under review

சோ ராமசாமி

From Tamil Wiki
Revision as of 13:28, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected வழக்குரைஞர் to வழக்கறிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)
சோ ராமசாமி
Cho Ramasamy

சோ ராமசாமி (ராமசாமி ஸ்ரீநிவாஸன்; சோ) (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016) நடிகர், நாடக, திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இதழாளர், அரசியல் விமர்சகர், பத்திரிகை ஆசிரியர். வழக்குரைஞராகப் பணியாற்றினார். ‘துக்ளக்’ என்னும் வார இதழைத் தோற்றுவித்து நடத்தினார். ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகப் பணியாற்றினார். சோ ராமசாமியின் மறைவுக்குப் பின் இந்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது.

பிறப்பு, கல்வி

ராமசாமி என்னும் இயற்பெயரை உடைய சோ ராமசாமி, அக்டோபர் 5, 1934 அன்று, சென்னையில், ஸ்ரீநிவாச ஐயர் - ராஜம்மாள் இணையருக்குப் பிறந்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை (இண்டர்மீடியட்) விவேகானந்தா கல்லூரியில் பயின்றார். லயோலா கல்லூரியில் பயின்று இளம் அறிவியலில் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பி.எல். பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சோ ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். டி.டி.கே. நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்தார். மணமானவர். மனைவி: சௌந்திரா. மகன்: ஸ்ரீராம். மகள்: சிந்துஜா.

நாடகம்

நாடக ஆர்வம் கொண்டிருந்த சோ ராமசாமி, ஒய்.ஜி. பார்த்தசாரதியின் ’யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்ற நாடகக் குழுவில் மேடை உதவியாளராகப் பணிபுரிந்தார். எழுத்தாளர் தேவனின் கதையான ‘கல்யாணி’ என்ற மேடை நாடகத்தின் மூலம் நாடக நடிகராக அறிமுகமானார். பகீரதன் எழுதிய ‘தேன்மொழியாள்’ நாடகத்தில் ‘சோ’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அது முதல் 'சோ' ராமசாமி என அழைக்கப்பட்டார். ‘இஃப் ஐ கெட் இட்’(If I get it) என்பதுதான் சோ ராமசாமி கதை-வசனம் எழுதிய முதல் நாடகம். அது சிறந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘யார் வேஷதாரி’, ‘ஒய்நாட்’ போன்ற நாடகங்களை எழுதினார். நண்பர்களுடன் இணைந்து ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் குழு’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். அதன் மூலம் பல நாடகங்களை இயக்கி, நடித்து, அரங்கேற்றினார். ‘கோவாடிஸ்' (Quo Vadis) என்ற நாடகம், சோ ராமசாமியின் முதல் அரசியல் நையாண்டி நாடகம். ’சம்பவாமி யுகே யுகே’, ’ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’ ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’, ’முகமது பின் துக்ளக்’, என 20-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி நடித்தார். சோவின் அரசியல் அங்கத நாடகங்கள் பலராலும் ரசிக்கப்பட்டு வரவேற்கப்பட்டன.

1955-ல் ஆரம்பிக்கப்பட்ட சோவின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு 1990 வரை இயங்கியது. 35 வருடங்களில் 29 நாடகங்கள், நாலாயிரத்துக்கும் அதிக முறை அரங்கேற்றம் கண்டன.

இதழியல்

சோ, தை 1, 1970, அன்று ‘துக்ளக்’ இதழை ஆரம்பித்தார். அரசியல் விமர்சனத்தைத் தனது களமாகக் கொண்டார். அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளை தனக்கே உரிய தனிப் பாணியில் நையாண்டியுடன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். சோவின் விமர்சனங்களும், கட்டுரைகளும், அவை சார்பான அவரது முயற்சிகளும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படக் காரணங்களாகின.

