64 சிவவடிவங்கள்: 32-தட்சிணாமூர்த்தி
- தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தட்சிணாமூர்த்தி (பெயர் பட்டியல்)
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று தட்சிணாமூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் முப்பத்தியிரண்டாவது மூர்த்தம் தட்சிணாமூர்த்தி. சிவபெருமான் தெற்கு நோக்கி அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த திருக்கோலமே தட்சிணாமூர்த்தி. சிவாலயங்களில் ஆலமரத்தின் கீழ் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். வலதுகாலால் அபஸ்மாரம்(அறியாமை) என்று அறியப்படும் அரக்கனை மிதித்த நிலையில் இருப்பார். நான்கு கரங்களில் அக்கமாலை, அமிர்த கலசம், ஓலைச்சுவடி, தர்ப்பைப்புல் ஆகியவற்றை ஏந்தியிருப்பார்.
தட்சிணாமூர்த்தி ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, வியாக்கியான தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, அத்த தட்சிணாமூர்த்தி - எனப் பல வடிவங்களில் காட்சி தருகிறார்.
தொன்மம்
பிரம்மாவுக்கு சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என நான்கு மகன்கள். அவர்கள் வேதத்தை முழுமையாகக் கற்றிருந்தனர். இருந்தாலும் அவர்களது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதனைச் சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினர்.
உடன் சம்மதித்த சிவபெருமான், நந்திதேவரிடம் கட்டளையிட்டுவிட்டு, சனகாதி முனிவர்களுக்கு பசு, பதி, பாசம் இவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்.
அதைக் கேட்ட அவர்கள், சிவபெருமானிடம், எல்லாவற்றிலிருந்தும் விலகி மனம் தன்னுள் தான் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்ய வேண்டினர்.
சிவபெருமான் அதற்கு மெல்லிய புன்னகையுடன், ’அந்நிலை இவ்வாறிருக்கும்’ என்று கூறி, தானும் ஒரு முனிவன் போலாகி, அமர்ந்த கோலத்தில் தன் கைகளைச் சின் முத்திரையாக நால்வருக்கும் காட்டி தியானத்தில் ஆழ்ந்தார். அவரைப் பின்பற்றி அதே நிலையில் அந்த நால்வரும் யோகத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இருந்த கேள்விகள் சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்தன. மனம் அமைதியடைந்து பேரின்பத்தில் ஆழ்ந்தனர். மௌனம் மட்டுமே அங்கு நிலைத்திருந்தது.
இவ்வாறு இறைவனாகிய சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த திருக்கோலமே தட்சிணாமூர்த்தி.
வழிபாடு
தட்சிணாமூர்த்தி ஞானத்தின் அதிபதியாக வழிபடப்படுகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். சிவாலயங்களில், கருவறையின் வெளிப்பக்கம் (கோஷ்டத்தில்) தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்தில் தட்சிணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது. இத்தலத்தில் மாணிக்கவாசகர் அஷ்டமாசித்திகள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது. தென்காசி மாவட்டம் புளியறை சதாசிவமூர்த்தி கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது.
தட்சிணாமூர்த்தி, குடந்தை - நீடாமங்கலம் வழியில் உள்ள ஆலங்குடியில் உற்சவ மூர்த்தியாக இருக்கிறார். இங்கு இறைவனுக்கு சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இருபத்தி நான்கு நெய் விளக்குகள் ஏற்ற, திருமணத்தடை நீங்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் அளிக்க நினைவாற்றல் பெருகும் எனவும், தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற, தடைபெற்ற திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும் எனவும் நம்பிக்கை நிலவுகிறது. இங்கு நடக்கும் குருப்பெயர்ச்சி விழா விசேஷமானது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:10:05 IST