64 சிவவடிவங்கள்: 46-குருமூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று குருமூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி ஆறாவது மூர்த்தம் குருமூர்த்தி. மாணிக்கவாசகருக்கு அருள் புரியச் சிவபெருமான் குருவாக எழுந்தருளிய தோற்றமே குருமூர்த்தி.
தொன்மம்
திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். அவர் சிறுவயதிலேயே வேதாகமங்களை நன்கு அறிந்தவராக இருந்தார். அவரது சிறப்பையறிந்த மதுரை மன்னன் அரிமர்தனப்பாண்டியன் அவரைத் தனது அமைச்சராக நியமித்தான். ‘தென்னவன் பிரமராயன்’ என்றப் பட்டத்தையும் மாணிக்கவாசகருக்கு அளித்துச் சிறப்பித்தான்,
அமைச்சராகப் பணியாற்றினாலும், இறை தவமே முழுமூச்சாக வாழ்ந்து வந்தார் மாணிக்கவாசகர். ஒரு சமயம், மன்னன் அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாசகரிடம் வேண்டிய அளவு பொருள் கொடுத்து கீழ்கடல் பகுதிகளில் சென்று குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.
அவ்வாறே மாணிக்கவாசகரும் சென்றார். அவர் திருப்பெருந்துறையை அடைந்தவுடன் அவருக்குள் தான் இறைவனுடன் ஐக்கியமானது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. இறைவனை அங்குள்ள அனைத்திடங்களிலும் தேடினார். இறுதியில் ஒரு குருந்த மரத்தின் அடியில் இறைவனான குருமூர்த்தியைக் கண்டார். அவரை வணங்கிப் பாடித் துதித்தார். குருவின் அன்பால், அருளால் பரவசப்பட்டார்.
குரு, மாணிக்கவாசகருக்கு திருஐந்தெழுத்தை உபதேசித்தார். பின்னர் மாணிக்கவாசகரை அங்கேயே இருக்கச் சொல்லி மறைந்தார். குருவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மாணிக்கவாசகரும் அங்கேயே தங்கியிருந்தார். மன்னன் தன்னிடம் அளித்த நிதி அனைத்தையும் ஆலயத் திருப்பணிக்கு அர்ப்பணித்தார்.
மாணிக்கவாசகர் குதிரைகளுடன் வராததால் மன்னன் அவரைத் தேடச் சொல்லி ஆட்களை அனுப்பினான். அப்படித் தேடி வந்த காவலர்களிடம் மாணிக்கவாசகர் குருவின் ஆணைப்படி ஆடித்திருத்திங்களில் குதிரைகள் வருமென மன்னனிடம் கூறும்படிச் சொன்னார்.
மாதங்கள் கடந்து ஆடி வந்தும் மாணிக்கவாசகர் சொன்னபடி குதிரைகள் வராததாலும், அவரையும் காணாததாலும் மன்னன் மீண்டும் அவருக்கு ஓலை அனுப்பினான்.
அதற்குப் பதிலாக மாணிக்கவாசகர், சிவபெருமான் கூற்றுப்படி ’ஆவணியில் குதிரைகள் வரும்’ என பதில் ஓலை அனுப்பினார். பின்னர் சிவபெருமான் மாணிக்கவாசகரின் கனவில் தோன்றி ’நீ முன் செல்க; குதிரைகள் பின்வரும்’ என்றார். அதன்படி மாணிக்கவாசகர் முன் சென்று மன்னனிடம் சேர்ந்தார். சிவபெருமானின் லீலைப்படி நரிகள் பரிகளாகி அங்கு வந்தன. அன்றிரவே அனைத்தும் மறைந்தன.
மாணிக்கவாசகரை மன்னன் தண்டிக்க, அவனுக்கு உண்மையை உணர்த்தச் சிவபெருமான் திருவிளையாடல்களை நிகழ்த்தினார்.
பக்குவம் பெற்ற மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருஐந்தெழுத்தை உபதேசம் செய்தவர் சிவபெருமான். அதனால் அவரது பெயர் குருமூர்த்தி என்றானது.
வழிபாடு
குடந்தை - காரைக்கால் நடுவே அமைந்துள்ள திருப்பெருந்துறையில் குருமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். இவரே குருவடிவம் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டு உபதேசித்தவராக அறியப்படுகிறார். கல்லில் வடித்துள்ள குருந்தமரத்தின் கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பணிவுடன் உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது. இங்கு கோயில் கொண்ட சிவபெருமானின் பெயர் ஆத்மநாதர், இறைவி, யோகாம்பாள். இங்குள்ள மங்கள தீர்த்ததில் நீராடி, இறைவனுக்கு வன்னி இலை கொண்டு அர்ச்சனை செய்ய இறை உபதேசம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இவரை வெண்தாமரை அல்லது மகாவில்வ இலை கொண்டு அர்ச்சனையும், வாழை, மா, கரும்பு, திராட்சை நைவேத்தியமும் படைத்து வியாழக்கிழமைகளில் வழிபட, தொழில் அபிவிருத்தியும், அனைத்துக் கலைகளில் தேர்ச்சியும் திருஐந்தெழுத்தின் மகிமையும் புரியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 20:08:44 IST