகம் வினியோகம் செய்தது.

வரலாற்றுப்பின்னணி

மலேசியாவின் தோட்டத்தொழிலாளர்கள் 1850 முதல் தொடர்ச்சியாக இந்தியாவிலிருந்து மலாய் தீபகர்ப்பத்தில் ரப்பர்த் தோட்டங்கள் அமைப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள். அவர்கள் அங்கே கடுமையான ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆளானார்கள். இரண்டாம் உலகப்போர் மூண்டபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை கைவிட்டுவிட்டு விலகிச்செல்ல அவர்கள் ஜப்பானியர்களின் ஆதிக்கத்துக்குக் கீழே சென்றனர். ஜப்பானியர்கள் அவர்களை அடிமைகளாகப் பிடித்து பர்மா ரயில்திட்டத்தில் கடுமையாக உழைக்கவைத்தனர். அங்கிருந்த கொடுமைகளால் 60000 தமிழர்கள் மடிந்தனர் என சொல்லப்படுகிறது. (பார்க்க சயாம் மரண ரயில்பாதை)

கதைச்சுருக்கம்

கோ.புண்ணியவான் எழுதிய கையறு ஆட்சியாளர், அரசு என எந்தப் பாதுகாவலும் இல்லாமல் பல்லாயிரம் தமிழ்மக்கள் தங்களுக்கு அன்னியமான நிலத்தில் நிராதரவாக விடப்பட்ட நிலையைச் சித்தரிக்கிறது.

இலக்கிய இடம்

சயாம் மரண ரயில்பாதை அமைக்கப்பட்டதை களமாக கொண்ட நாவல்களில் கலைத்திறனால் முதன்மையானதாகக் கருதப்படுவது கோ. புண்ணியவான் எழுதிய கையறு நாவல். ’தமக்கு நேர்ந்த துன்பங்களையும் அநியாயங்களையும் தடுக்கவியலாத கையறு நிலை மட்டுமின்றி அவற்றை எதிர்கொண்டு மடிந்ததற்கு ஒரு வரலாற்று நியாயம்கூடக் கிட்டாத கையறு நிலையும் அத்தமிழர்களைச் சூழ்ந்திருந்ததைக் கவனப்படுத்தும் விதமாகச் சிறப்பாக அமைந்துள்ளது கையறு நாவல்.” என்று சிவானந்தம் நீலகண்டன் மதிப்பிடுகிறார். ’கையறு நாவலின் பலமாக உணர்வது அதன் உரையாடல்களும் நுண்சித்தரிப்புகளும்தான். எல்லா காட்சிகளையும் உயிர்பான உரையாடல்கள் வழியும் சித்தரிப்புகள் வழியும் இயன்ற அளவு அனுபவங்களாக்க  முயன்றுள்ளார்’ என்று அ.பாண்டியன் குறிப்பிடுகிறார்

“இந்நாவல் வரலாற்று நாவல்தான். ஆனால் சயாமில் தண்டவாளம் போடப்பட்ட மொத்த வரலாற்றையும் சொல்லும் நாவலல்ல. கோ.புண்ணியவான் இதை சிதைக்கப்பட்ட மனிதர்களின் வரலாறாகவே கட்டமைத்துள்ளார். அம்மக்களின் வழியாகவே அவர்களின் இயல்புகள் வழியாகவே வரலாற்றைப் புனைந்து செல்கிறார். நெருக்கடியான சூழல், மரணத்தின் அத்தனை கதவுகளையும் திறந்துவைத்துள்ள காலம், நம்பகமற்ற சக மனிதர்கள் எனச் சூழ்ந்துள்ள நிலத்தில் மனிதன் என்னவாகத் தன்னை மாற்றிக்கொள்கிறான் என இன்னொரு உள்ளடுக்கை நாவல் உக்கிரமாகப் பேசுகிறது. அதுவே இப்புனைவுக்கு மலேசிய இலக்கியத்தில் சிறந்த இடத்தை வழங்குகிறது.” என்று ம. நவீன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை