under review

குள்ளச் சித்தன் சரித்திரம்

From Tamil Wiki
Revision as of 22:28, 30 April 2022 by Madhusaml (talk | contribs)
குள்ளச்சித்தன் சரித்திரம்

குள்ளச்சித்தன் சரித்திரம் (2000 ) யுவன் சந்திரசேகர் எழுதிய முதல்நாவல். குள்ளச்சித்தர் என அறியப்படும் ஒரு மறைஞானியின் வாழ்க்கையை அவர் நிகழ்த்திய மாயச்செயல்களுடன் வெவ்வேறு வகையில் தொடர்பு கொண்டிருந்த பலருடைய அனுபவங்கள் வழியாகவும், அவர்கள் எழுதிய குறிப்புகள் வழியாகவும் சித்தரிக்கும் மீபுனைவு (Metafiction) நாவல்.

எழுத்து, வெளியீடு

யுவன் சந்திரசேகர் இந்நாவலை 2000 த்தில் எழுதினார். தமிழினி பதிப்பகம் இதை வெளியிட்டது

கதைச்சுருக்கம்

குள்ளச்சித்தர் என்றும் வாமன ஸ்வாமிகள் என்றும் அழைக்கப்படும் பெயரில்லாத சித்தர் ஒருவரின் வரலாற்றை எழுத முயலும் ஹாலாஸ்யமையர் சித்தருடன் தொடர்பு கொண்டிருந்த முத்துஸ்வாமியின் அனுபவங்களை அறிகிறார். போலீஸ் வேலையில் இருக்கும் ஹாலாஸ்யமையர் வேலையை விட்டுவிட்டு முத்துச்சாமிக்கு கற்றுச் சொல்லியாகி அவர் சரிதத்தை எழுதுகிறார். அவர் மறைவிற்குப் பிறகு அவர் வேண்டுகோளின்படி குள்ளச்சித்தர் மடத்துக்கு அகல்விளக்கேற்றி வைக்க வருகிறார். அங்கு அவருக்கு குள்ளச் சித்தன் கதை தெரியவருகிறது. குழந்தைப்பேறில்லாத பழனியப்பச் செட்டியார் சிகப்பி ஆச்சியின் கதை, திருமணத்துக்கு முன் குழந்தைபெற்ற தாயாரம்மாள் மீண்டும் கன்னியாகவே ஆகும் கதை என தனித்தனிக் கதைகள் ஒன்றாக இணைகின்றன. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகைகளில் தோன்றி அற்புதங்கள் வழியாக அனைவரையும் இணைக்கும் குள்ளச்சித்தன் இந்தக் கதாபாத்திரங்கள் வாழும் உலகுக்கு அப்பால் இன்னொரு யதார்த்தத்தில் வாழ்பவர் என நாவல் காட்டுகிறது

முன்னோடி நாவல்கள்

குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலின் முன்னோடி வடிவங்களாக க.நா.சுப்ரமணியம் எழுதிய அவதூதர் என்னும் நாவலையும், அசோகமித்திரன் எழுதிய மானசரோவர் என்னும் நாவலையும் குறிப்பிடலாம்

இலக்கிய இடம்

குள்ளச்சித்தன் சரித்திரம் பின்நவீனத்துவக் கதை சொல்லலான பலவகை யதார்த்தங்களை கலந்து ஒரு சித்தரிப்புவலையை உருவாக்கும் பாணிக்கு தமிழில் மிகச்சிறந்த உதாரணம். நூல்கள், நினைவுகள், தொன்மங்கள், அன்றாட யதார்த்தம் அனைத்தும் ஒன்றாகக் கலந்து ஓர் உலகை உருவாக்குகின்றன. குள்ளச்சித்தன் சரித்திரம் என்னும் இந்நாவலே இதற்குள் வரும் ஹாலாஸ்யமையரால் எழுதப்படுவது. பின்நவீனத்துவ பாணி எழுத்தை ஐரோப்பிய நாவல்களில் இருந்து கடன்கொள்ளாமல் இந்திய- தமிழ் வாழ்க்கையில் என்றும் இருந்துகொண்டிருக்கும் கதைமரபுகளில் இருந்தும், ஆன்மிக மரபிலிருந்தும் எடுத்தாண்டிருக்கிறார் ஆசிரியர். தமிழகச் சித்தர் மரபு எனும் மீபொருண்மை (Metaphysics) களத்தில் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் மீபுனைவுத்தன்மையை நவீனப்புனைவாக ஆக்கியிருக்கிறார். மதம்கடந்த ஆன்மிகம் ஒன்றை முன்வைக்கும் நாவல் இது.

உசாத்துணை



✅Finalised Page