ம. நவீன்

From Tamil Wiki
Revision as of 11:08, 26 April 2022 by Tamizhkalai (talk | contribs)
Naveen1.jpg

ம. நவீன் (பிறப்பு: ஜூலை 31, 1982) மலேசிய தமிழ் எழுத்தாளர், இதழாளர். மலேசிய அரசாங்கத் தமிழ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வல்லினம் இனைய இதழின் ஆசிரியராக உள்ளார்.

பிறப்பு, கல்வி

Naveen.jpg

ம. நவீன் மலேசியா கெடா மாநிலத்தில் உள்ள லுனாஸ் என்னும் சிற்றூரில் ஜூலை 31,1982 அன்று மனோகரன் - பேச்சாயி இணையருக்குப் பிறந்தார்.ஆரம்பக் கல்வியை “வெல்லஸ்லி லுனாஸ்” தோட்டத் தமிழ் பள்ளியில் பயின்றார். இடைநிலைக் கல்வியை லுனாஸ் இடைநிலைப் பள்ளியை முடித்தார். 2002-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இணைந்தார். மூன்று ஆண்டு காலம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி படிப்புக்கு பின் அத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின்னர் தமிழ் மொழியில் இளங்கலை பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

Naveen2.jpg

ம. நவீனின் தந்தை, தாய் இருவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள். இவருக்கு ஒரு சகோதரி உண்டு. நவீனின் பதினாறு வயதில் எழுத்தாளர் எம்.ஏ. இளஞ்செல்வனுடன் நட்பு ஏற்பட்டதும் வாசிப்பு பழக்கத்தில் ஈடுபாடு உருவானது. நவீனின் இலக்கியப் பயணத்திற்கு இளஞ்செல்வன் தூண்டுகோலாக அமைந்தார். பின்னர் கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்த போது ம. சண்முகசிவாவின் வழி தீவிர இலக்கியம் அறிமுகமானது.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய செயல்பாடுகள்

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக (2009- 2018) நண்பர்களின் ஒத்துழைப்புடன் ‘கலை இலக்கிய விழா’ எனும் நிகழ்வின் வழி மலேசிய சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்திருக்கிறார். ஓவியகண்காட்சி, நிழல்படக்கண்காட்சி, மேடைநாடகம், புத்தக வெளியீடுகள் எனக் கலையில் பலதளங்களிலும் இவர் செயல்பட்டுவருகிறார். இதுவரை 14 மலேசிய - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.

இலக்கிய ஆக்கங்கள்

இதுவரை இவரது இரு நாவல்கள், மூன்று கவிதை நூல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று பத்தி நூல்கள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு மற்றும் ஒரு ஆசிரியர் அனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு, ஒரு பயண நூல் என 16 நூல்கள் வெளிவந்துள்ளன.மேலும் நவீனின் படைப்புகள் அனைத்தும் அவரது தனி வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

இதழியல் ஈடுபாடுகள்

2002 -ல் தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் “மன்னன்” எனும் ஜனரஞ்சக மாத இதழில்தான் ம.நவீன் இயங்கினார் (2002 - 2003). அது அவருக்கு வாசகர் மத்தியில் பெரும் கவனத்தைக் கொடுத்தாலும் தீவிர இலக்கிய வாசிப்பின் காரணமாக அதிலிருந்து விலகினார். 2006 -ல் காதல் எனும் இலக்கிய மாத இதழுக்கு இணை ஆசிரியராகப் பொறுப்பெடுத்தார். அவ்விதழ் சுமார் 10 மாதங்கள் வெளிவந்தன.

2007 -ல் வல்லினம் நவீனால் அச்சிதழாக தொடங்கப்பட்டு, 2009 முதல் இணைய இதழாக மாறித் தொடர்கிறது. 2014 இல் பறை எனும் ஆய்விதழ் ம.நவீன் மேற்பார்வையில் தொடங்கப்பட்டது. காலாண்டிதழாக வெளிவந்து 6 இதழ்களுடன் நின்றது. 2010 இல் முகவரி எனும் இருவார நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ்நேசன் நிர்வாகத்தின்கீழ் இவ்விதழ் வெளிவந்தது.

வல்லினம் நண்பர்களின் இணைவில் இவர் சடக்கு எனும் அகப்பக்கத்தை 2018-ல் உருவாக்கினார். இந்த அகப்பக்கம் மலேசிய இலக்கியவாதிகளின் புகைப்பட தொகுப்பாகவும் ஆவணப்பட தொகுப்பாகவும் இயங்கி வருகிறது.

பதிப்பாளர்

வல்லினம் பதிப்பகத்தின் மூலம் 39 நூல்களைப் பதிப்பித்துள்ளார். யாழ் பதிப்பகம் என மாணவர்களுக்கான பதிப்பகம் ஒன்றை உருவாக்கி பயிற்சி நூல்களையும் பாடநூல்களையும் பதிப்பித்து வருகிறார்.

இணைய இதழ்

வல்லினம் எனும் முகவரியில் இலக்கிய இதழ் ஒன்றை நடத்திவருகிறார்.

திரைத்துறை

மலேசியத் திரைப்படங்களான ‘ஜெராந்துட் நினைவுகள், மௌனம்’ ஆகியவற்றில் வசன கர்த்தாவாகவும், ‘வெண்ணிற இரவுகள்’ (மலேசியா), ஜகாட் (மலேசியா), கபாலி (தமிழகம்) போன்ற திரைப்படங்களில் திரைக்கதையை ஒட்டிய பங்களிப்பும் வழங்கியுள்ளார்.

