உறுபசி

From Tamil Wiki
உறுபசி

உறுபசி ( 2005) எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவல். சம்பத் என்னும் கதாபாத்திரனூடாக தமிழ்ச்சூழலில் அறிவுத்தேடல்கொண்ட ஒருவனின் வீழ்ச்சியைச் சொல்கிறது

எழுத்து, வெளியீடு

உறுபசி எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய மூன்றாவது நாவல். 2005ல் இதை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பின் அவனைப்பற்றிய வெவ்வேறு கோணங்களிலான தேடல்கள் வழியாக அவன் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கும் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது உறுபசி. சம்பத்தின் மரணத்துக்குப் பின்னால் சம்பத் பற்றிய நினைவுகளுடன் மூன்று நண்பர்கள் ஒரு பயணம் மேற்கொள்வதில் ஆரம்பிக்கிறது நாவல். அவர்கள் எவருமே சம்பத்துடன் சீரான உறவை வைத்திருந்தவர்கள் அல்ல. ஒருவர் சம்பந்துக்கு மற்றொருவருடன் தான் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் சம்பத்துக்குமான உறவுகள் நினைவுகள் மற்றும் உரையாடல்கள் வழியாக சொல்லப்படுகின்றன.

சம்பத் தீப்பெட்டிகள் மேலும் தீயின் மேலும் மோகம் கொண்டவனாக அறிமுகம் ஆகிறான். அவன் விசித்திரமான கட்டற்ற இயல்பு கொண்டவன். தனிமையில் வாசித்துக்கொண்டே இருப்பவன். வேலைக்குப்போய் சம்பாதிக்கும் ஆர்வமில்லாதவன். நண்பர்களுடனான பழக்கங்களில் சமூகநெறிகளை கடைப்பிடிக்காதவன் என வெவ்வேறு சித்திரங்கள் சொல்லப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படுகின்றன. யாழினி, ஜெயந்தி என சம்பத்தின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பெண்கள் வருகிறார்கள். சம்பத்தின் மரணத்தில் தொடங்கும் நாவல் அவன் மரணத்தில் முடிவடைகிறது.

இலக்கிய இடம்

உறுபசி தன் நுண்ணுணர்வு மற்றும் அறிவுத்தேடலால் சமூகத்துடன் ஒன்றமுடியாது போய் அழிந்த ஒருவனின் வாழ்க்கை.அவரை புரிந்துகொள்ளவோ, அணுகவோ முடியாத நண்பர்களின் பார்வையில் முன்வைக்கப்படுகிறது. ’எத்தனையோ முறை எபப்டியெல்லாமோ சொல்லபப்ட்டுவிட்ட மானுட அவலம்தான். ஆனால் அதன் அபாரமான நம்பகத்தன்மை காரணமாகவே அது மிக அருகில் நிகழ்வதாக மாறி நம்மை பலவகையான சிந்தனைச் சுழல்களுக்குள் கொண்டுசெல்கிறது.’ என்று ஜெயமோகன் இந்நாவலை மதிப்பிடுகிறார்.

உசாத்துணை