அலெக்ஸ் ஹேலி
அலெக்ஸ் ஹேலி (Alexander Murray Palmer Haley) (ஆகஸ்ட் 11, 1921 - பிப்ரவரி 10, 1992 ) கறுப்பின வம்சாவளியைச்சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1976-ம் ஆண்டு வெளியான ‘வேர்கள்’ (Roots: The Saga of an American Family) எனும் உலகப்புகழ்பெற்ற புதினத்தின் மூலம் அறியப்படுபவர்.
பிறப்பு, கல்வி
அலெக்ஸாண்டர் முர்ரே பால்மர் ஹேலி ஆகஸ்ட் 11, 1921 அன்று அமெரிக்காவின் இதாக்கா நகரில் சைமன் ஹேலி- பெர்தா ஜார்ஜ் ஹேலி இணையருக்குப் பிறந்தார்.. உடன் பிறந்தவர்கள் இரு தம்பிகள். தந்தை உலகப் போர் வீரராகவும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். ஹேலி பிறந்தபோது தந்தை கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்ததால் அலெக்ஸ் ஹேலி தன் தாய், தாய்வழி தாத்தா, பாட்டியுடன் டென்னஸி மாகாணத்தில் உள்ள ஹென்னிங் நகரில் வளர்ந்தார்.
பள்ளிக்கல்விக்குப்பின் அலெக்ஸ் மிசிசிபி மாகாணத்தில் உள்ள கருப்பின மக்களுக்கான அல்கார்ன் பல்கலைக்கழகத்தில் (Alcorn State University) சேர்ந்தார். ஓராண்டிலேயே அங்கிருந்து வெளியேறி வடக்கு கரோலினாவின் எலிசபெத் நகரில் உள்ள கருப்பின மக்களுக்கான எலிசபெத் பல்கலைக்கழகத்தில் (Elizabeth City State University) சேர்ந்தார். அடுத்த ஆண்டே அங்கிருந்தும் வெளியேறினார். அலெக்ஸின் தந்தை அவரை இராணுவத்தில் சேர சம்மதிக்க வைத்தார். மே 24, 1939 அன்று அலெக்ஸ் ஹேலி அமெரிக்க கடலோர காவல்படையில் சேர்ந்தார்.
இராணுவ வாழ்க்கை
அலெக்ஸ் ஹேலி அமெர்க்க இராணுவத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றினார். கப்பல் படையில் உதவியாளராக சேர்ந்து, கருப்பின மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட மூன்றாம் தர சிறு அலுவலர் பதவிக்கு (Petty officer third class) உயர்ந்தார். அவர் பணியில் சேர்ந்தபோது அதிகப் படிப்பறிவில்லாத மற்ற மாலுமிகள் சிறு தொகை அளித்து, தங்கள் தோழிகளுக்கு காதல் கடிதங்கள் எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டனர். பசிபிக் கடல்பகுதியில் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஹேலி கதைகள் எழுதும் கலையை தானே கற்றுக்கொண்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அலெக்ஸ் ஹேலி கடற்படையின் பத்திரிகைத் துறைக்கு மாற்றல் வேண்டிப் பெற்றார். 1949-ல் பத்திரிகையாளர் பதவிக்கு நிகரான முதல் தர சிறுஅதிகாரியாக ஆனார் (Petty officer-First class). பின்னாளில் முதன்மை சிறு அதிகாரியாக (Chief Petty office) பதவி உயர்வு பெற்று 1959-ல் கடலோர காவல்படையில் இருந்து ஓய்வு பெறும் வரை அப்பதவியை வகித்தார். கடலோரக் காவல்படையிலிருந்து தலைமைப் பத்திரிகையாளரான முதல் நபர் அலெக்ஸ் ஹேலி.
இதழியல்
ரீடர்ஸ் டைஜஸ்ட்
கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற பின் அலெக்ஸ் ஹேலி ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader's Digest) இதழின் மூத்த ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தெற்கத்திய சட்டப் பள்ளியில் முதல் கறுப்பின மாணவராக வெற்றி பெற்ற தனது சகோதரர் ஜார்ஜின் போராட்டங்களைப் பற்றி அலெக்ஸ் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதினார்.