துக்ளக் இதழுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தபோது அவற்றைத் துணிச்சல், உண்மை, தேசப்பற்றுடன் எதிர்கொண்டார். 1976-ல், 'Pickwick' என்ற ஆங்கில இதழைத் தொடங்கிச் சில காலம் நடத்தினார்.

சோ ராமசாமி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

சோ, துக்ளக் இதழில் அரசியல், விமர்சனக் கட்டுரைகளை, நாடகங்களை எழுதினார். பின்னர் அவை நூல்களாக வெளியாகின. சோ ராமசாமியின் 'ஹிந்து மஹா சமுத்திரம்', 'மஹாபாரதம் பேசுகிறது', 'வால்மீகி ராமாயணம்' போன்றவை இந்துத்துவ பார்வையுடன் கூடிய படைப்புகளாக அறியப்பட்டன. 'இந்து தர்மம்', 'புரட்சி கீதை', 'அன்றைய வேதங்கள் முதல் இன்றைய வியவஹாரங்கள் வரை (தர்மத்தின் ஸாரம்)' போன்றவை துக்ளக் வாசகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டன. இந்தியப் புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் குறித்தும், கலாச்சாரம், மதம் குறித்தும் பல சிந்தனைகளைத் தன் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்.

சோ ராமசாமி தனது வாழ்க்கை அனுபவங்களை ’ஒசாமாஅஸா’ (ஒரு சாதாரண மனிதனின் அசாதரணமான அனுபவங்கள்) என்ற தலைப்பில் நூலாக எழுதினார். கட்டுரை, நாடகம், விமர்சனக் கட்டுரைகள், இந்து மதம் சார்பான நூல்கள் என 90-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

திரைப்படம்

சோ. ராமசாமி, ‘பார் மகளே பார்’ என்ற திரைப்பத்தில் கார் மெக்கானிக் ஆக அறிமுகமானார். தொடர்ந்து ’தேன்மழை’, ’நினைவில் நின்றவள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘பொம்மலாட்டம்’ ’மனம் ஒரு குரங்கு’, ‘மறக்க முடியுமா’, ‘எங்கள் தங்கம்’, ‘ரிக்ஷாக்காரன்’ தொடங்கி குரு சிஷ்யன், அதிசயப் பிறவி எனப் பல திரைப்படங்களில் நடித்தார்.

வித்தியாசமான உடல் மொழி, கேலி, கிண்டல் கலந்த வசன உச்சரிப்பு, சமூக விமர்சனம் என மாறுபட்ட நடிப்பை வழங்கினார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், ஜெயலலிதா, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் எனப் பல நடிகர்களுடன் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ‘மிஸ்டர் சம்பத்’, ’முகமது பின் துக்ளக்’, ‘உண்மையே உன் விலை என்ன?’, ’யாருக்கும் வெட்கமில்லை’ போன்ற படங்களின் கதை வசனம் எழுதி, இயக்கினார். ’நீலகிரி எக்ஸ்பிரஸ்’, ‘ஆயிரம் பொய்’, ‘நிறைகுடம்’, ‘பொம்மலாட்டம்’, ’நினைவில் நின்றவள் போன்ற படங்களுக்குக் கதை-வசனம் எழுதினார்.

சோ. ராமசாமி, தொலைக்காட்சித் தொடர்களிலும் பங்களித்தார். ‘வந்தேமாதரம்’ ‘எங்கே பிராமணன்’, சரஸ்வதியின் செல்வன் போன்ற சோ. ராமசாமியின் தொடர்கள் மிகவும் புகழ்பெற்றன.

அரசியல்

சோ. கட்சி சாராதவராகச் செயல்பட்டாலும் பா.ஜ.க. தலைவர்களிடமும், மூப்பனார் போன்ற காங்கிரஸைச் சேர்ந்தவர்களிடமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு. கருணாநிதி போன்றவர்களிடமும் நட்புப் பாராட்டினார். அதே சமயம் அக்கட்சிகளை விமர்சிக்கவும் தயங்கியதில்லை. ’தமிழ் மாநில காங்கிரஸ்’ என்னும் அரசியல் கட்சி தோன்றுவதற்கும், அது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கும் மிக முக்கியப் பங்களித்தார். தமிழகத்தின் ஆட்சி மாற்றங்களின் பின்னணியில் செயல்பட்டார்.

