under review

சி.பா.ஆதித்தனார்

From Tamil Wiki
Revision as of 11:33, 16 April 2022 by Manobharathi (talk | contribs) (amending the date to the standard format and created hyperlinks for references)
சி.பா.ஆதித்தனார்

சி.பா.ஆதித்தனார் தமிழ் இதழாளர். தினத்தந்தி நாளிதழ் நிறுவனர். தொழிலதிபர், அரசியல்வாதி.நாளிதழுக்குரிய மொழிநடையை வடிவமைத்து வரையறைசெய்தவர்.

பிறப்பு, கல்வி

சி.பா.ஆதித்தனார் சிலை

சி.பா.ஆதித்தனாரின் இயற்பெயர் சி.பாலசுப்ரமணியன். திருநெல்வேலி மாவட்ட்த்தில் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக அமைந்துள்ள காயாமொழி என்னும் ஊரில் செப்டெம்பர் 27 ,1905-ல் சிவந்தி ஆதித்தனுக்கும் கனகம் அம்மையாருக்கும் பிறந்தார். ஆதித்தனாருக்கு நான்கு உடன்பிறந்தோர். தையல்பாக ஆதித்தனார் மூத்தவர். தனஞ்சய ஆதித்தனார், வாமசுந்தர தேவி, கமலம் அம்மையார் ஆகியோர் இளையவர்கள்.

ஆதித்தன் என்பது காயாமொழி ஊரிலுள்ள ஒரு குடும்பத்திற்கு பாண்டியர் காலம் முதல் அளிக்கப்பட்டுள்ள குடும்பப்பட்டம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் முதலில் வடம்தொட்டு இழுக்கும் உரிமை இக்குடும்பத்திற்கு உரியது. அந்நிலப்பகுதியில் அரசஅதிகாரம் உடையவர்களாக அவர்கள் விளங்கினர்.

ஆதித்தனார் ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம்பெற்றார். அங்கேயே இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின் எஃப்.எல் என்னும் சட்டப்படிப்புக்காக சென்னை சென்றார். சென்னை சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையிலேயே பாரிஸ்டர் படிப்புக்காக 1928-ஆம் ஆண்டு லண்டன் சென்றார். 1933-ல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

ஆதித்தனார் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தவரும் ராமநாதபுரம் கோட்டையூர் அருகே உள்ள மணச்சை என்னும் ஊரைச்சேர்ந்தவருமான ஓ.ராமசாமி நாடாரின் மமள் கோவிந்தம்மாளை செப்டெம்பர் 1, 1933-ல் மணந்துகொண்டார் . அவர்களுக்கு பா. ராமச்சந்திர ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் என இரண்டு மகன்களும் சரஸ்வதி அம்மாள் என ஒரு மகளும் பிறந்தனர்.

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். பின்னர் சிங்கப்பூர் சென்று அங்கே வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். சிங்கப்பூர் வழக்கறிஞர்களின் நிறுவனம் ஒன்றில் நாலில் ஒரு பங்கு என்னும் அளவில் பங்குதாரர் ஆனார்.சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில் நின்று வென்றார். அவ்வாறு வென்ற முதல் வெள்ளையரல்லாதவர் ஆதித்தனார்தான்

1942-ல் இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஆதித்தனார் இந்தியா திரும்ப முயன்றார். விமானத்தில் இந்தியாவுக்கு வந்தபோது போர்ச்சூழலால் விமானம் இந்தோனேசியாவுக்கு அனுப்பபப்ட்டது. சிறிதுகாலம் ஆதித்தனார் இந்தோனேசியாவில் தங்கினார். அங்கே ஆதித்தனாருக்கு சட்டையப்பர் என்னும் முடிதிருத்தகத் தொழிலாளர்தான் அடைக்கலம் கொடுத்தார். தானிருந்த ஊரில் இருந்து 300 மைல் தொலைவில் இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்கள் நிற்பதாகத் தெரிந்து ஆதித்தனார் சூரபாயா என்னும் துறைமுகத்திற்க்சுச் சென்றார் இரண்டுநாட்கள் பட்டினி கிடந்து கப்பலுக்காக காத்திருந்தார். அவர் சென்ற கப்பல் ஆஸ்திரேலியாவை சுற்றிக்கொண்டு 29 நாட்கள் பயணம் செய்து ஏப்ரல் 4, 1942 அன்று இந்தியாவந்து சேர்ந்தது. அவர் வந்து சேர்ந்த இரண்டாம் நாள், ஏப்ரல் 6 அன்று அவர் தந்தை சிவந்தி ஆதித்தனார் மறைந்தார்.