ப்ளேபாய் இதழ்
அலெக்ஸ் ஹேலி பிளேபாய் (Playboy) இதழுக்காக நேர்காணல்கள் நடத்தினார். முதல் நேர்காணலில் ஜாஸ் இசைக்கலைஞர் மைல்ஸ் டேவிஸுடன் ( Miles Davis) இனவெறி குறித்த தனது கருத்துக்களை விவாதித்தார். வேறொரு இதழுக்காக தொடங்கப்பட்டு, அது நிகழாமல் பிளேபாய் செப்டம்பர் 1962 இதழில் வெளியான இந்த நேர்காணல் பிளேபாய் இதழின் பேசுபொருள்களுக்கான பாணியாக அமைந்தது.
கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் அளித்த மிக நீண்ட நேர்காணல் ஹேலியால் பிளேபாய் இதழுக்காக நடத்தப்பட்டது.
1960-களில், அமெரிக்க நாஜிக் கட்சியின் தலைவரான ஜார்ஜ் லிங்கன் ராக்வெல்லுடன் ஒரு நேர்காணலின் போது, 'தான் யூதர் அல்ல' என்று அலெக்ஸ் உறுதியளித்த பிறகே ராக்வெல் அந்தப் பேட்டிக்கு ஒப்புக்கொண்டார். நேர்காணலின் போது, ராக்வெல் மேசையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார். பின்னர் இந்த நேர்காணல், ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் ஹேலியாகவும் மற்றும் மார்லன் பிராண்டோ ராக்வெல்லாகவும் நடித்த 'ரூட்ஸ்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்ஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் இடம்பெற்றது.
பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியுடனான நேர்காணலில் முகம்மது அலி தனது பெயரை கேசியஸ் கிளே என்பதிலிருந்து மாற்றிக் கொண்டதைக் குறித்து பேசினார். ஜாக் ரூபியின் வழக்கறிஞர் மெல்வின் பெல்லி[1], பொழுதுபோக்கு கலைஞர் சம்மி டேவிஸ் ஜூனியர் (Sammy Davis, Jr.), கால்பந்து வீரர் ஜிம் பிரவுன் (Jim Brown), தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜானி கார்சன் (Johnny Carson) மற்றும் இசையமைப்பாளர் குயின்சி ஜோன்ஸ் (Quincy Jones) ஆகியோரையும் நேர்காணல் செய்தார் அலெக்ஸ்.
இலக்கிய வாழ்க்கை
மால்கம் எல்ஸின் சுயசரிதை
அலெக்ஸ் ஹேலியின் முதல் படைப்பு 'மால்கம் எக்ஸின் சுயசரிதை'(The Autobiography of Malcolm X) 1965-ம் ஆண்டு வெளியானது. சிறு குற்றவாளியாக இருந்து நேஷன் ஆஃப் இஸ்லாம் (Nation of Islam) என்னும் அமைப்பின் தேசியத் தலைவராக வளர்ந்து, இறுதியாக ஒரு சன்னி முஸ்லிமாக மாறிய கருப்பினத் தலைவர் மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு. கருப்பின பெருமை, கருப்பு தேசியவாதம் மற்றும் பான்-ஆப்பிரிக்கனிசம் (Pan-Africanism) பற்றிய மால்கம் எக்ஸின் பார்வையை முன்வைக்கிறது. நியூயார்க்கில் உள்ள ஆடுபோன் பால்ரூம்(Audubon ballroom) அரங்கில் அவர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டது உட்பட மால்கம் எக்ஸின் இறுதி நாட்களைப்பற்றிய சுருக்கமான முடிவுரையை(epilogue) ஹேலி எழுதி இணைத்தார்.
1963 முதல் பிப்ரவரி 1965-ல் மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு இடையில் மால்கம் எக்ஸுடனான ஐம்பதுக்கும் மேற்பட்ட விரிவான நேர்காணல்களின் அடிப்படையில் அலெக்ஸ் ஹேலி இந்த நூலை எழுதினார். 1960-ம் ஆண்டில் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்காக நேஷன் ஆஃப் இஸ்லாம் பற்றிய ஒரு கட்டுரைக்காக அலெக்ஸும் மால்கமும் முதன்முதலில் சந்தித்தனர். பின்னர் பிளேபாய் நேர்காணலுக்காக மீண்டும் சந்தித்தனர்.
