second review completed

வெள்ளாடியனார்

From Tamil Wiki
Revision as of 09:22, 17 September 2024 by Jayashree (talk | contribs)

வெள்ளாடியனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளாடியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவருக்கு வெண்வட்டியார், வேளாவட்டனன் ஆகிய வேறு பெயர்களும் உள்ளன.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளாடியனார் அகநானூற்றில் 29-வது பாடலைப் பாடினார். தலைவியிடம் தலைவன் பாடும் பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பொருள் தேடச் செல்வது மாண்வினை. பொருள் பெற விரும்புபவர் கொள்ள வேண்டிய உள உறுதி சொல்லப்பட்டது.
  • ஒரு வினையைத் தொடங்குபவர் தொடங்கிய அவ்வினையைக் கைவிடுதல் ஆண்மை அன்று.
  • புலி யானையைத் தாக்கும்போது இரை இடப்பக்கமாக விழுந்தால் புலி உயிர் போகும் பசியோடு கிடந்தாலும் உண்ணாது.
  • அவள் கண் மாவடுவைப் பிளந்து இருபுறமாக வைத்தாற்போல் இருக்கும். 'மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்'.
  • அம் என்றால் நீர். அம்மில் மிதப்பது அம்பி. அம்பி என்றால் பரிசில் அல்லது ஓடம். ஆற்றைக் கடக்கும் வழியில் ஆற்றில் நீர் இல்லாத காலத்தில் அம்பி தரையில் கிடப்பதுபோல நீரில்லாத பாலைநிலத்தில் ஓடிய யானை விழுந்து கிடக்குமாம்.

பாடல் நடை

அகநானூறு 29

"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம் படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று

இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
மாவின் நறு வடி போல, காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்

தாழக் கூறிய தகைசால் நல் மொழி
மறந்தனிர் போறிர் எம்" எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி

வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.