அகப்பொருட்கோவை
To read the article in English: Agaporutkovai.
அகப்பொருட்கோவை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது அகப்பொருள் சார்ந்த இலக்கிய வகை. தலைவன் தலைவி ஆகியோரது காதல் உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஒரு கதை போல் படிப்படியாகக் காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கும் நூல் அகப்பொருட்கோவை. கோவை அல்லது ஐந்திணைக் கோவை என்ற பெயர்களும் உண்டு.
இருவகை கோவை
கோவை இலக்கியம் அகப்பொருட்கோவை, புறப்பொருட்கோவை இன இரண்டு வகையாக அமையும் என்று சில இலக்கண நூல்கள் கூறுகின்றன. சுவாமிநாதம் என்னும் இலக்கண நூல் புறக்கோவை பற்றி கூறுகின்றது. எனினும், புறப்பொருட்கோவை நூல் எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே நடைமுறையில் அகப்பொருட்கோவை, கோவை இரண்டுமே அகப்பொருட்கோவை இலக்கியத்தையே குறிக்கின்றன. தமிழின் முதல் கோவை இலக்கியம் பாண்டிக்கோவை (பொ.யு. எட்டாம் நூற்றாண்டு) எனக் கருதப்படுகிறது.
அமைப்பு, பேசுபொருள்
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு பின் மணம் புரிந்து இல்லறம் நடத்தும் நிகழ்வுகளைச் சொல்வது இக் கோவை இலக்கியம். தலவனும் தலைவியும் முதன்முதலில் காண்பதுமுதல் திருமணத்திற்குப்பின் நடத்தும் வாழ்க்கை நிலைகள்வரையில் ஊடல், குழந்தை பெற்று வளர்த்தல், முதலியன உட்பட நானூறு துறைகளையும் ஒரு வாழ்க்கை வரலாறுபோல் தொடர்ந்து காட்டுவது கோவை. காதலர் கண்ட இடம், பழகிய சோலை முதலியவற்றைச் சொல்லும்போதும், உவமைகளை அமைக்கும்போது, ஒர் அரசனையோ வள்ளலையோ தெய்வத்தையோ புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த நானூறு பாட்டுகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம்பற்றி அந்தத் தலைவனுடைய மலை, நாடு, ஆறு, பண்புகள், செயல்கள் முதலியவை பாடப்படும். அவ்வாறு அமையும் நூல்வகையே கோவை.
- "இருவகைப்பட்ட முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும் பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பொழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூறாகத் திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப்பொருட் கோவை."
என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் உரை.
கோவை நூல்கள்
தமிழின் முதல் கோவை இலக்கியம் பாண்டிக்கோவை (பொ.யு. எட்டாம் நூற்றாண்டு) எனக் கருதப்படுகிறது.
- திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
- தஞ்சைவாணன் கோவை
- குலோத்துங்கன் கோவை - ஒட்டக்கூத்தர்
- பாண்டிக் கோவை
- திருவெங்கைக்கோவை
- கோடீச்சுரக்கோவை
- திருவாரூர்க்கோவை
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- Web Blog - Dr.v.j.premalatha: சிற்றிலக்கிய ஆய்வுகள் -1
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:37 IST