இதழியல்

இளமையிலேயே எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆதித்தனாருக்கு ஆர்வமிருந்தது. கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி?, தீப்பெட்டித் தயாரிப்பது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

லண்டனில் ஆதித்தனார் இந்திய மாணவர் சங்கத்தில் தங்கினார். இந்தியாவிலுள்ள இதழ்களுக்கு லண்டன் அரசியல் பற்றி லண்டன் கடிதம் என்னும் பகுதியை எழுதினார். தமிழில் சுதேசமித்திரன் இதழில் தொடர்ந்து அவர் எழுதிய லண்டன் கடிதம் பகுதிகள் வெளிவந்தன. சிங்கப்பூரில் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு தமிழ்நாளிதழ் தொடங்க முயன்றார். அவருடைய மாமனார் அதற்கு ஒப்பவில்லை. ஆனால் சிங்கப்பூர் தமிழ்முரசு தொடங்க உதவிசெய்தார்.

மதுரை முரசு

சி.பா.ஆதித்தனார் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதுமே மதுரையில் இருந்து 1942-ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். இது காலணா விலையில் புதன், சனி கிழமைகளில் வாரமிருமுறை வெளிவந்தது. 27-21 செமி அளவில் நான்கு பக்க இதழாக வெளிவந்தது. மதுரை முரசின் ஆசிரியராக இருந்தவர் ரத்தினம் நாடார். சிப்பாய் என்ற பெயரில் சி.பா.ஆதித்தனார் அதில் எழுதினார். மதுரை முரசு 1942-லேயே அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. அதன் இதழ்கள் எவையும் கிடைப்பதில்லை.

தமிழன்

மதுரை முரசு தடைசெய்யப்பட்டதும் ஆதித்தனார் ஆகஸ்ட் 23 , 1942-ல் தமிழன் என்னும் வார இதழை மதுரையில் இருந்து வெளியிட்டார்.தமிழர் என்னும் மொழிவழி அடையாளத்தை முன்வைக்கும் இதழாக அது இருந்தது. அதன் தொடக்கவுரையில் சி.பா.ஆதித்தனார் தமிழ் இனம் ஒன்றுபடவேண்டும், தமிழ்நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழியவேண்டும், துண்டுபட்டு கிடக்கும் தமிழ்நாடு ஒன்றாகவேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்வைத்தார். இதழுக்கு கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, விபுலானந்த அடிகள், சா.கணேசன், ராஜா அண்ணாமலைச்ச் எட்டியார், பம்மல் சம்பந்த முதலியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்றவர்களின் வாழ்த்துக்கள் வந்தன. தமிழன் இதழ் அதில் எழுதுபவர்களுக்கு அன்பளிப்புகள் அனுப்பினார். தமிழன் இதழ் ஜூன் 13, 1942-ல் வார இதழாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

(முந்தைய தமிழன் இதழ்கள் பார்க்க தமிழன் இதழ்கள் )

சி.பா. ஆதித்தனார் ஜூலை 1942-ல் மதுரைமுரசு என்னும் வாரம் இருமுறை இதழை மதுரையில் தொடங்கினார். ஆகஸ்ட் 23 ,1942-ல் தமிழன் என்னும் வார இதழை மதுரையிலிருந்து வெளியிட்டார்.

தினத்தந்தி

சி.பா.ஆதித்தனார் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியதுமே மதுரைமுரசு, தமிழன் ஆகிய இதழ்களை தொடங்கினார். பின்னர் அந்த அமைப்புகளை இணைத்து நவம்பர் 1, 1942-ல் தினத்தந்தி நாளிதழை ஆரம்பித்தார். The Daily Telegraph என்னும் ஆங்கில நாளிதழின் பெயரின் மொழியாக்கம் அது. மதுரையில் இருந்து முதலில் வெளிவந்த இவ்விதழ் பின்னர் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. (பார்க்க தினத்தந்தி )

அரசியல்

சி.பா.ஆதித்தனாரின் அரசியல் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு நிலைபாடுகளை எடுப்பதாக இருந்தது. 1930-களில் இருந்து ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் ஆதரவாளராக குடியரசு இதழ்களில் எழுதினார். பின்னர் 1942-ல் நாம் தமிழர் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1944-ல் அந்த அமைப்பை கலைத்துவிட்டு காங்கிரஸ் ஆதரவாளராகச் செயல்பட்டார். 1953-ல் நேதாஜியின் மகளை அழைத்துவந்து ஓர் அரசியல் முயற்சியைச் செய்தார். 1957=ல் மீண்டும் நாம் தமிழர் அமைப்பை தொடங்கி தீவிரமான பிரிவினையரசியலை முன்னெடுத்தார். சிறைத்தண்டனை பெற்றபின் நாம் தமிழர் அமைபபி கலைத்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சருமானார். எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மிகத்தீவிரமான எதிரியாக இருந்த அவர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது அவரை ஆதரித்து அக்கட்சியின் ஆதரவாளராக ஆனார்.

