இடையன் இடைச்சி கதை
- இடையன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இடையன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Idaiyan Idaichi Kathai.
ஆடு மேய்க்கும் இடையர் சாதியினர் செய்யும் தொழில் தொடர்பான தகவல்களை ஆணும், பெண்ணுமாக இருவர் நடித்துக் காட்டுவதே இடையன் இடைச்சி கதை. இதனை கோனார் கதை என்றும் அழைக்கின்றனர். கரகாட்டத்தின் துணை ஆட்டமாக இந்த கலை நிகழ்கிறது. இந்தக் கலை மதுரை மாவட்டப் பகுதியில் மட்டும் நிகழ்த்தப்பட்டது. இந்தக் கலை இப்போது வழக்கில் இல்லை.
நடைபெறும் முறை
கரகாட்ட நிகழ்ச்சியின் இடைவேளையில் இந்தக் கலை நிகழ்த்தப்படுகிறது. இடையராகக் கரகாட்டக் கோமாளியும், இடைப் பெண்ணாக கரகாட்டத்தில் பெண் வேடமணிந்த ஆணும் என இருவர் மட்டுமே இதனை நிகழ்த்துகின்றனர். இடையன் இடைச்சி கதை நாடகத்தன்மை கொண்டது. உரையாடல், பாடல் என மாறி மாறி நிகழும் இக்கலையில் சிறிய உடலசைவையும் சேர்த்து ஆடுவர். இதன் உரையாடலில் ஒரு கதையம்சத் தன்மை இருக்கும்.
ஆடு மேய்க்கும் சிறுவனின் செய்கை குறித்தும், அவன் ஆட்டுக்குட்டியைத் தோளின் மேல் போட்டுக் கொண்டு நடப்பது, குட்டியைப் பராமரிப்பது ஆகியவற்றை பற்றி கோமாளி நகைச்சுவையுடன் பேசுவார். இவரது பேச்சுக்கு இடைப்பெண் நகைச்சுவையுடன் பதில் கூறுவாள். அந்த பதிலும் நகைச்சுவை கொண்டதாக இருக்கும்.
இந்த வருணனை உரையாடல் முடிகின்ற நிலையில் இருவருக்கும் இடையில் மோதல் தொடங்கும். இருவரும் மாறி மாறி திட்டிக் கொள்வர். அப்போது இடைத்தொழில் தொடர்பாக பல தகவல்களை சொல்வர். மோதல் மெல்ல மெல்ல குறைந்து இருவரிடத்திலும் காதல் வெளிப்படும். அத்தருணம் நையாண்டி மேளக்காரர்கள் இருவரையும் சமாதானம் செய்து இருவரும் திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்வர். இவையனைத்தும் நகைச்சுவை தன்மையுடனே நிகழும்.
நிகழ்த்துபவர்கள்
இந்தக் கலை கரகாட்டத்தின் துணைக் கலைஞர்களான கோமாளியும், பெண் வேடமிட்ட ஆணும் நிகழ்த்துகின்றனர். இது கரகாட்டத்தின் இடைவேளையில் நிகழ்கிறது.
அலங்காரம்
இடையன் இடைச்சி கதை கரகாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்வதால் இவர்கள் தனியாக எதுவும் அலங்காரம் செய்து கொள்வதில்லை.
நிகழும் ஊர்கள்
- மதுரை மாவட்டப் பகுதி
நடைபெறும் இடம்
- இந்தக் கலை கரகாட்டம் நிகழும் ஊர் பொது இடங்களிலோ, கோவிலுக்கு முன்புள்ள திடலிலோ நடக்கும்
உசாத்துணை
- தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:06 IST