நரேந்திர மோடி எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமாராக ஆவார் என்பதை முன்னரே கணித்து துக்ளக் இதழில் எழுதினார். துக்ளக் ஆண்டு விழாவிலும் அறிவித்தார். இதன் மூலம் அரசியல் பார்வையாளர்களால் சோ. அரசியல் தீர்க்கதரிசியாக அறியப்படுகிறார்.

பொறுப்புகள்

  • இந்திய மாநிலங்களவை உறுப்பினர் – 1999 - 2005

விருதுகள்

  • ஹால்டி காட்டி விருது
  • வீர கேசரி விருது
  • ராம்நாத் கோயங்கா விருது
  • நசிகேதஸ் விருது
  • பத்மபூஷண் விருது (மறைவுக்குப் பின்)

மறைவு

சோ. ராமசாமி, உடல்நலக்குறைவால் டிசம்பர் 07, 2016 அன்று, 82-ம் வயதில் காலமானார். அவரது மறைவிற்குப் பின் 2017-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மபூஷண் விருது’ வழங்கியது.

மதிப்பீடு

சோ ராமசாமி வழக்கறிஞர், சட்ட ஆலோசகர், திரைப்பட, நாடக நடிகர், இயக்குநர், கதை – வசன ஆசிரியர் அரசியல் ஆலோசகர், எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர், இதழாசிரியர் எனப் பல துறைகளில் முக்கியப் பங்களித்தார். தனது கூர்மையான அரசியல் கருத்துக்களுக்காகவும், நையாண்டி விமர்சனங்களுக்காவும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாலும் விரும்பப்பட்டார். சோ ராமசாமி, தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த இதழாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.

