குழந்தை எழுத்தாளர் சங்கம்
குழந்தை எழுத்தாளர் சங்கம்( ஏப்ரல் 15, 1950- 1999) சிறார்களுக்கான இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. சிறார் இலக்கிய நூல் வெளியீடுகள், கண்காட்சிகள், நாடகங்கள், மாநாடுகள் உள்ளிட்ட பல செயல்பாடுகளை முன்னெடுத்தது. , சக்தி வை. கோவிந்தன் இதன் முதல் தலைவர். அழ.வள்ளியப்பா இதன் தலைவராகவும், ஆலோசகராகவும் ஏறத்தாழ 33 வருடங்கள் செயல்பட்டார்.
தோற்றம்
அழ. வள்ளியப்பா குழந்தைகளுக்காக எழுதும் சிறார் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து ஒரு சங்கம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதனை தம் நண்பரும் பதிப்பாளருமான செ.மெ. பழனியப்பச் செட்டியாரிடம் தெரிவிக்க, அவரும் அதனை ஆதரித்தார். அதன்படி ஏப்ரல் 15, 1950-ல், குழந்தை பதிப்பக அலுவலகமாகச் செயல்பட்ட செ.மெ. பழனியப்ப செட்டியாரின் இல்லத்தில் குழந்தை எழுத்தாளர்கள் பலரது முன்னிலையில் குழந்தை எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது.
சக்தி வை. கோவிந்தன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்வாணன் துணைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். செயலாளர்களாக அழ. வள்ளியப்பாவும், வானதி திருநாவுக்கரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1955 முதல் அழ. வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகச் செயல்பட்டார். பிற்காலத்தில் நெ.சி. தெய்வசிகாமணி, ஆர்வி, கல்வி கோபாலகிருஷ்ணன், சௌந்தர், வெ. நல்லதம்பி ஆகியோர் தலைவராகப் பணிபுரிந்தனர்.
சங்கப் பணிகள்
புத்தகக் காட்சி
குழந்தை எழுத்தாளர் சங்கம், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டது. 1951-ல். சிறார்களுக்கான முதல் புத்தகக்காட்சியை சென்னை முத்தியாலுப்பேட்டை பள்ளியில் நடத்தியது. தொடர்ந்து பல பள்ளிகளில் ஆண்டுதோறும் குழந்தை எழுத்தாளர் சங்கம் புத்தகக் காட்சியை நடத்தியது
புகைப்படக் காட்சி
குழந்தைகளுக்காக எழுதி வரும் எழுத்தாளர்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் குழந்தை எழுத்தாளர் சங்கம் புகைப்படக்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் குழந்தை எழுத்தாளர்களின் படங்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், நூல் விவரங்கள் ஆகியன இடம்பெற்றன. புத்தகக் காட்சி நடத்தப்படும் இடங்களில் புகைப்படக் காட்சியும் நடத்தப்பட்டது.
இம்முயற்சியே பிற்காலத்தில் ‘குழந்தை எழுத்தாளர் யார், எவர்?’ என்ற நூல் உருவாகக் காரணமானது.
நாடக விழா
குழந்தை எழுத்தாளர் சங்கம், சிறார்களுக்கான நாடக விழாக்களையும் போட்டிகளையும் நடத்தியது. முதல் நாடக விழா சென்னையில் 1955-ல் நடைபெற்றது. தொடர்ந்து சிறார்களுக்கான நாடகங்களும் போட்டிகளும் ஆண்டுதோறும் நடைபெற்றன. டி.கே. ஷண்முகம் போன்றோரும் இந்த விழாக்களில் பங்குபெற்று சிறார்களுக்கான நாடகங்களை அரங்கேற்றினர்.
நூல் வெளியீடு
குழந்தை எழுத்தாளர் சங்கம், 1957 ஆம் ஆண்டு முதல், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ஐ, குழந்தை இலக்கியத் திருநாளாகவும், குழந்தை நூல்கள் வெளியீட்டு விழாவாகவும் கொண்டாடத் தொடங்கியது.
ஆண்டுதோறும் பதிப்பகங்கள் பலவற்றால் சிறார் நூல்கள் பல அன்றைய தினத்தில் வெளியிடப்பட்டன. 1979-ம் ஆண்டில் ஒரே நாளில் சிறார்களுக்கான 77 நூல்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. குழந்தை எழுத்தாளர் சங்கமும் பல நூல்களை வெளியிட்டது. அவற்றில் பல மாநில மற்றும் மத்திய அரசுகளின் பரிசுகளை வென்றன.
குழந்தை இலக்கியப் பண்ணை
குழந்தை எழுத்தாளர் சங்கம், கல்வி கோபாலகிருஷ்ணன் தலைமையில் ’குழந்தை இலக்கியப் பண்ணை’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தது. சிறார் எழுத்தாளர்கள் பலரது நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாகச் சேகரிக்கப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவை பின்னர் நூலாக்கம் பெற்றன. அவற்றில் சில படைப்புகள் பரிசுகளை வென்றன.
கருத்தரங்குகள்
குழந்தை எழுத்தாளர் சங்கம், சிறார் இலக்கியம் தொடர்பான கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தியது. பிறநாட்டுச் சிறார் இலக்கிய எழுத்தாளர்களில் சிலர் இக்கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாடுகள்
குழந்தை எழுத்தாளர் சங்கம், குழந்தை இலக்கிய மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்தியது. முதல் மாநாடு 1959-ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாம் மாநாடு 1961-லும், மூன்றாம் மாநாடு 1963-லும், நான்காவது மாநாடு 1972-லும், ஐந்தாவது குழந்தை இலக்கிய மாநாடு 1977-லும், ஆறு, ஏழு எட்டாவது மாநாடுகள் முறையே 1979, 1981, 1987-லும் நடைபெற்றன.
இம்மாநாடுகளில் சிறார் எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் கேடயம் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டனர். நூல்கள் பல வெளியிடப்பட்டன. சிறார் எழுத்தாளர்கள் பலர் மேடையில் பரிசு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு போட்டிகளில் வென்றவர்கள் தங்க, வெள்ளிப் பதக்கங்கள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டனர். சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
வெள்ளி விழா
குழந்தை எழுத்தாளர் சங்கம் தனது வெள்ளிவிழாவை ஏப்ரல் 18, 1976-ல் கொண்டாடியது.
நிறைவு
அழ. வள்ளியப்பா 1989-ல் காலமானார். அவரது மறைவிற்குப் பின் 1999 வரை குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்பட்டது. அதன் பின் சங்கப் பணிகள் தொடராமல் தேக்கம் கண்டது. பின் செயல்படவில்லை.
உசாத்துணை
- குழந்தை எழுத்தாளர் சங்கம் (வரலாறு), முனைவர் தேவி. நாச்சியப்பன், பழனியப்பா பிரஹர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2018.
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.