64 சிவவடிவங்கள்: 34-வீணா தட்சிணாமூர்த்தி
- தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தட்சிணாமூர்த்தி (பெயர் பட்டியல்)
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று வீணா தட்சிணாமூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் முப்பத்தி நான்காவது மூர்த்தம் வீணா தட்சிணாமூர்த்தி. சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக வீணையுடன் அமர்ந்து நாரதர், சுகர் உள்ளிட்ட அனைவருக்கும் இசை குறித்து உபதேசித்த திருக்கோலமே வீணா தட்சிணாமூர்த்தி. சிவாலயங்களில் வெவ்வேறு நிலைகளில் வீணையை ஏந்திய தட்சிணாமூர்த்தி உருவம் காணப்படுகிறது.
தொன்மம்
திருக்கயிலையில், தேவர்களும் முனிவர்களும் அருள்பெறும் வகையில் சிவபெருமான், தட்சிணாமூர்த்தியாகக் காட்சி அளித்தார். அப்போது நாரதர, சுக்ர முனிவர்களின் இசை ஞானத்தை உணரவும், சாம வேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப் பாடவும் தங்களுக்கு அருள்புரியும்படி வேண்டினார்.
உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய தட்சிணாமூர்த்தி, வீணையையும், இசைக்கலையையும் பற்றிக் கூறத் தொடங்கினார். அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும், அதனால் என்னென்ன பலன் ஏற்படும், எந்தெந்த மரத்தில் வீணை செய்யக்கூடாது, அதனால் என்னவகை இசைக் குற்றம் ஏற்படும் என்று விளக்கிக் கூறினார். மேலும் கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் இசை இலக்கணம் தொடர்பான பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்ற நால்வகை வீணைகளையும் செய்ய முடியும் என்றும் சொன்னார்.
”இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கவேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும். முக்கியமான வீணையுடன் பாடும்போது உடல் குற்றம் இல்லாமலும், பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் பாடல் அமைய வேண்டும் என்பது மரபு” - என்றெல்லாம் விளக்கிச் சொன்னார்.
இவ்வாறாக வீணையைப் பற்றியும், இசையைப் பற்றியும், அதன் பாடல்களைப் பற்றியும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்த தட்சிணாமூர்த்தி ஆகிய சிவபெருமான், அந்த வீணையைத் தோளின் மீது வைத்து இசையெழுப்பிப் பாடிக் காட்டினார். இதனைக்கண்ட, கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர்.
இவ்வாறு சிவபெருமான், நாரதர், சுகர் பொருட்டு வீணையுடன் காட்சி தந்ததால் வீணா தட்சிணாமூர்த்தி என்ற பெயர் உண்டானது.
வழிபாடு
திருச்சிக்கு அருகேயுள்ள லால்குடியிலுள்ள சிவன் கோயிலிலும், திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ள துடையூரிலும் வீணா தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பு இவற்றை அருள்பவர் என்பது ஐதீகம். வியாழக்கிழமைகளில் சந்தனக் காப்பு காரிய சித்தியும், வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் மன ஒருமையும், தேனாபிஷேகம் குரல்வளத்தையும் அளிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது..
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 20:11:22 IST