துவக்கத்தில், நேர்காணல்கள் சற்று கடினமாக இருந்தன. மால்கம் எக்ஸ் தனது சொந்த வாழ்க்கைக்கு பதிலாக நேஷன் ஆஃப் இஸ்லாமின் (Nation of Islam) தலைவரான எலிஜா முஹம்மதுவைப் ( Elijah Muhammad) பற்றி அடிக்கடி பேசினார். பல சந்திப்புகளுக்குப் பிறகு, மால்கம் எக்ஸை தனது தாயைப் பற்றி பேச ஹேலி கேட்டுக்கொண்டார். இது இறுதியாக மால்கம் எக்ஸ் தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது.
’மால்கம் எக்ஸின் சுயசரிதை’ வெளியிடப்பட்டதிலிருந்து இன்றளவும் சிறந்த விற்பனையான புத்தகமாக உள்ளது. 1977 வாக்கில், ஆறு மில்லியன் பிரதிகள் விற்றிருந்தன. 1998-ம் ஆண்டில், டைம் இதழ் இந்நூலை 20-ம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பத்து அபுனைவு நூல்களில் ஒன்றாக பட்டியலிட்டது.
மால்கம் எக்ஸின் சுயசரிதைக்காக 1966-ல், அனிஸ்ஃபீல்ட்-வுல்ஃப் (Anisfield-Wolf Book Award) புத்தக விருதைப் பெற்றார் அலெக்ஸ் ஹேலி.
திரைக்கதை
1973-ம் ஆண்டில், அலெக்ஸ் 'சூப்பர் ஃப்ளை டி.என்.டி.’ (Super Fly T.N.T.) என்ற ஒரே படத்திற்கு மட்டும் திரைக்கதை எழுதினார். இப்படத்தை ரான் ஓ'நீல் (Ron O'Neal) இயக்கினார்.
வேர்கள் (Roots)
1976-ம் ஆண்டு, அலெக்ஸ் ஹேலி 'ரூட்ஸ்: தி சாகா ஆஃப் அன் அமெரிக்கன் ஃபேமிலி' (Roots: The Saga of an American Family) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் ஆப்பிரிக்க இன மக்களை அடிமைப்படுத்தும் காலகட்டத்தில் சிக்கிக்கொண்ட அவரது குடும்பத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. அலெக்ஸ் ஹேலி தனது வேர்களைத் தேடிச் சென்று கண்டடைந்ததாகக் குறிப்பிடுகிறார். ’ரூட்ஸ்’ 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 1977-ல் சிறப்பு புலிட்சர் பரிசை வென்றது
கதைச்சுருக்கம்
1767-ம் ஆண்டு கடத்தப்பட்டு மேரிலாந்தில் (Maryland) அடிமையாக விற்கப்பட்ட காம்பியாவைச் (Gambia) சேர்ந்த குந்தா கிண்டே (Kunta Kinte) என்ற ஆப்பிரிக்கருடன் கதை தொடங்குகிறது. குந்தா கிண்டே கொடுமையான கப்பல் பயணத்துக்குப்பின் வட அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டு அடிமையாக விற்கப்படுகிறார். பல ஆண்டுகள் கழித்து மற்றொரு அடிமையை மணம் செய்து கொள்கிறார். அவரது மகள் 16 வயதில் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறாள். அவளது குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று தலைமுறைகள் வளர்கின்றன. அலெக்ஸ் ஹேலியின் தாய் பெர்த்தா குந்தா கிண்டேயின் ஆறாம் தலைமுறையச் சேர்ந்தவர். ஒவ்வொரு தலைமுறைக்கும் அவர்களது மூதாதையரின் மொழியில் சில சொற்கள் கற்பிக்கப்படுகின்றன.
அலெக்ஸ் ஹேலி தன் மூதாதை குந்தா கிண்டே வாழ்ந்த காம்பியா(Gambia) நாட்டுக்குச் சென்று கதைசொல்லிகள் மூலம் தன் மூதாதையின் கதையை அறிகிறார்.
