64 சிவவடிவங்கள்: 47-அசுவாருட மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று அசுவாருட மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி ஏழாவது மூர்த்தம் அசுவாருட மூர்த்தி. மாணிக்கவாசகருக்கு அருள் புரியச் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி அவற்றின் தலைவனாக குதைமேல் அமர்ந்து வந்த கோலமே அசுவாருட மூர்த்தி. பரிமேலழகர் என்றும் அறியப்படுகிறது.
அசுவாரூட மூர்த்தி வெண்ணிற ஆடையும்,மணிக்குண்டலமும், முத்துமாலையும், கரங்களில் குதிரைக் கடிவாளமும் வெண்குடையுமாகக் குதிரை மீது அமர்ந்தவராகக் காட்சி தருகிறார்.
தொன்மம்
மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தபோது அரசன் தந்த பொருளைக் கொண்டு குதிரைகள் வாங்கி வரச் சென்றார். பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கு சிவபெருமானே மாணிக்கவாசகருக்கு குருவடிவில் உபதேசம் அளித்தார். மாணிக்கவாசகர் திரும்பிச் செல்ல மனமின்றி அரசன் தந்த பொருளைக் கோவில் திருப்பணிக்காகச் செலவிட்டார். சிவபெருமான் குதிரைகள் ஆவணியில் வந்து சேரும் என்று மாணிக்கவாசகருக்கு வாக்களித்தார். மாணிக்கவாசகர் ஆவணித் திங்களில் குதிரைகள் வரும் என அரசனுக்கு ஓலை அனுப்பினார். ஆனால் சொன்ன நாளில் குதிரைகள் வரவில்லை. .
’மாணிக்கவாசகர் பொய் சொல்வதாகவும், பொன்னை களவாடியதாகவும் எண்ணிய மன்னன் அவரை வெயிலில் மணலில் நிற்க வைத்துத் துன்புறுத்தி சிறையிலடைத்தான்.
சிறையில் மாணிக்கவாசகர் மனம் சோர்ந்துவிடாமல் சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமான், தனது கணங்களை அழைத்து கானகத்திலுள்ள நரிகளைப் பரிகளாக்கி அவற்றை அழைத்துச் செல்லும் பொறுப்பைத் தனது கணங்களுக்கு அளித்தார். அதன் தலைவராகப் பொறுப்பை ஏற்று அவற்றை வழிநடத்தியபடி சிவபெருமான் உயர்ந்த வகைக் குதிரை மீதேறி வந்தார்.
குதிரைகள் வருவதைக் கண்டு மன்னன் மனம் மகிழ்ந்து மாணிக்கவாசகரை விடுவித்தான். இரவில் குதிரைகள் தங்களது சுயரூபம் பெற்று நரிகளாக மாறி கானகத்திற்கு ஓடின. செய்தி அறிந்த மன்னன் மீண்டும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தினான்.
அதே நேரத்தில் சிவனின் திருவிளையாடலால் வைகையில் வெள்ளம் பெருகியது. கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. மன்னனின் கட்டளைப் படி அதனை அடைக்கும் பணியில் வீட்டிற்கு ஒருவர் ஈடுபட்டனர்.
வந்தி என்னும் வயதான கிழவி, கரையை அடைப்பதற்குத் தனக்கு ஆள் இல்லாமல் வருந்தினாள். அப்பொழுது கூலியாள் போல் வேடமுற்று அங்கு வந்த சிவபெருமான், கிழவியின் சார்பில் கரையை அடைப்பதாகக் கூறினார். அதற்குக் கூலியாகப் பிட்டைத் தரும்படிக் கூறினார். கிழவி அளித்த பிட்டை உண்டுவிட்டு வேலை செய்யாமல் படுத்திருந்தார்.
அப்போது அங்குவந்த மன்னன், கூலியாள் வேலை செய்யாமல் சும்மா படுத்திருப்பதைக் கண்டு சினமுற்றார். கூலியாளாக வந்திருந்த சிவபெருமானைப் பிரம்பால் அடிக்க, அந்த அடி உலக உயிர்கள் ஒவ்வொன்றின் மீதும் பட்டது. மன்னன் திகைத்தான். உண்மை உணர்ந்தான். உடன் வானில் அசரீரி எழுந்து மாணிக்கவாசகரை விடுவிக்கும்படிக் கூறியது.
மன்னன் மாணிக்கவாசகரை விடுவித்து தனது செயலுக்காகச் சிவபெருமானிடமும், மாணிக்கவாசகரிடமும் மன்னிப்பு வேண்டினான்.
மாணிக்கவாசகருக்கு அருள் புரியச் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி அதன் தலைவனாக வந்த கோலமே அசுவாருட மூர்த்தி.
வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கருகிலுள்ள ஆவுடையார் கோயிலில் (திருப்பெருந்துறை) உள்ள பஞ்சாட்சர மண்டபத்தின் தூண் ஒன்றில் அசுவரூட மூர்த்தியாகத் தோன்றிய சிவபெருமானின் சிற்பம் உள்ளது.
மதுரை போன்ற தலங்களில் ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் நிகழ்வில் சிவன் பரிமேலழகராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் சொக்கநாதர். இறைவி திருநாமம் மீனாட்சி. இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பக்தி பெருகும்; வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று அளித்து வழிபட வாகன யோகம் உண்டாகும், மனம் பக்குவமடையும் என்பது மக்கள் நம்பிக்கை.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 20:22:06 IST