சோ ராமசாமி குறித்து விமர்சகர் ஆர்வி, “என்னைப் பொறுத்த வரை அவரது அதிமுக்கியமான முகம் இதழியல் முகம்தான்.” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “அவரது இரண்டாவது முக்கிய முகமாக நான் கருதுவது அவரது எழுத்தாளர்/நாடக ஆசிரியர் முகம்தான்.... சோவின் முக்கியமான மூன்றாவது முகம் அவரது அரசியல் முகம். அவரோடு தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாத தலைவரே இல்லை என்று சொல்லலாம். அதனால் தலைவர்களுக்கு நடுவே பாலமாக அவ்வப்போது இருந்திருக்கிறார்.[1] ” என்று குறிப்பிட்டார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • மஹாபாரதம் பேசுகிறது - பாகம் 1
  • மஹாபாரதம் பேசுகிறது - பாகம் 2
  • வால்மீகி ராமாயணம் - பாகம் 1
  • வால்மீகி ராமாயணம் - பாகம்2
  • ஹிந்து மஹா சமுத்திரம்-1
  • ஹிந்து மஹா சமுத்திரம்-2
  • ஹிந்து மஹா சமுத்திரம்-3
  • ஹிந்து மஹா சமுத்திரம்-4
  • ஹிந்து மஹா சமுத்திரம்-5
  • ஹிந்து மஹா சமுத்திரம்-6
  • அதிகப் பிரசங்கம்
  • அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்
  • எங்கே பிராமணன்?
  • இந்து தர்மம்
  • இந்தியா எங்கே போகிறது?
  • இறைவன் இறந்து விட்டானா?
  • இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்
  • காமராஜை சந்தித்தேன்
  • கூவம் நதிக் கரையினிலே!- 1
  • கூவம் நதிக் கரையினிலே!-2
  • கூவம் நதிக் கரையினிலே!-3
  • மை டியர் பிரும்மதேவா
  • புரட்சி கீதை
  • துக்ளக் படமெடுக்கிறார்
  • சர்க்கார் புகுந்த வீடு
  • திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்
  • வந்தேமாதரம்
  • வெறுக்கத்தக்கதா பிராமணியம்?
  • வாஷிங்டனில் நல்லதம்பி
  • யாரோ இவர் யாரோ?
  • அன்றைய வேதங்கள் முதல் இன்றைய வியவஹாரங்கள் வரை (தர்மத்தின் ஸாரம்)
  • ராஜ்ய சபையில் சோ
  • எமர்ஜென்ஸி
  • நம்மை நாம் அறிவோம்
  • இன்று நாளை என்னுடைய நிலைகள்...
  • சோ - வீரமணி பேட்டி
  • யார் பெறுவார் இந்த அரியாசனம்?
  • அடுத்த ஆட்சி நமதே!
  • அரசியல் ராமாயணம் (சித்திரக் கதை)
  • தடை செய்யப்பட்ட துக்ளக்
  • துக்ளக் ராசி - பலன்
  • சிரிப்பு வருகிறது! உஷார்!
  • ஒண்ணரைப் பக்க நாளேடு - பாகம் - 1
  • ஒண்ணரைப் பக்க நாளேடு - பாகம் - 2
  • ஒண்ணரைப் பக்க நாளேடு - பாகம் - 3
  • ஒண்ணரைப் பக்க நாளேடு - பாகம் -4
  • ஒண்ணரைப் பக்க நாளேடு - பாகம் 5
  • முஸ்லிம் லீக் - ஆர்.எஸ்.எஸ். சந்திப்பு
  • சட்டம் என்ன சொல்கிறது? தேர்(தல்) திருவிழா
  • தமிழக அரசியல் கட்சிகள்
  • திக்குத் தெரியாத நாட்டில்!
  • மதச்சார்பின்மை + செக்யூலரிஸம் = ?
  • ஐக்குவின் நீதி சாஸ்திரம்
  • ஐக்குவின் கணிப்பு
  • ஸ்திதப்பிரக்ஞன்
  • சாத்திரம் சொன்னதில்லை
  • இதுதான் என் வழக்கு!
  • டியர் மிஸ்டர் வாசகரே!
  • இரவில் சென்னை
  • நமது தலைநகரம் மாஸ்கோ!
  • இவர்கள் சொல்கிறார்கள்
  • அனுபவங்களும் அபிப்பிராயங்களும்
  • எது தர்மம்?
  • பத்திரிகைகள் பலவிதம்...
  • அரட்டை சங்கம்
  • துக்ளக் வாழ்கிறார்
  • எனக்குத் தெரிந்த நியாயம் சொல்கிறேன்
  • துக்ளக் ஆண்டு விழா - 1
  • துக்ளக் ஆண்டு விழா – 2
நாடக நூல்கள்
  • என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
  • இன்பக்கனா ஒன்று கண்டேன்
  • இரவில் சென்னை!
  • ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு
  • முகமது பின் துக்ளக்
  • மனம் ஒரு குரங்கு
  • நேர்மை உறங்கும் நேரம்
  • சாதல் இல்லையேல் காதல்!
  • சம்பவாமி யுகே! யுகே!
  • சரஸ்வதியின் சபதம்
  • உண்மையே உன் விலை என்ன ?
  • சட்டம் தலை குனியட்டும்
  • உறவுகள் இல்லையடி பாப்பா
  • யாருக்கும் வெட்கமில்லை!
  • ஏன் கூடாது?
  • எங்கே போகிறாய்?
  • எதற்காக?
நேர்காணல் நூல்கள்
  • இவர்களைச் சந்தித்தேன் பாகம்- 1
  • இவர்களைச் சந்தித்தேன் பாகம் - 2
  • இவர்களைச் சந்தித்தேன் பாகம் - 3

ஆங்கில நூல்

  • Essence of Dharma - 1
  • Essence of Dharma - 2

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 09:22:07 IST