தான் குந்தா கிண்டேவின் வம்சாவளி என்றும், இந்த புத்தகத்தை ஆராய்ச்சி செய்யவும், பயணம் செய்யவும், எழுதவும் 12 ஆண்டுகள் செலவிட்டதாகவும் அலெக்ஸ் கூறினார். குந்தா கிண்டே வாழ்ந்த ஜுஃபூர் கிராமத்திற்குச் சென்ற அவர், கிண்டே எவ்வாறு கைப்பற்றப்பட்டார் என்பதை ஒரு கதைசொல்லி விளக்குவதைக் கேட்டார். கின்டேவை அமெரிக்காவிற்கு கொண்டு வந்த தி லார்ட் லிகோனியர் என்ற கப்பலின் பதிவுகளையும் ஹேலி கண்டுபிடித்தார்.
செப்டம்பர் 29, 1967 அவருக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று. அவரது மூதாதையர் 200 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலிகளில் வந்த மேரிலாந்தின் அனாபோலிஸை வந்தடைந்தார். இப்போது அனாபோலிஸில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் அலெக்ஸ் குழந்தைகளுக்கு ஒரு கதையைப் படித்துக் காட்டுவதைக் காட்டுகிறது.
தொலைக்காட்சித் தொடர்
அதே ஆண்டில், இது 130 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட மிகவும் பிரபலமான தொலைக்காட்சி குறுந்தொடராக மாறியது.
1979-ம் ஆண்டில், ஏபிசி ’ரூட்ஸ்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்ஸ்’ (Roots: The Next Generations) என்ற குறுந்தொடரின் தொடர்ச்சியை உருவாக்கியது. இது குந்தா கிண்டேவின் சந்ததியினரின் கதையைத் தொடர்ந்தது. 2016-ம் ஆண்டில், குறுந்தொடரின் புதிய பதிப்பு ஹிஸ்டரி சேனலால் (History Channel) உருவாக்கப்பட்டது. இந்த ரீமேக்கில் ஹேலி கதாபாத்திரத்தில் 'மேட்ரிக்ஸ்’ (Matrix) புகழ் லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் (Laurence Fishburne) நடித்தார்.
விமர்சனங்கள்
அலெக்ஸ் ஹேலியின் புகழ்பெற்ற புத்தகமான 'ரூட்ஸ்’, கருத்துத் திருட்டு மற்றும் பதிப்புரிமை மீறலுக்காக இரண்டு வழக்குகளை எதிர்கொண்டது. அலெக்ஸ் மீது மார்கரெட் வாக்கர் (Margaret Walker) தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் ஹரோல்ட் கோர்லாண்டரின் (Harold Courlander) வழக்கு வெற்றி பெற்றது. கோர்லாண்டரின் 'தி அப்பிரிக்கன்’ (The African) புத்தகம் ஆப்பிரிக்க அடிமை வியாபாரிகளால் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு ஆப்பிரிக்க சிறுவனின் கதையைச் சொல்கிறது. அந்த புத்தகத்தின் சில பகுதிகள் தனது ’ரூட்ஸ்’ புத்தகத்தில் தோன்றியதாக அலெக்ஸ் ஹேலி ஒப்புக்கொண்டார். மேலும் 1978-ம் ஆண்டு, அவர் கோர்லாண்டருக்கு 650,000 டாலர்களை (இன்றைய மதிப்பில் சுமார் 3 மில்லியன் டாலருக்கு சமம்) செலுத்தி வழக்கைத் முடிவுக்கு கொண்டுவந்தார்.
