பள்ளு

From Tamil Wiki
Revision as of 06:18, 22 April 2022 by Tamizhkalai (talk | contribs)

பள்ளு (உழத்திப்பாட்டு) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது மருதநில(வயலும் வயலைச் சார்ந்த இடம்) இலக்கியம். உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையை(பெண்கள் பள்ளியர், பள்ளத்தியர்) விளக்கிக் கூறும் இலக்கியம் பள்ளு.

பள்ளு இலக்கியங்களிலிருந்து வேளாண் மக்களின் வாழ்க்கை நிலை, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகள், பண்பாட்டுத் தகவல்கள் போன்றவற்றை அறிய முடிகிறது. சிற்றிலக்கிய வகை நூல்களில் பள்ளு இலக்கியங்களே அதிகம் கிடைத்திருக்கின்றன.

பல்வேறு சிற்றிலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாட்டியல் நூல்களில் பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையின் இலக்கணம் காணப்படவில்லை. நவநீதப் பாட்டியலில் நான்கு பாடல்களில் உழத்திப்பாட்டு[1] குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தோற்றமும் வளர்ச்சியும்

சிலப்பதிகாரத்தில் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு போன்ற மருத நில மக்கள் வாழ்க்கையைக் குறித்த பாடல்கள் இருக்கின்றன (நாடுகாண் காதை, 125 :134- 137[2]) ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவது பொன்னேர் பூட்டல் எனப்படும். ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு ஏர் மங்கலம். வயல்களில் நெற் பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை உழவர்கள் அறுத்து பரப்பி, மாடுகளால் மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு. இவ்வாறு காணப்படும் உழவர்கள் பற்றிய செய்திகளும், உழத்திப்பாட்டு முதலிய பாடல்களும், பாட்டும் கூத்துமாக அமைந்துள்ள பள்ளு என்ற சிற்றிலக்கிய வகை தோன்ற வழி வகுத்தது.[3]

பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது.

பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும். பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை. இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர்

வைணவ சமய நூலாகிய முக்கூடற்பள்ளின் பாட்டுடைத் தலைவன் அழகர் (திருமாலின் மற்றொரு பெயர்). பள்ளனின் பெயர் அழகக் குடும்பன். மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப் பள்ளி.

சைவ சமய நூலாகிய திருவாரூர்ப் பள்ளில் பாட்டுடைத் தலைவன் வன்மீக நாதன். பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன். மூத்த பள்ளியின் பெயர் வன்மீகப் பள்ளி. இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி.

எடுத்துக்காட்டு

ஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தை சேர்ந்தவள், மற்றவள் வைணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவன் மற்றும் திருமால் குறித்த விவாதத்தை முக்கூடற் பள்ளு காட்டுகிறது.

சுற்றிக்கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல் புலித்
தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி.

என்று இளைய மனைவியின் இறைவனாகிய சிவனை, உடுத்துவதற்கு ஒரு முழத்துண்டு கூட இல்லாமல் புலித்தோலை உடுத்திருக்கிறான் என்று ஏசுகிறாள். அதற்கு இளையவள் திருமால் மரவுரியும் சேலையும் கட்டிக்கொண்டது பற்றி இவ்வாறு சுட்டிக்காட்டுகிறாள்.

கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டு
கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி

சிவன் நஞ்சுண்ட கதையைத் திரித்துப் பதிலடி கொடுக்கிறாள் மூத்தவள்.

நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி
நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி

இளையவளிடமிருந்து பதில் வருகிறது:

மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் வெறும்
மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணணல்லோடி

வேளாண் வாழ்வாடு இணைந்த இயற்கை நிகழ்வுகள் குறித்த பாடல்களும் பல இடம்பெறுகின்றன:

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

போற்று திரு மாலழகர்க்

கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்

      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்

      துள்ளிக் கொள்வோமே

பள்ளு நூல்கள்

  • அகத்தியர் பள்ளு
  • இரும்புல்லிப் பள்ளு
  • கங்காநாயக்கர் பள்ளு
  • கட்டி மகிபன் பள்ளு
  • கண்ணுடையம்மன் பள்ளு
  • கதிரை மலைப் பள்ளு
  • குருகூர்ப் பள்ளு
  • கொடுமாளூர்ப் பள்ளு
  • கோட்டூர் பள்ளு
  • சண்பகராமன் பள்ளு
  • சிவசயிலப் பள்ளு
  • சிவசைல பள்ளு
  • சீர்காழிப் பள்ளு
  • செண்பகராமன் பள்ளு
  • சேரூர் ஜமீன் பள்ளு
  • ஞானப் பள்ளு
  • தஞ்சைப் பள்ளு
  • தண்டிகைக் கனகராயன் பள்ளு
  • திருச்செந்தில் பள்ளு
  • திருமலை முருகன் பள்ளு
  • திருமலைப் பள்ளு
  • திருவாரூர்ப் பள்ளு
  • திருவிடைமருதூர்ப் பள்ளு
  • தென்காசைப் பள்ளு
  • பள்ளுப் பிரபந்தம்
  • பறாளை விநாயகர் பள்ளு
  • புதுவைப் பள்ளு
  • பொய்கைப் பள்ளு
  • மாந்தைப் பள்ளு
  • முக்கூடற் பள்ளு
  • முருகன் பள்ளு
  • வையாபுரிப் பள்ளு

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள

குறிப்புகள்

  1. புரவலற் கூறி அவன் வாழியவென்று

    அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள்

    எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே

    - உழத்திப்பாட்டு முதலில் அரசனை வாழ்த்தி, அதன் பின் வயலில் செய்யும் தொழில் யாவும் பத்துப் பாடல்களாக பாடப்படுவது.
  2. ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்;

    அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த

    பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்;

  3. பள்ளு இலக்கியம்

Template:!Standardised