இலக்கிய இடம்

ம. நவீனின் பேய்ச்சி நாவலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

”வரலாற்றை ஒரு கையாலும் தனிமனித உளப்பரிணாமங்களை இன்னொரு கையாலும் முடைபவனே மிகச்சிறந்த நாவலாசிரியன். செயற்கையான உத்திகள் ஏதுமில்லாமல், இயல்பாக உருவாகிப் பெருகிச்செல்லும் மொழியால் அந்த பெருஞ்சித்திரத்தை நவீன் உருவாக்குகிறார்.

கதைமாந்தர்கள் முழுமையான நம்பகத்தன்மையுடன் உருவாகி வந்துள்ளன. நிகழ்வுகள் கண்முன் என நடைபெறுகின்றன. நுண்ணியசெய்திகள் இயல்பான ஒழுக்காக அமைந்து இந்த வாழ்வுச்சித்திரத்தை பின்னி விரிக்கின்றன. அடிப்படையில் இது மூன்றுதலைமுறை பெண்களின் கதை. அவர்களினூடாக ஓடும் ‘பேய்ச்சி’ என்னும் உளநிலையின் பரிணாமம். அது ஒரு தொன்மம் அல்ல, தற்காத்து தற்கொண்டார்பேணி ஆன்ற சொற்காத்து நிற்பதற்கான ஆற்றலை உருவாக்கிக்கொள்ள மரபிலிருந்து அவர்கள் கண்டடையும் ஊற்று

ஒரு மக்கள்திரள் புலம்பெயர்ந்து புதிய மண்ணில் நிலைகொள்வதைப் பற்றிய வரலாற்றுச் சித்திரம் என்று புறவயமான கட்டமைப்பைக் கொண்டு பேய்ச்சி நாவலை வகுத்துவிடலாம். ஆனால் அதை ஓர் ஆன்மிகமான பரிணாமம் ஆகவும் இயல்பாக உருவாக்கிவிட முடிகிறது ஆசிரியரால் என்பதனால் தான் இந்நாவலை முதன்மையானது என்கிறேன்.

சமகால புனைவிலக்கியத்தின் மிகப்பெரிய குறைபாடாக நான் காண்பது அதன் அன்றாட உலகியல் சார்ந்த குறுகலைத்தான். அன்றாடம் கண்முன் காணும் புறவுலக நிகழ்வுகளையே பெரும்பாலானவர்கள் எழுதுகிறார்கள். ஆழ்ந்துசென்று அகத்தை காணவோ மேலெழுந்துசென்று ஒட்டுமொத்தமான வரலாற்றுநோக்கை அடையவோ முயல்வதில்லை. ஆழ்ந்துசெல்ல நுண்நோக்கும் விரிந்துசெல்ல ஆராய்ச்சியும் தேவை. அவை காணக்கிடைக்கவில்லை.

மேலோட்டமான ஒரு வாசகர்வட்டமும் அவர்கள் தெருவில் பார்ப்பவற்றையே புனைவிலும் பார்க்கையில் ஒரு வகை கிளர்ச்சியை அடைந்து இவ்வகை எழுத்தை பாராட்டுகிறது. இதுவே இன்றைய இலக்கியத்தின் தேக்க நிலையை உருவாக்கும் அடிப்படைக் காரணி. இலக்கியத்தின் அடிப்படையான இலக்கே பிற எவ்வகையிலும் பார்க்க முடியாத ஒன்றை அது சுட்டிக்காட்டவேண்டும் என்பது தான். பிறிதொன்றிலாத தன்மையே கலையின் முதற்சிறப்பு. ஆழமும் முழுமைநோக்கும் இல்லாதபோது இலக்கியம் தோல்வியடைகிறது

அந்த எல்லையை மீறிச்சென்று நிகழ்ந்த படைப்பு பேய்ச்சி. இன்னமும்கூட இந்நாவல் தமிழகத்தில் முழுமையாக வாசிக்கப்படவில்லை. அதற்கான வாசகர்களைக் கண்டடையும்போது தமிழில் ஒரு சாதனை என்றே கொள்ளப்படும்.”

விருதுகள்

  • 2010 இளம் கவிஞருக்கான விருதினை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியது
  • 2019 ஆம் ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருதினைப் பெற்றார்.

படைப்புகள்

புனைவுகள்
கவிதை நூல்கள்
  • சர்வம்பிரமாஸ்மி (2007)
  • வெறி நாய்களுடன் விளையாடுதல் (2013)
  • மகாராணியின் செக்மெட் (2019)
சிறுகதைத் தொகுப்பு
  • மண்டை ஓடி (2015)
  • போயாக் (2018)
  • உச்சை (2020)
நாவல்கள்
  • பேய்ச்சி (2019)
  • சிகண்டி (2021)
அ-புனைவுகள்
  • கடக்க முடியாத காலம் (பத்தி தொகுப்பு, 2010)
  • விருந்தாளிகள்விட்டுச்செல்லும்வாழ்வு (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு, 2012)
  • வகுப்பறையின்கடைசிநாற்காலி (கட்டுரைத் தொகுப்பு, 2015)
  • உலகின் நாக்கு (இலக்கியக் கட்டுரைகள், 2017)
  • மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல் தொகுப்பு, 2018)
  • நாரின் மணம் (பத்திதொகுப்பு, 2018)
  • மலேசியா நாவல்கள் (தொகுதி 1, 2020)
பயணம்
  • மனசிலயோ (கேரள பயணக் கட்டுரை, 2020)

வெளி இணைப்புகள்