ரூட்ஸில் ஹேலியின் ஆராய்ச்சி குறித்து சில வல்லுநர்கள் ”அவர் குறிப்பிட்ட காம்பியாவைச்சேர்ந்த குந்தா கிண்டே எனும் கதைசொல்லி உண்மையானவர் அல்ல. மேலும் குந்தா கிண்டேவின் கதை ஹேலியின் சொந்த கற்பனையிலிருந்து வந்திருக்கலாம். வர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் எழுதப்பட்ட பதிவுகள் உள்நாட்டுப் போர் முடியும் வரை ரூட்ஸ் கதையுடன் பொருந்தவில்லை. ஹேலியின் குடும்பக் கதையின் சில பகுதிகள் உண்மை. ஆனால் உண்மையான வம்சாவளி அவர் விவரித்ததிலிருந்து வேறுபட்டிருக்கலாம்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறந்த விற்பனையான எழுத்தாளராக இருந்தபோதிலும், அலெக்ஸ் ஹேலியும் அவரது படைப்புகளும் ஆப்பிரிக்க-அமெரிக்க இலக்கியத்தின் நார்டன் தொகுப்பில் (Norton Anthology of African-American Literature) சேர்க்கப்படவில்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹென்றி லூயிஸ் கேட்ஸ், ஜூனியர், இந்த விலக்கு சர்ச்சைகளால் அல்ல என்றும் ”அலெக்ஸ் உண்மையில் தனது மூதாதையர்கள் தோன்றிய கிராமத்தை கண்டுபிடித்திருப்பார் என்று நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம். ரூட்ஸ் வரலாற்றுப் புலமையைக் காட்டிலும் கற்பனையின் படைப்பு.”
பிற்கால வாழ்வு & இறப்பு
1980 களின் முற்பகுதியில், அலெக்ஸ் ஹேலி வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து எப்காட் மையத்திற்காக பூமத்திய ரேகை ஆப்பிரிக்கா பெவிலியனை உருவாக்கினார். எப்காட்டின் தொடக்க நாளின் போது அவர் சிபிஎஸ்-ல் தோன்றினார், தொகுப்பாளர் டேனி கேயுடன் திட்டங்கள் மற்றும் கருத்து கலையைக் காட்டினார். இருப்பினும், அரசியல் மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக பெவிலியன் கட்டப்படவில்லை.
1970 களின் பிற்பகுதியில், அலெக்ஸ் தனது குடும்பத்தின் மற்றொரு பகுதியைப் பற்றி ஒரு வரலாற்று நாவலை எழுதத் தொடங்கினார், இது அவரது பாட்டி ராணியை மையமாகக் கொண்டது. அவள் ஒரு கறுப்பின அடிமைக்கும் அவளுடைய வெள்ளை எஜமானனுக்கும் பிறந்த மகள். பிப்ரவரி 10, 1992 அன்று வாஷிங்டனின் சியாட்டிலில் மாரடைப்பால் இறக்கும் போது அலெக்ஸ் அந்த புத்தகத்தை முடிக்கவில்லை. அவர் டென்னசியின் ஹென்னிங்கில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
இறப்பதற்கு முன்பு, அலெக்ஸ் ஹேலி டேவிட் ஸ்டீவன்ஸை (David Stevens) நாவலை முடிக்கச் சொன்னார். இந்நூல் 1993-ம் ஆண்டு ’அலெக்ஸ் ஹேலியின் குயின்’ (Alex Haley's Queen) என்ற பெயரில் வெளியிடப்பட்டது மற்றும் அதே ஆண்டில் ஒரு குறுந்தொடராகவும் மாறியது.
அலெக்ஸ் ஹேலி தனது பிற்கால ஆண்டுகளில், டென்னசி மாகாணத்தில் உள்ள கிளின்டன் எனும் ஊரில் ஒரு சிறிய பண்ணையை வாங்கினார். அவரது மரணத்திற்குப் பிறகு குழந்தைகள் பாதுகாப்பு நிதி அந்த நிலத்தை வாங்கி அதற்கு அலெக்ஸ் ஹேலி பண்ணை என்று பெயரிட்டது. அவர்கள் அதை ஒரு பயிற்சி மையமாகவும் பயன்படுத்துகிறார்கள். கட்டிடக் கலைஞர் 'மாயா லின்’ (Maya Lin) பண்ணையில் ஒரு பாரம்பரிய களஞ்சியத்தை வடிவமைத்தார். இப்போது அந்த அமைப்பின் நூலகமாக செயல்பட்டு வருகிறது.
உசாத்துணை
- Alex Haley Taught America About Race and a Young Man How to Write, The New York times
- United States Coast Guard Auxiliary, blog about Alex Haley
அடிக்குறிப்புகள்
- ↑ ஜாக் ரூபி அமெரிக்க அதிபர் கென்னடியைச் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்ட்வால்டை சுட்டுக் கொன்றவர். மெல்வின் பெல்லி ஜாக் ரூபிக்காக வாதாடிய வழக்கறிஞர்.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.