64 சிவவடிவங்கள்: 4-சதாசிவ மூர்த்தி
- சதாசிவம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சதாசிவம் (பெயர் பட்டியல்)
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சதாசிவ மூர்த்தி.
வடிவம்
64 சிவவடிவங்களில் நான்காவது மூர்த்தி சதாசிவ மூர்த்தி. ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர். அவை,
- ஈசானம் ஈசான முகம் ஸ்படிக நிறத்தில் மேல் நோக்கியபடி காணப்படும். இது பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும்.
- தத்புருஷம் -தத்புருஷம் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்துடன் கிழக்கு நோக்கியபடி அமைந்திருக்கும். இது பஞ்சபூதங்களில் நிலத்தைக் குறிக்கும்.
- சத்யோஜாதம் - சத்யோஜாதம் சந்திரனின் கதிர்களைப் போன்ற நிறத்துடன் மேற்கு நோக்கியபடி காணப்படும். இது பஞ்சபூதங்களில் நெருப்பைக் குறிக்கும்.
- வாமதேவம் - வாமதேவ லிங்கம் காவி நிறத்தில் வடக்கு நோக்கியபடிக் காட்சி தரும். இது பஞ்சபூதங்களில் காற்றைக் குறிக்கும்.
- அகோரம் - அகோரம் நீலம் மற்றும் கருப்பு கலந்த நிறத்தில் தெற்கு நோக்கியபடி அமைந்திருக்கும். இது பஞ்சபூதங்களில் நீரைக் குறிக்கும்.
சதாசிவமூர்த்தி தலைக்கு இரண்டாகப் பத்துக் கரங்களை உடையவர். நெற்றிக் கண்களோடு சேர்த்து பதினைந்து கண்களைக் கொண்டவர். வலக்கரங்களில் சூலமும், மழுவும், கட்வங்கமும் (எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோடும் உள்ள ஆயுதம்), வாளும், பீஜா பூரகமும் (நாரத்தைப்பழம், மதுலிங்கப்பழம்), வச்சிரமும், அபயமுத்திரையும் இருக்கும். இடக்கரங்களில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம் (உடுக்கை), மணிமாலை, வரதமுத்திரை பரிவட்டத்துடன் காணப்படுவார். தியான பூஜைக்காகத் சகளத் திருவுருவத்துடன் காட்சியளிப்பார்.
சதாசிவ மூர்த்தியின் இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர். இம்முர்த்திகள் ஐவரும் அடங்கியுள்ள நிலையே 'கன்மசாதாக்கியம்' எனப்படுகிறது. தூய ஸ்படிக நிறத்துடன் காணப்படும் இவரது தேவி மனோன்மணி.
சதாசிவ மூர்த்தி, தனது ஐந்து முகங்கள் வழியாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்கிறார்.
ஆகமங்கள்
முனிவர்கள் மற்றும் ரிஷிகளின் வேண்டுகோளின் பொருட்டு சதாசிவ மூர்த்தி மொத்தம் 28 ஆகமங்களைப் படைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
- சதாசிவமூர்த்தி, கௌசிக முனிவரது வேண்டுகோளின்படி சத்யோஜாத முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களைப் படைத்தார்.
- காசியப முனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆகமங்களைப் படைத்தார்.
- பரத்வாஜ மகரிஷிக்காக அகோர முகத்திலிருந்து விஷயம், நீச்சுவாசம், சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் என ஐந்து ஆகமங்களைப் படைத்தார்.
- கௌதம முனிவரின் பொருட்டு தத்புருஷ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களைப் படைத்தார்.
- அகத்தியருக்காக ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு ஆகமங்களைப் படைத்தார்.
வழிபாடு
சிவன் சதாசிவ மூர்த்தியாக சிதம்பரத்தில் காட்சியளிக்கிறார். அங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் சிவபெருமானை அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்றும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நிவேதனம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலை ஏற்படும். என்றும், இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிஷேகிக்க அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதல் கோபுரத்திலும், மேலைக் கோபுரத்தின் முதல் நிலையின் மேற்புறத்தில் வலப்பக்கமும், கிழக்கு கோபுரத்தின் கிழக்குப் பகுதியின் முதல் நிலையிலும், இரண்டாம் கோபுர வடப் பக்கம் கீழ் வரிசையிலும் சந்நிதி நுழைவாயிலில் உள்ள துவாரபாலகர்களுக்குப் பின்புறத்திலும், இன்னும் சில தமிழகக் கோயில்களிலும் சதாசிவமூர்த்தியின் வடிவம் அமைந்துள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:05:40 IST