சுயமரியாதை இயக்க அரசியல்

1930-ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் சிங்கப்பூர் சென்றபோது ஆதித்தனாரின் மாமனார் ஓ.ராமசாமி நாடாரின் இல்லத்தில் தங்கினார். ஈ.வெ.ராமசாமி பெரியாருடனான உரையாடல் வழியாக திராவிட இயக்க அரசியலில் ஆதித்தனார் ஆர்வம் கொண்டார். சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். குடியரசு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார்.

இந்திய தேசிய அரசியல்

1947-ல் ஆதித்தனார் சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக அனுப்பப்பட்டார். 1947 முதல் 1953-ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராக பணியாற்றினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஓரிரு ஆண்டுகள் இந்திய தேசிய காங்கிரஸை ஆதரித்த ஆதித்தனார் 1953-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மனைவி மற்றும் மகள் அனிதா போஸ் ஆகியோரைச் சந்தித்தார். அனிதா போஸை தமிழநாட்டுக்கு கூட்டிவந்தார். ஆனால் அந்த வருகைக்கு போதிய அரசியல் வரவேற்பு இருக்கவில்லை.

நாம் தமிழர் இயக்கம்

ஆதித்தனார் இந்தியா திரும்பியதும் 1942-ல் நாம் தமிழர் என்னும் இயக்கத்தை தொடங்கினார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்த தெலுங்கர்களின் ஆதிக்கத்திற்கும், திராவிடர் என்னும் கருத்துக்கும் எதிராக தமிழர் என்னும் அடையாளத்தை முன்வைத்த இயக்கம் அது. இருந்த அவ்வியக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது நிறுத்திவைக்கப்பட்டது. நடுவே நேதாஜியை முன்வைக்கும் ஓர் அரசியல் முயற்சிக்கு பின் மீண்டும் தனிப்பட்ட அரசியல் முயற்சிகளை நடத்தினார். 1954-ல் ஆதித்தனார் பனைவரியை எதிர்த்து போராட்டத்தை நடத்தினார். 1955-ல் உழவர்போராட்டத்தை நடத்தி கைதுசெய்யப்பட்டார். 1957-ஆம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதியில் நின்று சட்டச்சபைக்கு தேர்வுசெய்யப்பட்டார். 1957 முதல் 1962 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தை 1957-ல் தொடங்கினார். அவ்வியக்கத்தின் முதல் கூட்டத்தை 1958-ல் பாரதிதாசன் தலைமையில் கூட்டினார். பல இடங்களில் மாநாடுகளை நடத்தினார். 1957-ல் மருத்துவமனை தொழிலாளர் சங்கத்தின் தலைவரானார்.

1960-ல் இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு தவிர எஞ்சிய பகுதிகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். . இந்தி எதிர்ப்பு போரில் குடியரசு தலைவர் ராஜேந்திரப் பிரசாதுக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார்.1964-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மீண்டும் கைதானார்.1965-ல் ஆதித்தனார் தேசப்பிரிவினையை கோருகிறார் என்று தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கோவையில் சிறையில் இருந்த அவர் 1966-ல் விடுதலையானார். வெளிவந்ததும் நாம் தமிழர் இயக்கத்தை கலைத்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.

திராவிட முன்னேற்றக்கழகம்

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த ஆதித்தனார் 1967-ல் நடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிர்ரு வென்றார். சி.என்.அண்ணாத்துரை முதல்வராக ஆனபோது ஆதித்தனார் சட்டப்பேரவைத் தலைவர் ஆனார். சட்டப்பேரவை பொறுப்பில் குறுகிய காலமே பணியாற்றினார்

1969-ல் சி.என்.அண்ணாத்துரை மறைந்து மு.கருணாநிதி முதல்வரானதும் அவருடைய அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக பிப்ரவரி 13, 1969-ல் பதவி ஏற்றார். 1971-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1973-ல் வேளாண்மைத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1972-ல் எம்ஜி ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) உருவாக்கியபோது ஆதித்தனார் அதிமுகவை ஆதரித்தார். 1977-ல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1980-ல் ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார் .

மறைவு

சி.பா.ஆதித்தனார் மே 21, 1981-ல் தன் 75-ஆவது வயதில் மறைந்தார்.

நினைவுகள்,வரலாறுகள்

நினைவுசின்னங்கள்
  • சி..பா.ஆதித்தனார் பெயரில் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி உள்ளது
  • கபடிப்போட்டிக்கு தமிழக அளவில் சி.பா.ஆதித்தனார் நினைவுக்கோப்பை வழங்கப்படுகிறது
  • சென்னையில் ஆதித்தனாருக்கு சிலை உள்ளது. அச்சாலை ஆதித்தனார் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது
  • சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
வாழ்க்கை வரலாறுகள்

நூல்கள்

  • நாள்தாள் எழுத்தாளர் கையேடு (1986)
  • தமிழப்பேரரசு (1958)
  • சுதந்திரத் தமிழ்நாடு (1964)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.